குறுந்தொகை - புது நலன் இழந்த
சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.
தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.
"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"
இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.
முதலில் பாடலைப் பார்ப்போம்.
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
கடலுங் கானலுந் தோன்றும்
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.
படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.
கொஞ்சம் சீர் பிரிப்போம்.
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே .
பொருள்
இவளே = இதோ நிற்கிறாளே இவள்
நின் சொல் = நீ சொன்ன சொற்களை
கொண்ட =கேட்டு
என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை
தேறி = ஏற்றுக் கொண்டு
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட
ஞாழற் = ஒரு மரம்
பல் சினை = பல கிளைகளில்
ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை
இழந்த = இழந்து
புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை
உடையள் = கொண்டு இருக்கிறாள்
உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்
எய்ய = அசை நிலை
உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்
நிலவும் இருளும் போலப் = நிலவும் இருளும் போல
புலவுத் = மாமிச வாடை வீசும்
திரைக் = அலை பாயும்
கடலும் = கடலும்
கானலும் = அதை அடுத்த கரையும்
தோன்றும் = இருக்கும்
மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்
பெண்ணை = பனை மரங்களை கொண்ட
எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே
இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.
கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை மேலும் கூடும்.
No comments:
Post a Comment