Pages

Saturday, February 27, 2021

திருக்குறள் - எப்படி பேச வேண்டும்

 திருக்குறள் - எப்படி பேச வேண்டும் 

அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், அல்லது வேறு எங்காவது ஏதாவது பதவி வகித்தால், அங்கே எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

இது மந்திரிகளுக்கு சொன்னது. இருந்தும், நாம் ஒருவருக்கு யோசனை சொல்லும் இடத்தில் இருந்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்தால்,  நாமும் மந்திரி மாதிரிதான். இது நமக்கும் பொருந்தும். 

நமக்கு மட்டும் அல்ல, நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். அவர்களுக்கும் சொல்லித் தாருங்கள். 


பாடல் 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்


பொருள்

Click the following link to continue

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_27.html

வேட்பன = (அரசன்/மேலதிகாரி ) விரும்பியவற்றை 

சொல்லி = சொல்லி 

வினையில = வினை இல்லாதவற்றை 

எஞ்ஞான்றும் = எப்போதும் 

கேட்பினும் = கேட்டால் கூட 

சொல்லா விடல் = சொல்லாமல் விட்டு விட வேண்டும் 


மேலதிகாரி விரும்பியதை சொல்லணும், விரும்பாததை சொல்லக் கூடாது...பொதுவா  ஜால்ரா அடிக்கணும் அப்படின்னு வள்ளுவர் சொல்லுகிறாரா?  இல்லை. 


இதெல்லாம் பரிமேலே அழகர் உரை இல்லாமல் நம்மால் சத்தியமாய் புரிந்து கொள்ள முடியாது. 


எப்படி பொருள் எடுக்கிறார் என்று பாருங்கள். 


வினையில என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறார்.  வினை என்றால் வேலை, தொழில், முயற்சி என்று பொருள். வினையால் விளைவது பலன், ஒரு நன்மை. வினையில என்றால் பலன் இல்லாத என்று பொருள் கொள்கிறார். பலன் இல்லாதவற்றை  பேசக் கூடாது. 


சரி.  


அடுத்தது, "கேட்பினும்" என்ற சொல்லை எடுக்கிறார். சில சமயம் மேல் அதிகாரி நம்மைக் கூப்பிட்டு சும்மா பேசுவார். டீ குடித்துக் கொண்டோ அல்லது மாலை வேளையில் வேறு ஏதாவது அருந்திக் கொண்டோ பேச்சு வரும். நம்மோடு பேச விரும்புவார். அவரே விரும்பினாலும்  பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது.  மேல் அதிகாரி கேட்டால் கூட பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது. 


அடுத்தது, "எஞ்ஞான்றும்": எப்பவாவது, கொஞ்சம் ஜாலியாக இருக்கும் போது அரட்டை அடிக்கலாமா என்றால் கூடவே கூடாது என்கிறார். ஒரு போதும் அப்படி பேசக் கூடாது என்கிறார். 


"கேட்பினும்"...கேட்டால் கூட பலன் தராதவற்றைப் பற்றி பேசக் கூடாது. அதற்கு எதிர் மறையாக, கேட்காவிட்டால் கூட பலன் தருபவற்றைப் பற்றி பேச வேண்டும். அரசனோ, அதிகாரியோ கேட்காவிட்டால் கூட, பலன் தரும் என்றால் அதைப் பற்றி பேச வேண்டும். சொல்ல வேண்டும். "என் கிட்ட கேட்டா சொல்லுவேன்..."என்று சும்மா இருக்கக் கூடாது. 


அதிகாரிகள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் பலன் உள்ளவற்றை அவர்களிடம் சொல்ல வேண்டும். 


அதிகாரிகள் கேட்டால் கூட, பலன் இல்லாதவற்றை சொல்லக் கூடாது. 


இதை எப்போதும் பழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 


தேவை இல்லாமல் அரட்டை அடிப்பது, கோள் சொல்லுவது, போட்டுக் கொடுப்பது, புரணி பேசுவது, இட்டு கட்டி சொல்லுவது , பொய் சொல்லுவது என்பனவற்றை  விட்டு விட வேண்டும். 


