கம்ப இராமாயணம் - என் சொல்லினால் சுடுவேன்
சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.
சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு துன்பம் செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.
பாடல்
அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.
பொருள்
அல்லல் = துன்பம் (செய்யும்)
மாக்கள் = விலங்குகளைப் போன்ற அரக்கர்கள் வாழும்
இலங்கை அது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல
எல்லை நீத்த =எல்லை இல்லாத
உலகங்கள் யாவும் = இந்த உலகங்கள் அனைத்தையும்
என் சொல்லினால் சுடுவேன்; = என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்
அது = அப்படிச் செய்தால்
தூயவன் = இராமனின்
வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு
மாசு என்று வீசினேன். = குற்றம் என்று கருதி அந்த எண்ணத்தை கை விட்டேன் என்கிறாள்.
தெரிந்த பாடல் தான். பல முறை, பல இடங்களில் படித்த,கேட்ட பாடல்தான்.
இதில் புதிதாக என்ன செய்தி இருக்கிறது?
வீட்டில் கணவன் சில விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அது மற்ற வேலையின் காரணமாக இருக்கலாம், அல்லது சோம்பேறித்தனமாக இருக்கலாம். பெரும்பாலான வீடுகளில் என்ன நடக்கிறது என்றால், மனைவி வேறு யாரிடமோ சொல்லி காரியத்தை செய்து கொள்ள முயல்கிறாள். அப்படி செய்து கொள்ள முயலும் போது, ஏன் அவள் கணவன் செய்யவில்லை என்ற கேள்வி வரும் அல்லவா ? அதற்கு, தன் கணவனை பற்றி அவளே வெளிப்படையாக சொல்ல நேர்கிறது. "அவருக்கு இதில் எல்லாம் சாமர்த்தியம் போதாது. நீங்க இதில் கெட்டிக்காரர், " என்று கணவனின் பலவீனத்தை வெளிப்படையாக மனைவி இன்னொருவரிடம் சொல்லும் போது பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது, இன்றைய பெண் விடுதலை பற்றி பேசுபவர்கள், கணவனைப் பற்றி, வீட்டுக்கு வருபவர்களிடம் பேசும் போது, "அவருக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது" என்று பேசுகிறார்கள். அதில் ஏதோ தங்களுக்கு பெரிய பெருமை இருப்பது போல. சில வீடுகளில் மரியாதை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் "அதுக்கு ஒண்ணும் தெரியாது" என்று.
தான் பெரியவள் என்று காட்டிக் கொள்ள, கணவனை மட்டம் தட்டுவது, அல்லது அவனை சிறுமைப் படுத்தும் போக்கு பல இடங்களில் காணப் படுகிறது. "நீ இல்லாவிட்டால் என்ன...என்னால் சாதிக்க முடியாதா...செய்து காட்டுகிறேன் பார்" என்று பெண்கள் கோதாவில் இறங்குகிறார்கள்.
செய்தும் காண்பிக்கிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது. என்ன சிக்கல் என்றால், "நான் இல்லாவிட்டாலும் அவள் தன்னைத் தானே கவனித்து கொள்வாள் " என்று கணவன் நினைக்கத் தலைப்படுவான். அது மட்டும் அல்ல, "நான் அவளுக்கு தேவை இல்லை, என் துணை அவளுக்குத் தேவை இல்லை " என்று அவன் நினைக்கும் போது, சரி, என் துணை யாருக்குத் தேவைப் படுகிறதோ அங்கு நான் போகிறேன் என்று நினைக்கிறான்.
காரியத்தை செய்து விட்டு, காதலை இழக்கிறார்கள்.
சீதைக்கு முடியாத காரியம் அல்ல.
இராமன், படை திரட்டி, பாலம் கட்டி, பல நாள் போர் செய்து தான் இராவணனை வென்றான். சீதை சொல்கிறாள், "அதெல்லாம் தேவை இல்லை, ஒரே சொல்லால் இந்த உலகம் அனைத்தையும் எரிப்பேன்" என்கிறாள். அவளுடைய ஆற்றல் அளவு கடந்தது.
ஆனாலும், அனுமன் என்ற இன்னொரு ஆடவன் மூலம் அவள் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கவில்லை. தானும் தனித்து நின்று காரியம் செய்து கொள்ளவும் நினைக்கவில்லை. அப்படிச் செய்தால் ஒரு வேளை தனக்குப் பெருமை வரலாம் , ஆனால் உலகம் இராமனை இகழும். கட்டிய மனைவியை காப்பாற்றத் தெரியாத இவன் எல்லாம் ஒரு ஆண் மகனா என்று உலகம் இராமனை இகழும்.
இராமன் வந்து சிறை மீட்க வேண்டும் என்று சீதை தன் ஆற்றலை சுருக்கிக் கொண்டு, பிற ஆடவர் உதவியும் பெறாமல், துன்பத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தாள்.
தாம்பத்தியத்தின் இரகசியம் இது.
குடும்பம் என்பது யார் பெரியவர் என்பதை நிர்ணயம் செய்யும் குஸ்தி மைதானம் அல்ல.
யாருக்கு கோப்பை கிடைக்கிறது பார்க்கலாம் என்று களம் இறங்குவது அல்ல, குடும்ப வாழ்க்கை.
இன்றைய பெண் விடுதலையாளர்கள் நினைக்கக் கூடும், "சீதை செய்தது சரி அல்ல. அவள் பாட்டுக்கு சண்டை போட்டு, இராவணனை கொன்று போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும், அல்லது அனுமனின் தோளில் ஏறி வந்திருக்க வேண்டும் ..இது என்ன பத்தாம் பசலித்தனம்" என்று.
அது சரிதானா என்பதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
கம்பன் காட்டிய சீதை அப்படி செய்யவில்லை.
பாடம் படித்துக் கொள்வது நம் விருப்பம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_22.html
Quote
ReplyDeleteஎன்ன சிக்கல் என்றால், "நான் இல்லாவிட்டாலும் அவள் தன்னைத் தானே கவனித்து கொள்வாள் " என்று கணவன் நினைக்கத் தலைப்படுவான்.
Unquote
இதில் என்ன தவறு இருக்கிறது? கணவனைச் சார்ந்துதான் பெண் வாழா வேண்டும் என்று அவளை முடக்கி வைப்பது ஏன்?
Quote
என் துணை யாருக்குத் தேவைப் படுகிறதோ அங்கு நான் போகிறேன் என்று நினைக்கிறான்.
Unquote
இந்த மாதிரி ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணைத் தேடிப் போவது அவனது கயமையைத்தான் காண்பிக்கிறது. நீ முடமாக, என்னைச் சார்ந்து இருந்தால் மட்டுமே நான் ஒழுக்கமாக இருப்பேன் என்பது சுத்த கயவாளித்தனம்.