தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை
பெரிய பள்ளம். ரொம்பப் பெரிய பெரிய பள்ளம். எவ்வளவு போட்டாலும் நிறையாத பள்ளம்...கடலில் உள்ள நீரைக் எல்லாம் எடுத்து விட்டால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்குமோ அது போன்ற பள்ளம்...
அது எந்தப் பள்ளம் தெரியுமா ?
நம் வயிறுதான் .... நிறைந்த மாதிரி ..இருக்கும்.சிறிது நேரத்தில் காலியாகி விடும்...இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த பள்ளத்தை இட்டு நிரப்புவதே வேலையாக அலைகிறோம் .
உழைப்பதும், உணவு சேகரிப்பதும், அதை இட்டு வயிற்றை நிரப்புவது ஒரு வேலை.
இந்த உடலுக்குள் ஐந்து முரடர்கள் இருந்து கொண்டு இந்த உடலை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...அதைத் தொடு , இதை சுவைத்துப் பார், இதை கேட்டுப் பார் என்று இந்த உடலை படாத பாடு படுத்துகிறார்கள்.
அவர்கள் சொன்ன படியெல்லாம் கேட்டு அலைவது இன்னொரு வேலை.
இது ஒரு வாழ்க்கையா ? போதும் இது என்று கூறுகிறார் நாவுக்கரசர்....
என்னதான் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும்.
கெடுவது என்றால் கேட்டுப் போவது, முடிந்து போவது...முடியும் வாழ்கை இது....
உண்பதும், புலன் இன்பம் தேடுவதும் ...இது மட்டும் தானா வாழ்க்கை .
பாடல்
படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.
சீர் பிரித்த பின்
படு குழிப் பவ்வம் அன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை காணும் தோறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்து அளைவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டே ஆரூர் மூலட்டனீரே.
பொருள்
படு குழிப் = பெரிய குழி
பவ்வம் அன்ன = கடல் போன்ற
பண்டியைப் = வயிற்றில்
பெய்த வாற்றால் = போட்டு நிரப்பிக் கொண்டே இருந்தால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை = கெடுவது இந்த மனிதர் வாழ்கை
காணும் தோறும் கேதுகின்றேன் = இதை காணும்போதெல்லாம் , அழைக்கின்றேன்
முடுகுவர் = முடுக்கி விட்டுக் கொண்டு இருப்பார்
இருந்து அளைவர் = அங்கும் இங்கும் அலைய வைப்பார்
மூர்க்கரே = மூர்கமான
இவர்களோடும் = இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன் = அடியேன் வாழ மாட்டேன்
ஆரூர் மூலட்டனீரே = ஆரூரில் மூலமாக இருப்பவரே
.
No comments:
Post a Comment