பலன் இருந்தால் பேசு. இல்லை என்றால் மௌனமே சிறந்தது. 



Friday, February 26, 2021

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?


பெண்களுக்கு உரிய குணங்களில் மடம் என்று ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன ? 


மடம் என்றால் மடத்தனமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. 


யோசித்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது என்ன என்றால், "தன் பெருமை, தன் அருமை, தன் வலிமை தான் அறியாமல் இருப்பது" தான் மடமை என்று தோன்றுகிறது. 


கம்ப இராமயணத்தில் ஒரு உதாரணம் பார்ப்போம். 


சீதையின் ஆற்றல் அளவற்றதாக இருக்கிறது.


இராமனின் ஆற்றலை விட பலப் பல மடங்கு பெரியது சீதையின் ஆற்றல் என்று தெரிகிறது. 


இலங்கைக்குப் போய், இராவனனனோடு சண்டையிட்டு, அவனை கொல்வதற்கு இராமன் படாத பாடு படுகிறான். வானரங்கள் துணை வேண்டி இருந்தது. கொஞ்சம் தேவர்களும் உதவி செய்தார்கள். 


இத்துனூண்டு இலங்கையை அழிக்க இந்தப் பாடு. 


சீதை சொல்கிறாள் "எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே, அத்தனை உலகையும் என் சொல்லினால் சுடுவேன் என்கிறாள். 


அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் தருகிறாள். என்றும் இறவா வரம். எந்தக் கடவுளை வேண்டி எவ்வளவு தவம் செய்தாலும், இறவா வரம் மட்டும் தர மாட்டார்கள். சீதையோ, கேட்காமலேயே இந்த பிடி என்று சாகா வரம் தருகிறாள். 


அவ்வளவு ஆற்றல். 

அப்பேற்பட்ட ஆற்றல் உள்ள சீதை, துன்பம் தாளாமல் தூக்குப் போட்டு சாகப் போகிறாள்.  உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட சீதை, இராவணனை அழித்து தன் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். 


என்ன என்று சொல்லுவது? 


தன் வலிமை தனக்குத் தெரியாமல் அடங்கிக் கிடப்பது தான் பெண்ணின் மடம் என்று சொல்கிறார்களோ ? 


சீதை தற்கொலைக்கு முயன்ற அந்தப் பாடல் 


பாடல் 


எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ‘ஈங்கு

உய்திறம் இல்லை! ‘என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு

கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை

பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.


பொருள் 



click the above link to continue reading


எய்தினள் = சென்று அடைந்தாள் 

பின்னும் = மேலும் 

எண்ணாத எண்ணி  = பலவற்றையும் எண்ணி 

‘ஈங்கு = இங்கு 

உய்திறம் இல்லை!  = வாழ வேறு வழி இல்லை 

‘என்று = என்று 

 ஒருப்பட்டு  = முடிவு செய்து 

ஆங்கு ஒரு = அங்குள்ள ஒரு 

கொய்தளிர்க் = தளிர் விட்ட 

கொம்பிடைக் = கொம்பின் மேல் 

கொடி இட்டே= படர்ந்து கிடந்த ஒரு கொடியில் 

தலை பெய்திடும் =  தலையை சேர்த்திடும் 

ஏல்வையில் = நேரத்தில் 

 தவத்தின் பெற்றியால். = அவள் செய்த தவத்தின் காரணமாக 



சீதை உலகை என் சொல்லால் சுடுவேன் என்ற பாடல் 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள் 

அல்லல் = துன்பம் (தரும்)

மாக்கள் = விலங்குகள் (மனிதப் பண்பு அற்றவர்கள்)

இலங்கை அது ஆகுமோ? = (நிறைந்த) இந்த இலங்கை மட்டும் என்ன

எல்லை நீத்த = எல்லையே இல்லாத

உலகங்கள் யாவும் = அனைத்து உலகங்களையும்

என் சொல்லினால் = என் சொல்லினால்

சுடுவேன்; = சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படி செய்தால், அது

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று வீசினேன்


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்த பாடல்  


பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த 

வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின், 
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் 
ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 



