Saturday, October 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கண்ணார் கழல்காட்டி

           

திருவாசகம் - திரு அம்மானை  -   கண்ணார் கழல்காட்டி




விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்



மிக எளிமையான, இனிமையான பாடல். 


"விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை"

வேதியன் என்றால் உயர்ந்தவன்,சிறந்தவன் என்று பொருள். விண்ணில் உள்ள அனைத்து தேவர்களையும் விட உயர்வானவன். 


"மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்"


மாண்பு என்றால் பெருமை, சிறப்பு, மதிப்பு, மரியாதை.  மாண்புமிகு மந்திரி என்று சொல்கிறோம் அல்லவா? சரி, "மன்னவர்க்கு மாண்பு" என்றால் என்ன? அரசர்களுக்கு மதிப்பைத் தருவது எது? அவர்களுடைய கருணை, குடிகள்பால் அவர்கள் கொண்ட அக்கறை, நடுநிலை, குடிகளை பாதுகாத்தல் போன்ற நற்குணங்கள் அவர்களுக்கு சிறப்புத் தரும். அத்தகைய சிறப்பாக இருப்பவன் இறைவன். நற்குணங்களின் உறைவிடம் அவன். 


"தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்"

தண்மை என்றால் குளிர்ச்சி. இனிமையான தமிழை அளித்த சிறந்த பாண்டி நாடு. ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அந்த சங்கத்தில் சிவ பெருமானும், முருகனும் இருந்தார்கள். அவர்கள் இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்பது புராணம். எனவே "தமிழ் அளிக்கும்" தண்பாண்டி நாட்டை உடையவன். 


"பெண்ணாளும் பாகனைப்"


தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபு என்று ஒன்று உண்டு.....





(pl click the above link to continue reading)



இரண்டு பெயர் பொருள்களை வேற்றுமைப் படுத்துவது வேற்றுமை உருபு. மேலும், அந்த பெயர் பொருகளின் தொடர்பு, செயல்பாடு இவற்றையும் வேற்றுமைப் படுத்தும். 



எப்படி என்று பார்ப்போம். 


மரம் அறுத்தான் என்று சொல்லலாம். அதில் ஒரு வேற்றுமை உருபு தொக்கிக் (மறைந்து) இருக்கிறது. .

மரத்தை அறுத்தான் என்று நாம் உணர்ந்து கொள்கிறோம். இதில் "ஐ" என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. மரம் என்ற பெயர் சொல்லுக்கும், அறுத்தவன் என்ற பெயர் சொல்லுக்கும் இடையில் உள்ள அறுத்தல் என்ற வினையின் மூலம் வேறுபடுத்திக் காட்டுகிறது. 


"கண் கண்டதே காட்சி என்று இருக்கக் கூடாது. எதையும் தீர விசாரிக்க வேண்டும்"   என்று சொல்லும் போது "கண்ணைக் கண்டதே" என்று சொல்லுவது பொருந்தாது 


"கண்ணால் கண்டதே காட்சி" என்று கூறினால் பொருள் சரியாக இருக்கும். இங்கே "ஆல்" என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. சில சமயம் எந்த வேற்றுமை உருபைப் போடுவது என்ன்று சந்தேகம் வரும், உருபு மாறினால் பொருள் மாறிவிடும். 




இங்கே, "பெண்ணாளும் பாகனை" 


பெண்ணை ஆளும் பாகனை என்று இரண்டாம் வேற்றுமை உருபைப் போட்டால் என்றால் பார்வதியை சிவன் ஆளுகிறான் என்று பொருள் வரும். 



"பெண்ணால் ஆளப்படும் பாகன்" என்று ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைப் போட்டால் பார்வதியால் ஆளப்படும் சிவன் என்ற பொருள் வரும். 



இந்தக் குழப்பம் தான் கவிதையின் உயிர். படிப்பவன் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


முன்பு ஒரு திருஅம்மானைப் பாடலில் "பண் சுமந்த பாடல்"  என்று வந்தது. 



'பண்' ஐ சுமந்த பாடலா,'பண்'னால் சுமக்கப்பட்ட பாடலா? இரண்டாம் வேற்றுமை உருபா, மூன்றாம் வேற்றுமை உருபா? 




இலக்கணம் அறிந்தால் இலக்கியத்தை மேலும் சுவைக்க முடியும். 



இராகம் தெரிந்தால் பாடலை மேலும் இரசிக்க முடிவது போல 



"பேணு பெருந்துறையிற்" - பேணுதல் என்றால் போற்றுதல், சிறப்பித்தல். 



"தந்தை தாய் பேண்" - ஆத்திசூடி 


பெண் என்ற சொல்லே பேண் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. பெருமைக்கு உரியவள், போற்றுதலுக்கு உரியவள் என்று அர்த்தம். 



"பேணு பெருந்துறையிற்" - சிறப்புக்கு உரிய திருப் பெருந்துறை என்ற திருத்தலத்தில் 



கண்ணார் கழல்காட்டி = காண்பதற்கு அழகான திருவடிகளை காட்டி 


பக்தி இலக்கியத்தில் எங்கெல்லாம் திருவடி என்று வருகிறதோ அங்கெல்லாம் அது ஞானத்தை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இரண்டு திருவடிகள் - பர ஞானம், அபர ஞானம் என்ற இரண்டு ஞானங்கள். 


கழல் காட்டி ஆட்கொண்டது எவ்வாறு என்றால் ஞானத்தைத் தந்து ஆட்கொள்வது. 



நாயேனை ஆட்கொண்ட = கீழான என்னை ஆட்கொண்ட 



மணிவாசகர் அடிக்கடி தன்னை நாய் என்று சொல்லிக் கொள்வார். நாய் நன்றியுள்ள, அன்புள்ள பிராணிதானே. அதை ஏன் கீழாகச் சொல்ல வேண்டும்?



நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  எவ்வளவுதான் அதை சீராட்டி, பாராட்டி வளர்த்தாலும், என்றேனும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் அது கண்டதையும் தின்றுவிடும். ஒரு தயக்கம் இல்லாமல், அதைத் தின்னும். 


எனக்கு பாலும், சோறும் தருகிறார்களே, இதைப் போய் தின்னலாமா என்று நினைக்காது.   


மனிதரிலும் பலர் அந்த மாதிரித் தான். எவ்வளவு உயர்ந்த நூல்களைப் படித்தாலும், "அதெல்லாம் நடை முறைக்கு சரி வராது "  என்று தள்ளிவிட்டு தகாதன செய்யக் கிளம்பி விடுவார்கள். 


அது நாய்க் குணம். 



அண்ணா மலையானைப் = அண்ணாமலையில் உள்ளவனை 


பாடுதுங்காண் அம்மானாய் = பாடுவோம் அம்மானை 



திருவாசகம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நூல் அல்ல. 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 


)


No comments:

Post a Comment