கம்ப இராமாயணம் - சிறை விரித்து இருந்தனன்
எந்த விஷயத்திலும் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், அதில் நல்ல பயிற்சி வேண்டும். அது படிப்பாக இருக்கட்டும், விளையாட்டு, சமையல், ஆடல், பாடல், நடிப்பு, வேலை, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தொடர்ந்த பயிற்சியின் மூலம் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
வாழ்வில் நாம் உயர வேண்டும், சிறப்பாக விளங்க வேண்டும், பேரும் , புகழும், பணமும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பாதவர் யார். எப்படி வாழ்வில் உயர்ந்து உன்னத நிலையை அடைவது ?
வள்ளுவர் சொல்கிறார்
வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளது அனையது உயர்வு
நாம் எந்த அளவு உயர முடியும் என்றால், நம் மனம் எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு உயர முடியும்.
எனக்கென்று ஒரு தனி விமானம் வேண்டும், ஒரு கப்பல் வேண்டும், ஒரு தீவு வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறோமா ?
நோபல் பரிசு வேண்டும், ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை பட்டு இருக்கிறோமா ?
இல்லை. ஏன் என்றால், அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை, நம்மால் முடியாது, அதுக்கெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்பிருந்தே முயற்சி தொடங்கி இருக்க வேண்டும், இப்ப ரொம்ப வயசாகி விட்டது என்று நமக்கு நாமே முட்டுக் கட்டை போட்டுக் கொள்கிறோம்.
உள்ளம் குறுகி இருக்கிறது. முடியாது, நடக்காது, நடை முறைக்கு ஒத்து வராது என்று பெரிய விஷயங்களை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். அல்லது தள்ளி வைத்து விடுகிறோம்.
அப்படி அல்லாமல், எப்படி பெரிதாக சிந்திப்பது ?
அதாவது, மனம் பெரிதாக சிந்திக்க வேண்டும் என்றால், அதற்கு பயிற்சி வேண்டும் அல்லவா ? பெரிய பளுவை தூக்க உடலுக்கு பயிற்சி வேண்டுவது போல, பெரிதாக சிந்திக்க மனதுக்கு பயிற்சி வேண்டும்.
மனதை எப்படி பயிற்றுவிப்பது ? அதுக்கு ஏதாவது கோர்ஸ் இருக்கா ? மனப் பயிற்சி என்று எங்காவது சொல்லித் தருகிறார்களா ? எவ்வளவு செலவு ஆகும்?
ஒன்றுமே வேண்டாம். மிக மிக எளிய வழி இருக்கிறது.
இலக்கியம்.
இலக்கியங்களை படிக்க படிக்க மனம் விரியும். கற்பனையின் எல்லைகள் பரந்து படும். நடை முறையில் சாத்தியம் இல்லாதவற்றை எல்லாம் கூட மனதால் சிந்திக்க முடியும். இதுவரை காணாதது, கேட்டிராதது போன்றவற்றைக் கூட மனதால் கற்பனை செய்ய முடியும்.
அது ஒரு வித மனப் பயிற்சி.
கம்பன் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகிறான்.
இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நாடு விட்டு காடு வந்து சேர்ந்தனர். காட்டில் ஜடாயுவை சந்தித்தனர்.
கழுகைப் பார்த்தார்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம்.
கம்பன் மெனக்கிடுகிறான்.
ஜடாயு ஒரு மலை மேல் தன் சிறகுகளை விரித்தபடி அமர்ந்து இருக்கிறான். அது எப்படி இருக்கிறது என்றால், மலையின் மேல் சூரியன் வரும் போது அதன் கதிர்கள் எப்படி பிரகாசிக்குமோ அப்படி இருக்கிறது .....
பாடல்
உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து
உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து
அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச்
சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என,
விளங்குவான் தனை,
பொருள்
உருக்கிய = உருக்கப்பட்ட
சுவணம் = தங்கம்
ஒத்து = ஒன்றாக தோன்றும் படி இருந்து
உதயத்து = உதிக்கும் போது
உச்சி சேர் = உச்சியில் வரும் போது
அருக்கன் = சூரியன்
இவ் அகல் இடத்து = இந்த அகன்ற இடத்தில்
அலங்கு திக்கு எல்லாம் = பொருந்திய அனைத்து திசைகளிலும்
தெரிப்புறு = தெறித்து விழும்படி
செறி சுடர்ச் = சக்தி வாய்ந்த சுடர்
சிகையினால் = ஒளி கீற்றுகளால்
சிறை விரித்து இருந்தனன் = சிறகை விரித்து இருந்தான்
என விளங்குவான் தனை, = என்று இருந்த அவனை
மலை , உலகம்
சூரியன், ஜடாயு
சூரிய கதிர்கள் - ஜடாயுவின் சிறகுகள்
பொன்னிறமான கழுகு. மலை மேல் தக தக என்று ஜொலிக்கிறது. சிறகை விரித்து உலகுக்கு எல்லாம் ஒளி தருகிறது.
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
இருந்தாலும், நம் கற்பனை விரிகிறது அல்லவா ? அப்படி மலை மேலே உள்ள ஒரு பெரிய கழுகை நம்மால் சிந்திக்க முடிகிறது அல்லவா ?
அது தான் மனப் பயிற்சி.
மனம் விரிய விரிய நமது வாழ்வின் எல்லைகள் விரியும்.
நினையாததெல்லாம் நிறைவேற காண்போம்.
பெரிய முன்னேற்றங்கள் நிகழும்.
பெரிதினும் பெரிது கேள் என்றாள் ஒளவை. (பாட்டி பெரிய ஆள் தான்).
இலக்கியங்களை ஆழ்ந்து அனுப்பவித்துப் படிப்பதால் வாழ்வில் மிகப் பெரிய விஷயங்களை சாதிக்கலாம். பெரிய உண்மைகளை கண்டறியலாம்.
மனம் விரியட்டும். குறுகிய எண்ணங்கள் தொலையட்டும். வானம் வசப்படட்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_10.html
சுவையான பாடல்.
ReplyDelete