பொருள்

பாழிய = வீரம் பொருந்திய

பணைத் தோள் வீர! = பனை மரம் போல் உறுதியான தோள்களை கொண்ட வீரனே

துணை இலேன் = ஒரு துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருந்தேன்

பரிவு தீர்த்த = வருத்தம் தீர்த்த
 
வாழிய வள்ளலே! = வாழிய வள்ளலே (உயிர் கொடுத்த வள்ளல்)

யான் = நான்

மறு இலா மனத்தேன்என்னின் = கறை படியாத மனம் உள்ளவள் எனின் 
 
ஊழி = ஊழிக் காலம்

ஓர் பகலாய் ஓதும் = ஒரு பகலாய் இருக்கும்

யாண்டு எலாம் = இங்கு உள்ள எல்லாம்

உலகம் ஏழும் ஏழும் = ஏழேழு உலகமும்

வீவுற்ற ஞான்றும் = வீழுகின்ற போதும்

இன்று என இருத்தி' என்றாள் = இன்று போல் இருப்பாய் என்று வாழ்த்தினாள்

எழுபது என்பது வயது ஆகும் போது உடம்பிற்கு அத்தனை நோயும் வந்து விடுகிறது....கற்ப கோடி ஆண்டு வாழ்ந்தால் உடம்பு எப்படி இருக்கும்...பல் விழுந்து, தோல் சுருங்கி, கண் பார்வை இழந்து, ஞாபகம் அற்றுப் போய்...அது ஒரு வரமா ? எனவே சீதை "இன்று என இருத்தி" என்றாள்.  இன்று போல் ஆரோக்கியமாக இரு என்று வாழ்த்தினாள்.

அப்படித்தான் கண்ணகியும். 

மதுரையை எரித்த கண்ணகி, மாதவி பின்னால் போன கோவலனை தடுத்தாள் இல்லை. 

மென்மையான அந்த பெண்மைக்கு பின்னால் அபரிதமான ஆற்றல் இருக்கிறது. அது தெரியாமல் இருப்பது தான் பெண்மையின் மேன்மையோ ?




Friday, February 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து  


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


அன்பு செய்வதைத் தவிர இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எதன் மீதாவது, யார் மீதாவது அன்பு செய்து கொண்டே இருப்பது ஒன்று தான் வேலை. அன்பு செய்வதை விட்டு விட்டு, பின் வேறு என்ன செய்வது? அன்பு இல்லாவிட்டால், எதற்கு எதையும் செய்ய வேண்டும்.


நமக்கு மட்டும் அல்ல, அந்த இறைவனுக்கும் அது தான் வேலை. தன்னைத் தானே அன்பு செய்து கொள்ள முடியுமா? இப்படி பல்லாயிரம் உயிர்களைப் படைத்து அவை ஒவ்வொன்றின் உள்ளிருந்தும் அன்பை கொடுத்தும், பெற்றும் இடை விடாமால் அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 


அன்பு என்பது கொடுப்பது மட்டும் அல்ல, பெறுவது மட்டும் அல்ல, கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் காத்துக் கிடப்பதும், ஏங்கி நிற்பதும், கிடைக்காமல் தவிப்பதும் எல்லாம் அன்பு தான். 


தெரியாமல் அன்பு செய்வது, மற்றவருக்குத் தெரியாமல் அவர் மனதை திருடிக் கொள்வது, மனதை பறி கொடுத்து நிற்பது..எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான். 


வைகுண்டத்தில் இருக்க வேண்டியதுதானே. இங்கு எதற்கு வர வேண்டும்? அன்பு வேண்டித்தான். 

அன்பு என்பது என்ன என்றே புரியாத மனங்களும் இருக்கின்றன. ஒரு கண் பார்வையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடலில், அன்பு கொட்டிக் கிடக்கும். அறிந்து கொள்ளும் மனம் இருந்தால், இங்கே அன்பின்றி வேறு ஒன்றும் இல்லை என்று தெரியும். 


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_19.html


click the above link to continue reading.


