Sunday, February 7, 2021

திருக்குறள் - நெடிய கழியும் இரா

 திருக்குறள் - நெடிய கழியும் இரா 

அறம் பொருளில் உச்சம் தொட்ட வள்ளுவர், இன்பத்துப் பாலிலும் இவ்வளவு மென்மையாக, நுணுக்கமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் குறள்களை எழுதி இருப்பது ஆச்சரியம். 


இன்பத்துப் பால் என்பது கத்தியின் மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் பிசகினாலும் கையை அறுத்து விடும். ஆபாசத்தின் எல்லையை தொட்டு விடும். 


மிக எச்சரிக்கையாக, அதே சமயம் அந்த உணர்சிகளின் அழகு குன்றாமல் எழுத வேண்டும். 


காதலர் பிரிந்து போய் விட்டார். அவளுக்கு அவன் மேல் மிகுந்த கோபம். அவனைக் "கொடியவன்" என்றும் அவன் செய்த செயல் "கொடுமை" என்று கடுமையாக குறிப்பிடுகிறாள்.  கொடுமையான அவன் செய்த கொடுமையை விட இப்படி ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறதே இந்த இரவு, அது அவற்றை விட கொடுமையானது என்கிறாள். 


பாடல் 


கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_63.html


(click the above link to continue reading)


கொடியார் = கொடுமை செய்யும் அவர் 

கொடுமையின் = அவர் செய்த கொடுமையை விட 

தாம்கொடிய = இவை கொடியவை 

இந்நாள் = இப்போதெல்லாம் 

நெடிய கழியும் இரா  = நீண்டு பின் விலகும் இந்த இரவு. 


இதில் பரிமேல் அழகர் செய்யும் நுணுக்கம் மிகச் சிறப்பானது. 


கொடியார் - ஏன் அவன் கொடியவன். அவளுடைய காதலன் நல்லவன் தான். அன்பு உள்ளவன் தான். இருந்தாலும், தன்னை விட்டு பிரிந்து போனதால் அவனைக் கொடியவன் என்கிறாள். 


கொடுமை - அவன் என்ன கொடுமை செய்தான். பிரிந்து சென்றது கொடுமை இல்லை. பிரிந்த பின் உடனே திரும்பி வராதது அவன் செய்து கொண்டிருக்கும் கொடுமை. 


இந்நாள் = இப்போதெல்லாம். ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும். 

நெடிய கழியும் இரா = இரவு நீண்டு கொண்டே போவது அவளுக்கு எப்படி தெரிந்தது?  தூங்காமல் விழித்துக் கொண்டு இருக்கிறாள். எல்லோரும் தூங்கி விட்டார்கள். பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லை. நேரம் நகர மாட்டேன் என்கிறது. எப்படா விடியும் என்று காத்து இருக்கிறாள். விடிய மாட்டேன் என்கிறது. கொடுமையாக இருக்கிறது. 


இப்போது நீண்டு கொண்டே போகிறது என்றால் முன்பு அது அப்படி அல்ல என்று தானே அர்த்தம்?


காதலன் உடன் இருக்கும் போது, இந்த இரவு தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. அப்படி சட்டென்று முடிந்து விடும். அப்போது எல்லாம் அது நீண்ட இரவாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நெடிய கழியும் இரா. 


"நெடிய கழியும் இரா" என்ற அந்த சொற்றொடரில் எவ்வளவு ஏக்கம், தனிமை, தவிப்பு, எல்லாம் தெரிகிறது....




No comments:

Post a Comment