கம்ப இராமாயணம் - ஜடாயு புலம்பல் - ஏன் என்னை விட்டுப் போனாய்?
தயரதன் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும், ஜடாயு பெரும் துயரம் அடைந்து வருந்திப் புலம்புகிரான்.
ஒருவர் இன்று ஏதோ ஒன்றில் புகழ் அடையலாம். படிப்பில், விளையாட்டில், நடிப்பில், பணம் சம்பாதிப்பதில்...அந்தப் புகழ் அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்களை விட வேறு யாராவது சிறப்பாக செய்தால் அவர்களிடம் போய் விடும். புகழுக்கு என்று ஒரு நிலையான இடம் கிடையாது.
ஆனால், தயரதா, நீ இருக்கும் வரை, புகழுக்கு நீயே நிரந்தர புகலிடம்.....
தயரதா, உனக்கு நிரந்தர பகை என்று ஒன்று உண்டு என்றால் அது பொய். நீ பொய்க்கு நிரந்தர பகைவன்.
உண்மையும் சத்தியமும் உன்னை அணிகலனாக அணிந்து மகிழும்.
நீ யாரையெல்லாம் விட்டு விட்டுப் போனாய் தெரியுமா?
புகழ் தரும் உன் கொடைத் திறனையும்
நீதி மாறாத உன் வெண் கொற்றக் குடையையும்
உன்னுடைய உயர்ந்த பொறுமை என்ற பண்பையும்
இவற்றையெல்லாம் விட்டு விட்டுப் போய் விட்டாய்.
நீ இறந்ததில் சிலருக்கு மகிழ்ச்சி இருக்கும். அவர்கள் யார் தெரியுமா?
கற்பக மரம். கேட்டதை எல்லாம் கொடுக்கும். நீ இருந்த வரை அதுக்கு போட்டியாக இருந்தாய். இப்போது நீ இல்லை. கேட்டதை எல்லாம் கொடுப்பதற்கு இனி கற்பக மரம் மட்டும்தான் இருக்கிறது. எனவே, அது மகிழும்.
உடுபதி...விண்மீன்களின் தலைவனான நிலவு அமிர்தத்தைக் கொடுப்பது. உன் கொடை மூலம் நீ உயிர்களை காத்தாய். நீ இல்லாததால், இனி உயிர் காக்கும் அம்ரிதத்தைத் தர நிலவு மட்டும் தான். எனவே, அது மகிழும்.
கடல். உன் புகழ் கடலை விடப் பெரியது. நீ இல்லாவிட்டால், இனி உலகிலேயே பெரியது கடல் என்ற பெருமையை பெறும். எனவே அது மகிழும்.
தயரதா, நீ போன பின், யாசகம் வேண்டுபவர்களும், நல் அறமும், நானும் இனி எங்கே போவோம். எங்களை எல்லாம் விட்டு விட்டு நீ எப்படி போனாய்....
என்று ஜடாயு புலம்புகிறார்.
பாடல்
'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும்,
பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,
கடல் இடமும், களித்து வாழ-
புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே!
மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-
இரவலரும், நல் அறமும், யானும், இனி
என் பட நீத்து ஏகினாயே?
பொருள்
'பரவல் அருங்கொடைக்கும் = புகழ் தரும் உன் கொடை திறனுக்கும்
நின்தன் பனிக்குடைக்கும் = உன் வெண் கொற்றக் குடைக்கும்
பொறைக்கும் = உன் பொறுமைக்கும்
நெடும் பண்பு தோற்ற = உயர்ந்த பண்புகள் தோற்க
கரவல் அருங் கற்பகமும் = மறைக்காமல் கொடுக்கும் கற்பக மரமும்
உடுபதியும் = நிலவும்
கடல் இடமும் = கடலும்
களித்து வாழ = மகிழ்ந்து வாழ
புரவலர்தம் புரவலனே = அரசர்களுக்கு அரசனே
பொய்ப் பகையே = பொய்க்கு பகையானவனே
மெய்க்கு அணியே = உண்மைக்கு அணிகலன் போன்றவனே
புகழின் வாழ்வே! = புகழுக்கு வாழ்வளிப்பவனே
இரவலரும் = யாசகம் பெறுபவர்களும்
நல் அறமும் = நல்ல அறமும்
யானும் = நானும்
இனி = இனிமேல்
என் பட = என்ன செய்வோம் என்று நினைத்து
நீத்து ஏகினாயே? = விலகி மேலே போனாய் ?