வெள்ளநீர் = வெள்ளம் போல் நீர் 

பரந்து  = விரிந்து 

பாயும்  = பாய்கின்ற 

விரிபொழி லரங்கந் தன்னுள் = மலர்கள் விரிந்த, விரிந்து கொண்டு இருக்கின்ற, இனியும் விரியும் படி உள்ள சோலைகளில் 


கள்ளனார் = கள்வன்.  அடியவர்களின் மனங்களை அவர்கள் அனுமதி இல்லாமலேயே திருடிக் கொள்ளும் கள்ளன் 

கிடந்த வாறும்  = சயனத்தில் இருந்தவாறும் 

கமலநன் முகமும் கண்டு = தாமரை போன்ற முகத்தை கண்டும் 


உள்ளமே = உன்னுடைய உள்ளமே 

வலியைப் = கடினமானது

போலும் = போலும் 

ஒருவனென் றுணர மாட்டாய் = அவன் ஒருவனே என்று உணர மாட்டாய் 

கள்ளமே = கள்ளத்தனமாக 

காதல் செய்துன் = காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின் றாயே. = உன் வாழ்வை கள்ளத்தனமாக கழிக்கின்றாயே 


என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 


கள்ளமே காதல் செய்து = எந்த காதலும் உண்மை கிடையாது. இன்றிருக்கும், நாளை போய் விடும். 


தவறானவற்றின் மேல் காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின்றாயே = வீணாக கழிக்கின்றாயே 


திரு ஞான சம்மந்தர் சொல்லுவார் "என் உள்ளம் கவர் கள்வன்" என்று 


"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா, யார் கொலோ சதுரர்"...மணி வாசகர் 


அன்பே சிவம். 




Wednesday, February 17, 2021

திருக்குறள் - சார்பு

திருக்குறள் - சார்பு 


பாடல் 


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:359)


பரிமேலழகர் உரை: சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.

(ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.)



Friday, February 12, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத் தூய்மை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத்  தூய்மை 


பெரியாழ்வார் பாசுரம்.


தமிழிலே "பழக்க வழக்கம்" என்று ஒரு சொற்றொடர் உண்டு. 


ஒன்றை திரும்ப திரும்பச் செய்வதை பழக்கமாகக் கொண்டால், அது வழக்கமாகி விடும். அப்புறம் நாம் நினைகாமாலையே அதை செய்து விடுவோம். 


காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது மாதிரி. தன்னிச்சையாக நிகழும். 


பெரியாழ்வார் சொல்கிறார் 


"எனக்கு வாக்கு சுத்தம் கிடையாது. சொல்லில் வரும் குற்றங்கள் பல என்னிடம் உண்டு. இப்படி குற்றமுள்ள நாவால் உன்னை எவ்வாறு நான் போற்றுவேன். சரி, போற்றாமல் விட்டு விடலாம் என்றால், இந்த நாக்கு உன்னைப் போற்றி பழகி விட்டது. நான் சொன்னாலும் அது கேட்பது இல்லை. என் நாக்கு என் வசம் இல்லை.  நான் உன்னைப் போற்றி சொல்கின்ற சொற்களை ஏதோ காகம் கரைந்தது போல என்று எடுத்துக் கொள்ளேன்" என்கிறார். 



பாடல் 


வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_12.html


(click the above link to continue reading)


வாக்குத் = வாக்கில், பேச்சில் 


தூய்மை  = தூய்மை 


யிலாமையி னாலே = இல்லாததால் 


மாதவா  = மாதவா 


உன்னை = உன்னை 


வாய்க் கொள்ள மாட்டேன் = என் வாயால் சொல்ல மாட்டேன் 


நாக்கு = என்னுடைய  நாக்கு 


 நின்னையல் லால் = உன்னைத் தவிர 


அறி யாது = வேறு ஒன்றை அறியாது 


நான தஞ்சுவன் = நான் அதை நினைத்து அஞ்சுகிறேன் 


என் வசமன்று = என் நாக்கு என் வசம் அன்று 


மூர்க்குப் = மூர்கனைப் போல 


பேசுகின் றானிவ னென்று = பேசுகிறான் இவன் என்று 


முனிவா யேலும் = நீ என் மேல் கோபப் பட்டாலும் 


என்  = என்னுடைய 


நாவினுக்கு = நாவினை 


ஆற்றேன் = என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை 


காக்கை வாயிலும்  = காகத்தின் வாயில் இருந்து  வரும் சப்தங்களை கூட 


கட்டுரை கொள்வர் =உயர்ந்ததென்று கொள்வார்கள் 


காரணா = காரணம் என்ன என்றால், ஏன் என்றால் , 


கரு ளக்கொடி யானே. = கருடக் கொடியை கொண்டவனே 


"என் சொல் அவமெனினும் நின் நாமங்கள் தோத்திரமே " என்பார் அபிராமி பட்டர். 



