திருக்கோவையார் - நீ வைத்த அன்பினுக்கே
முதலிலேயே சொல்லி விடுகிறேன்...திருக்கோவையார் மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.
அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். ஆனால் அதை அவளிடம் சொல்ல முடியவில்லை. ஏதேதோ காரணம். சாதி ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய அந்தஸ்து ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அவள் மிக மிக அழகாகவும், அவன் ரொம்ப சுமாராகவும் இருக்கலாம்.
இருந்தும், அவனால் அவள் மேல் கொண்ட காதலை விட முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. தொண்டையில் சிக்கிய முள்ளாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு சங்கடம்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல என்று சொல்லுவார்களே அது போல. முடியாது என்று தெரிந்தும் ,ஆசை விடவில்லை.
தன் வேதனையை யாரிடம் சொல்லுவான்? தன் நெஞ்சிடம் சொல்லுகிறான்..."ஏய் நெஞ்சே, அவளை காதலித்தது நீ. அவளை விட்டு உன்னால் எப்படித்தான் பிரிந்து இருக்க முடிகிறதோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை. நீ வேணும்னா இந்த துக்கத்தை பொறுத்துக் கொண்டு இரு. என்னால் முடியாது...செத்து போயிருவேன் போல இருக்கு " என்று புலம்புகிறான்.
பாடல்
மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே.
பொருள்
மாற்றே னென = மாற்றேன் என
வந்த காலனை = வந்த காலனை (எமனை)
யோல மிட = ஓலம் இட (அலறிட)
அடர்த்த = சண்டை போட்ட
கோற்றேன் = கோ என் , என் தலைவன்
குளிர்தில்லைக் கூத்தன் = குளிர்ந்த தில்லையம்பதியில் ஆடும் கூத்தன்
கொடுங்குன்றின் = பெரிய மலையின்
நீள்குடுமி = நீண்ட உச்சியில்
மேற்றேன் = மேல் தேன் , மேலே உள்ள தேனை. மலை உச்சியில் உள்ள தேனை
விரும்பு முடவனைப் = விரும்பும் முடவனைப்
போல = போல
மெலியுநெஞ்சே = வருந்தும் என் நெஞ்சே
ஆற்றே னரிய = ஆற்றேன், (பொறுத்துக் கொள்ள மாட்டேன்) அரிய (சிறந்த)
அரிவைக்கு = பெண்ணுக்கு
நீவைத்த அன்பினுக்கே = நீ வைத்த அன்பினுக்கே
" மாற்றேன் என வந்த காலனை "....முடிவு காலம் வந்து விட்டால், என்ன கதறி அழுது புரண்டாலும் அதை மாற்ற மாட்டான் அந்த காலன் . காலம் முடிந்து விட்டால் உயிரை கொண்டு போய் விடுவான்.
"மேல் தேன் விரும்பும் முடவனை "....முடவனுக்கு மலை உச்சியில் உள்ள தேன் மீது ஆசை. கையும் இல்லை, காலும் இல்லை. எப்படி அடைவது. பார்த்து ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஆற்றேன் ...என்னால் பொறுக்க முடியவில்லை. நெஞ்சே என்னால் பொறுக்க முடியவில்லை. நீ வேண்டுமானால் பொறுத்துக் கொண்டிரு. என்னால் முடியாது என்பது பொருள்.
"நீ வைத்த அன்பினுக்கே" ...அவள் மேல் நானா அன்பு வைத்தேன். நெஞ்சே, நீ தானே அன்பு வைத்தாய்.
காதலின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்.
திருக்கோவையார் ...மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன்...எழுதியவர் மாணிக்க வாசக ஸ்வாமிகள்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_13.html
சாதாரண மக்கள்ஒருவன் பாடக்கூடிய இந்த பாடலை ஏன் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்? புரியவில்லையே. ஒரு வேளை அவர் காலனை உதைத்த பரமேச்வரனை நினைத்து ஏங்கும் தன் மனோ நிலையை வெளிப்படுத்துகிறாரோ?
ReplyDeleteபாடலின் அழகு ஒரு பக்கம் இருக்கட்டும். எழுதியவர் மாணிக்க வாசகர் என்பது சும்மா திடுக்கிட்டும் ஆச்சரியமாக இருக்கிறதே! இந்தப் பாடலை எழுதிய சூழல் என்ன, அதன் பின்கதை என்ன?
ReplyDelete"காமம் குருவையும் விடாது" எனலாமா?
ReplyDeleteஅல்லது அவர் பக்தி நெறியைக் காண்பதன் முன் எழுதியதோ?