கம்ப இராமாயணம் - எரியே அவனைச் சுடல்
"எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்" என்றாள் சீதை.
சொன்னால் போதுமா? அவளுக்கு அப்படி ஒரு வலிமை இருந்ததா அல்லது சும்மா சொல்கிறாளா?
அப்படி வலிமையோடு அவள் ஏதாவது செய்து காண்பித்து இருக்கிறாளா?
அனுமன், இலங்கைக்கு வந்து பிராட்டியைக் கண்ட பின், அங்கிருந்த மரம் செடி கொடிகள் எல்லாம் உடைத்து எறிகிறான். பிறவிக் குணம் யாரை விட்டது?
அரக்கர்கள், அனுமனை பிடித்துக் கொண்டு போய் இராவணன் முன் நிறுத்துகிறார்கள். இராவணனுக்கும், அனுமனுக்கும் நீண்ட பேச்சு வார்த்தை நிகழ்கிறது. அருமையான பல கருத்துக்களைக் கொண்ட பேச்சு வார்த்தை அது. அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.
கடைசியில், அனுமனின் வாலுக்கு தீ வைத்து அவனை விரட்டி விடும்படி இராவணன் கூறுகிறான்.
அதைக் கேள்விப் பட்ட சீதை வருந்துகிறாள். ஐயோ, அனுமனுக்கு அது துன்பம் தருமே என்று அஞ்சி, தீக் கடவுளை கூப்பிட்டு, "நான் கற்புள்ளவள் என்றால், தீயே, அவனைச் சுடாதே" என்று அக்கினி கடவுளுக்கு கட்டளை இடுகிறாள். தீக் கடவுளும் அவள் பேச்சுக்கு அடி பணிகிறான். அரக்கர்கள் இட்ட தீ, அனுமனுக்கு குளிர்ந்தது.
பாடல்
‘தாயே அனைய கருணையான்
துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர்
நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
நிற்கே தரெியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன்,
எரியே அவனைச் சுடல் ‘என்றாள
பொருள்
‘தாயே அனைய = தாயைப் போன்ற
கருணையான் = கருணை கொண்டவன் (இராமன்)
துணையை = (அவனுடைய) துணையை (அனுமனை)
யாதும் = எந்த ஒரு
தகவு இல்லா = சிறப்பும் இல்லாத
நாயே அனைய = நாயைப் போன்ற
வல் அரக்கர் = கொடிய அரக்கர்கள்
நலியக் கண்டால் = துன்புறுத்துவதைக் கண்டால்
நல்காயோ? = உதவி செய்ய மாட்டாயா ?
நீயே உலகுக்கு ஒரு சான்று; = இந்த உலகில் நடக்கும் அனைத்திற்கும் நீயே ஒரு சாட்சி
நிற்கே தெரியும் = உனக்கே தெரியும்
கற்பினால் தூயேன் என்னில் = நான் கற்பினால் தூயவள் என்றால்
தொழுகின்றேன், = (உன்னை) வணகுகிறேன்
எரியே = தீயே
அவனைச் சுடல் ‘என்றாள = அவனை சுடாதே என்றாள்
முக்கிய செய்தி என்ன என்றால், நீ ஒழுக்கத்தோடு இருந்தால், இயற்கை உனக்கு கட்டுப்படும். தீயை குளிர வைக்கலாம். உதிக்கும் சூரியனை நிறுத்தி வைக்கலாம், காலத்தை நிறுத்தலாம் (மார்க்கண்டேயர்).
ஒழுக்கம், அறம் ...இதுதான் வாழ்க்கை என்று நம்பியது நம் இலக்கியங்கள்.
எதை எதையோ நம்புகிறோம்.
நல்லதை , உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_24.html
இதில் உள்ள பாடத்தை அழுத்தம் திருத்தமாக நன்கு பதியும் வண்ணம்
ReplyDeleteகடைசியில் சொல்லி விட்டீர் .