"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"  என்பார் சுந்தரர். 



இந்த இரண்டையும் சொல்லாமல் விட்டு விடலாம்தான். ஆனால், சிலர், பாசுரத்தை விட்டு விட்டு, இதை கமெண்ட் ல் போடுவார்கள். அதைத் தவிர்க்கவே, சுட்டிக் காட்டினேன். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். 


இறைவனின் நாமத்தை சொன்ன வாயால் மற்ற கீழான வார்த்தைகளை பேசக் கூடாது.  இறைவன் நாமத்தை சொல்ல வேண்டுமா, வாக்கில் தூய்மை வேண்டும். 


வாக்குத் தூய்மை என்றால் என்ன?


- பொய் சொல்லுதல் 

- புறம் சொல்லுதல் 

- கடும் சொல் 

- பயனற்ற சொற்கள் 


எங்கே ஒரு நாள் முயன்று பாருங்கள்.  இந்த நான்கு குற்றமும் சொல்லில் வராமால் பேசிப் பாருங்கள் பார்ப்போம். முதல் மூன்றைத் தவிர்த்தால் கூட, நான்காவதை தவிர்கவே முடியாது. பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? 


பயனுள்ள சொற்கள் என்றால் மற்றவருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் சொற்கள் என்பார் பரிமேல் அழகர். 


ஒரு பக்கம் இறைவன் நாமம் நாவில். அதே நாவில், ஊரில் உள்ளவர்களை ஏசுவது, பொய் சொல்லுவது, வெட்டி பேச்சு பேசுவது. அது கூடாது என்கிறார் பெரியாழ்வார். 


"அவருக்கென்ன சொல்லுவார்...நடைமுறை னு ஒண்ணு இருக்குல்ல ...."


நாம நம்ம வேலையை பார்ப்போம். 

Wednesday, February 10, 2021

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு


சிலர் எவ்வளவோ படிப்பார்கள். கேட்பார்கள். இருந்தாலும் வாழ்வில் ஒரு மாற்றமும் இருக்காது. கேட்டால், " அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்பார்கள்". நடைமுறையில் ஒத்து வருமா வராதா என்பது நடைமுறையில் கடை பிடித்தால்தானே தெரியும். ஆரம்பிக்கும் முன்னாலேயே அது சரி வராது என்றால் எப்படி?  


எதுவுமே நடைமுறையில் கடினம்தான். ஆனால், அதை செயல்படுத்தத் தொடங்கினால் அதில் ஒரு பற்றும் பிடிப்பும் வந்து விடும்.  பின் அதை விடுவது கடினமாகி விடும். 


ஆனால், சிலர் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் ஒன்றும் நடக்காது. தண்ணீரில் ஒரு கல் எவ்வ்ளவு நாள் மூழ்கிக் கிடந்தாலும், அது மென்மையாகாது. பாசி பிடிக்கும். ஆனால் மென்மையாகாது. எவ்வளவு படித்தாலும், கீழ் மக்கள் மனம் மாறவே மாறாது. 


மணிவாசகர் தன்னை நாய் என்று குறிப்பிட்டுக் கொள்வார். காரணம், நாயை எவ்வளவுதான்  குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு, அழகு படுத்தி வைத்தாலும், அதன் மனம் என்னவோ வேறு இடத்தில்தான். 


