Tuesday, March 12, 2019

திருக்குறள் - புகழோடு தோன்றுக

திருக்குறள் - புகழோடு தோன்றுக 


பாடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

பொருள்

தோன்றின் = தோன்றினால்

புகழொடு = புகழோடு

தோன்றுக = தோன்ற வேண்டும்

அஃதிலார் = அப்படி இல்லாவிட்டால்

தோன்றலின் = தோன்றுவதை விட

தோன்றாமை நன்று = தோன்றாமல் இருப்பதுவே நன்று

இந்தக் குறளும் அதன் பொருளும் யாருக்குத்தான் தெரியாது. மிக எளிமையான குறள். கடினமான வார்த்தை ஒன்று கூட இல்லை.

அப்படி நினைத்து, இந்த குறளை கடந்து போய் விடக் கூடாது.

வள்ளுவர் பொதுவாகவே சொற் சிக்கனம் உள்ளவர்.

இந்த ஒரு குறளில் "தோன்றின்" , "தோன்றுக", "தோன்றலின்", "தோன்றாமை" என  நாலு தடவை ஒரே வார்த்தையை கையாளுகிறார். இருக்கிற ஏழு வார்த்தைகளில் நாலு வார்த்தை  ஒரே சொல்லுக்குப் போய் விடுகிறது என்றால் அது எவ்வளவு முக்கியமான வார்த்தையாக இருக்க வேண்டும் ?

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.


ஒரு மாணவன் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குச் செல்கிறான் என்றால், பள்ளியிலேயே அல்லது  கல்லூரியிலேயே முதலாவது வர வேண்டும். அதுதான் புகழ்.  நாலாவது, ஐந்தாவதாக வந்தால் யாருக்கும் தெரியாது.

ஓடினால் , ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும். அது தான் புகழ்.

பாடினால், grammy award வாங்க வேண்டும். அது புகழ்.

நானும் கல்லூரிக்குப் போனேன், நானும் பாட்டு கற்றுக் கொள்கிறேன், நானும் ஓடுகிறேன் என்று இருக்கக் கூடாது.

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் தோன்றும் படி செய்ய வேண்டும்.

"தோன்றுதல்"

நிறைய பேருக்கு திறமை இருக்கும். கடின உழைப்பு இருக்கும். அதை சரியான படி வெளிப்படுத்தத் தெரியாது.

உள்நாட்டில் வேலை செய்வதை விட, அயல் நாட்டில் சென்று வேலை செய்தால்  பல மடங்கு ஊதியம் கிடைக்கும். நல்ல பேர் கிடைக்கும். "ஐயோ, அயல் நாடா...? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா " என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் புகழ் வெளிப்படாது. புகழ் "தோன்றாது".

இன்னும் சில பேர் மாங்கு மாங்கு என்று வேலை செய்வார்கள். ஆனால், ஒரு மதிப்பும், மரியாதையும், பதவி உயர்வும் இருக்காது. காரணம், தாங்கள் செய்ததை  சரியான படி வெளிச்சம் போட்டுக் காட்டத் தெரியாது.

தோன்றுதல் என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.  நம் திறமையை, அறிவை சரியான  படி வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். திறமை இருந்தால் மட்டும் போதாது. நல்ல இசை ஞானம் இருந்து என்ன பலன், குளியல் அரையைத் தவிர  வேறு எங்கும் பாட மாட்டேன் என்றால் ?

நாலு பேர் முன்னால் பாடிக் காட்ட வேண்டும்.

ஒரு வேலையை செய்யத் தொடங்கும்முன், அதில் இதுவரை சாதிக்கப்பட்டது என்ன, யார் சாதித்தார்கள், எப்போது சாதித்தார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை விட பெரிதாக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அப்படி பெரிதாக செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, அதற்கு என்ன பயிற்சி வேண்டும், யாருடைய உதவி தேவைப்படும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும்.

இதுவரை சாதிக்காதவற்றை நாம் எவ்வாறு சாதிப்பது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

அப்படி சாதிக்க முடியும் என்றால், அந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லை என்றால்  அந்த வேலையைத் தொடக் கூடாது.

நானும் வேலைக்குப் போகிறேன், நானும் கல்லூரிக்குப் போகிறேன், என்று இருக்கக் கூடாது.

நாம், எப்போதும் நம் திறமையை அதிகமாக எண்ணிக் கொள்வோம். என்னைப் போல் யார் உண்டு என்று நினைப்போம்.

நம் திறமை வெளிப்பட்டால்தான் தெரியும் அது எவ்வளவு உயர்வானது அல்லது சாதாரணமானது என்று.  திறமை வெளிப்படும் போது பாராட்டும் கிடைக்கும், விமர்சனங்களும் எழும். குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் சொல்லும் குறைகள் என்ன என்று ஆராய்ந்து, நம்மை மேலும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

குடத்தில் இட்ட விளக்காய் இருந்தால், ஒன்றும் தெரியாது.

குன்றில் இட்ட விளக்காய் இருக்க வேண்டும்.

தோன்றுங்கள். உங்கள் திறமை வெளிப்படும்படி தோன்றுங்கள்.

புகழ் உங்களை வந்து சேரும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_12.html


1 comment:

  1. இந்த உரை அருமையானதுதான். ஆனால் அது முதல் மூன்று வார்த்தைகளைப் பற்றியதாக இருக்கிறது. "தோன்றலிற் தோன்றாமை நன்று" என்றால் என்ன பொருள்?

    ReplyDelete