Tuesday, December 9, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு - பாகம் 2

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு  - பாகம் 2 



மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.


இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

---------------------------பாகம் 2 ----------------------------------------------------------------------------------------------

ஏன் ஒவ்வொரு செயலையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறார்  ? ஒரு வேளை அவற்றிற்கு  ஒரு அழுத்தம் தர நினைத்து அப்படி சொல்லி இருப்பாரா ? அப்படி என்றால் ஒவ்வொரு  வார்த்தைக்கும் அழுத்தம் தர நினைத்து இருப்பாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம்  இருக்குமா ?

சிந்தித்துப் பார்ப்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நினைந்து நினைந்து = முதலில் எதை நினைக்க வேண்டும் ? பின் எதை நினைக்க வேண்டும் ? 

முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.

இரண்டாவது, இந்த பிரபஞ்சம், இதன் சிருஷ்டி, அதன் தாளம் தவறாத கதி இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகின் லயம் புரியும். ஒரு வேளை,  அதில் இருந்து இறைவனும் புரியலாம். 


உணர்ந்து உணர்ந்து 

உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும்  இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.

நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும். 


நெகிழ்ந்து நெகிழ்ந்து = முதலில் நமக்கு கிடைத்த நல்லவற்றை நினைத்து மனம் நெகிழ வேண்டும். நாம் என்ன செய்து விட்டோம் , நமக்கு இவ்வளவு கிடைத்து இருக்கிறதே என்று மனம் நெகிழ வேண்டும். 

நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று  வித்து என்பார் மணிவாசகர். 

நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே. 

அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர். 

உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும். 


நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்

முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர். 

இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும். 

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். 


உடம்பு நனைந்து நனைந்து= அந்தக் கண்ணீரால் உடம்பு நனைய வேண்டும். உடம்பு நனைந்தால் உடல் குளிரும். உள்ளமும் குளிர வேண்டும். உள்ளத்தில் காமமும், கோபமும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் உடல் குளிர்ந்தாலும் உள்ளம் குளிராது. கண்ணீரால் உடலும் குளிர வேண்டும். உள்ளமும் குளிர வேண்டும். 

மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி சொல்லுகிறார் வள்ளலார்.

2 comments:

  1. எனக்கு இந்த விளக்கம் மிகவும் பிடித்திருந்தது. அவ்வளவுதானா? மற்ற வரிகளுக்கு ஏதும் இல்லையா?

    ReplyDelete
  2. மிக்க நன்று...வள்ளலார் பிரான் சொல்லியது போல் மரணமில்லா பெருவாழ்வு பெற எத்தனிக்கிறேன்.நன்றி

    ReplyDelete