பாடல் 

 வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு

மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்

வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்

கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_10.html


click to contitnue

 வைகலு  = ஒவ்வொவரு நாளும் 

நீருட் கிடப்பினும் = நீரின் உள் கிடப்பினும் 

கல்லிற்கு = பாறாங் கல்லுக்கு 

மெல்லென்றல் = மென்மையாக மாறுவது 

சால அரிதாகும் = மிகவும் கடினமான செயல் 

அஃதேபோல் = அதே போல 

வைகலும் = தினமும் 

நல்லறம் = நல்ல அறங்களை 

கேட்பினுங் = கேட்டாலும் 

கீழ்கட்குக் = கீழ் மக்களுக்கு 

கல்லினும் = கல்லை விட 

வல்லென்னும் நெஞ்சு. = வன்மையானது மனது 


யார் கீழ்மக்கள் என்றால், நல்ல அறங்களை படித்தும் கேட்டும், அதன் படி நடக்காமல்  இருப்பவர்கள். 




Sunday, February 7, 2021

திருக்குறள் - நெடிய கழியும் இரா

 திருக்குறள் - நெடிய கழியும் இரா 

அறம் பொருளில் உச்சம் தொட்ட வள்ளுவர், இன்பத்துப் பாலிலும் இவ்வளவு மென்மையாக, நுணுக்கமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் குறள்களை எழுதி இருப்பது ஆச்சரியம். 


இன்பத்துப் பால் என்பது கத்தியின் மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் பிசகினாலும் கையை அறுத்து விடும். ஆபாசத்தின் எல்லையை தொட்டு விடும். 


மிக எச்சரிக்கையாக, அதே சமயம் அந்த உணர்சிகளின் அழகு குன்றாமல் எழுத வேண்டும். 


காதலர் பிரிந்து போய் விட்டார். அவளுக்கு அவன் மேல் மிகுந்த கோபம். அவனைக் "கொடியவன்" என்றும் அவன் செய்த செயல் "கொடுமை" என்று கடுமையாக குறிப்பிடுகிறாள்.  கொடுமையான அவன் செய்த கொடுமையை விட இப்படி ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறதே இந்த இரவு, அது அவற்றை விட கொடுமையானது என்கிறாள். 


பாடல் 


கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_63.html


(click the above link to continue reading)


கொடியார் = கொடுமை செய்யும் அவர் 

கொடுமையின் = அவர் செய்த கொடுமையை விட 

தாம்கொடிய = இவை கொடியவை 

இந்நாள் = இப்போதெல்லாம் 

நெடிய கழியும் இரா  = நீண்டு பின் விலகும் இந்த இரவு. 


இதில் பரிமேல் அழகர் செய்யும் நுணுக்கம் மிகச் சிறப்பானது. 


கொடியார் - ஏன் அவன் கொடியவன். அவளுடைய காதலன் நல்லவன் தான். அன்பு உள்ளவன் தான். இருந்தாலும், தன்னை விட்டு பிரிந்து போனதால் அவனைக் கொடியவன் என்கிறாள். 


கொடுமை - அவன் என்ன கொடுமை செய்தான். பிரிந்து சென்றது கொடுமை இல்லை. பிரிந்த பின் உடனே திரும்பி வராதது அவன் செய்து கொண்டிருக்கும் கொடுமை. 


இந்நாள் = இப்போதெல்லாம். ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும். 

நெடிய கழியும் இரா = இரவு நீண்டு கொண்டே போவது அவளுக்கு எப்படி தெரிந்தது?  தூங்காமல் விழித்துக் கொண்டு இருக்கிறாள். எல்லோரும் தூங்கி விட்டார்கள். பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லை. நேரம் நகர மாட்டேன் என்கிறது. எப்படா விடியும் என்று காத்து இருக்கிறாள். விடிய மாட்டேன் என்கிறது. கொடுமையாக இருக்கிறது. 


இப்போது நீண்டு கொண்டே போகிறது என்றால் முன்பு அது அப்படி அல்ல என்று தானே அர்த்தம்?


காதலன் உடன் இருக்கும் போது, இந்த இரவு தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. அப்படி சட்டென்று முடிந்து விடும். அப்போது எல்லாம் அது நீண்ட இரவாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நெடிய கழியும் இரா. 


"நெடிய கழியும் இரா" என்ற அந்த சொற்றொடரில் எவ்வளவு ஏக்கம், தனிமை, தவிப்பு, எல்லாம் தெரிகிறது....




ஆசாரக் கோவை - உடை உடுத்தல்

 ஆசாரக் கோவை - உடை உடுத்தல் 


நமது அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். 

எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன. இதைப் படித்து விட்டு, இதோடு நின்று விடக் கூடாது. அகத் தூய்மை பற்றி சிந்திக்க வேண்டும். 


உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. 

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பண்பாடு, கலாசாரம். 


Bed coffee அவர்கள் கலாசாரம். எழுந்து பல் கூட விளக்காமல் காப்பி குடிப்பது 

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம். நல்ல துணியை கிழித்து, அழுக்காகி, துவைக்காமல் நாள் கணக்கில், மாதக் கணக்கில் உடுப்பது அவர்கள் பாரம்பரியம். ஜீன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கங்கே கிழிந்து இருக்கும், இதில் துப்பாகியால் சுட்டு ஓட்டை விழுந்த ஜீன்ஸ் என்றால் மதிப்பு கூட. 


எது சரி, எது தவறு என்பதல்ல நோக்கம். நாம் எதை விட்டு விட்டு எதை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம். 


நம் பண்பாட்டினை அவர்களுக்கு சொல்லித் தருவதை விட்டு விட்டு, அவர்கள் செய்வதை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம். 


எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. 


"ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்" 


பாடல் 

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_7.html


(click the above link to continue reading)


உடுத்தலால் = உடை உடுக்காமல் 

நீராடார் = குளிக்க மாட்டார்கள் 

ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள். அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உண்பார்கள். 

உடுத்தாடை = உடுத்த ஆடையை 

நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள் 

விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள் 

ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும் 

அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை 


சில ஆசாரங்களுக்கு காரணம் தெரியவில்லை. அதற்காக அதை விட்டு விடுவதா அல்லது அவற்றை பின்பற்றிக் கொண்டே அதற்கான காரணத்தை தேடுவதா? 


யோசிப்போம். 



Saturday, February 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி 


நாம் கடவுள் மேல் அன்பு செய்வது ஒரு புறம் இருக்கட்டும். 

கடவுள் யார் மேல் அன்பு செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?


நல்ல பணக்காரன், படிப்பு அறிவு உள்ளவன், உயர்ந்த குலத்தில் பிறந்தவன், ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பவன் என்று தேர்ந்து எடுத்து அவர்கள் மேல் அன்பு செய்வானோ என்றால் இல்லை என்கிறார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார். 


இறைவன் யார் மேல் பிரியமாக இருப்பான் என்றால், அவன் மேல் யார் அன்போடு இருக்கிறார்களோ அவர்கள் மேல் அவனும் அன்போடு இருப்பான். அவ்வளாவு தான். இறைவனுக்கு தெரிந்தது எல்லாம் அன்பு ஒன்று தான். குலம், கோத்திரம், ஜாதி, மதம், பணம், அறிவு இதெல்லாம் இறைவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. 


அன்பு ஒன்று அவன் அறிந்து மொழி. 


பாடல் 


அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post.html


(plese click the above link to continue reading)


அடிமையில் = தொண்டு செய்வதில் 

குடிமை யில்லா = உயர் குடியில் பிறக்காத 

அயல் = வேறானா 

சதுப் பேதி மாரில்  = நான்கு வேதங்களையும் கற்று அறிந்த வேதியர்களை விடவும் 

குடிமையில் = குடிப்பிறப்பில் 

கடைமை பட்ட = கீழான 

குக்கரில் பிறப்ப ரேலும் = குடும்பத்தில் பிறந்தாலும் 

முடியினில் துளபம் = தலையில் துளசி மாலையை 

வைத்தாய் = வைத்தவனே 

மொய்கழற் கன்பு செய்யும் = உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யும் 

அடியரை யுகத்தி போலும் = அடியவர்கள் மேல் ஆர்வம் (உகத்தி) போலும் 

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


பெருமாளுக்கு பேதம் இல்லை. 

எவ்வளவு பாராயணம் பண்ணினாலும், எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் ஒன்றும் பயன் இல்லை.