கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி
கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.
காக்கை கரவா கரைந்துண்ணும் என்பார் வள்ளுவர்.
"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பார் மணிவாசகர். இறைவன் படைத்து, காத்து, கரந்து விளையாடுகிறான்.
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)
சிலர் படிப்பார்கள். நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை பிறருக்கு சொல்ல மாட்டார்கள். எங்கே தெரிந்து கொண்டால் அவனும் நம்மை மாதிரி ஆகி விடுவானோ, நம் பெருமை குறைந்து விடுமோ என்ற பயம்.
நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது. யார் எப்படிப் போனால் என்ன, நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கலாம்.
தான் கற்ற மந்திரத்தை உலகில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ள கோவில் கோபுரத்தில் மேல் ஏறி சொன்னார் இராமானுஜர். அவருக்கு அந்த உபதேசத்தை சொன்னவர்கள் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது (மறைத்து வை) என்று சொல்லித்தான் அனுப்பினார்கள். இராமானுஜரின் தாயுள்ளம், எல்லோரும் உய்ய வேண்டும் என்று தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எல்லோருக்கும் சொன்னார்.
அப்படி அல்லாமல், தனக்கு மட்டும் என்று அறிவை வைத்துக் கொள்ளும் அறிவுக் கருமிகளின் வீட்டு வாசலில் சென்று நிற்கும் படி என்னை வைத்து விடாதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.
பாடல்
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயாபரனே!
படிக்க கொஞ்சம் கடினம் தான். சீர் பிரிப்போம்.
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே!
பொருள்
கரவாகிய = மறைத்து வைக்கக் கூடிய
கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்
கடை சென்று = வாசலில் சென்று
இரவா வகை = கை ஏந்தும் படி செய்யாமல்
மெய்ப்பொருள் ஈகுவையோ = உண்மையான பொருளை தருவாயாக
குரவா = தலைவா. குரவன் என்றால் தலைவன்
குமரா = குமரா
குலிசாயுத =குலிசாயுதம் என்ற ஆயுதத்தை கையில் கொண்டவனே
குஞ்சரவா = குஞ்சரவா
சிவயோக = சிவ யோகத்தில் நிற்பவனே
தயாபரனே! = தயை நிறைந்தவனே
கல்வியை கற்றால் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதற்கு இன்னொரு விளக்கமும் தரலாம்...மறைத்து வைக்கக் கூடிய கல்வி.
கல்வி, உண்மையை நம்மிடம் இருந்து மறைத்து விடும்.
"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்றார் மணிவாசகர்.
கல்விக்குள் போகக் கூடாது. போனால், அதைத் தாண்டி போக வேண்டும். எல்லை கடக்க வேண்டும்.
கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின்
என்பார் வள்ளுவப் பேராசான்.
அறிவு இறைவனிடம் இட்டுச் செல்ல வேண்டும்.
எங்கே இட்டுச் செல்கிறது? ஆணவத்திடம் தான் இட்டுச் செல்கிறது.
படியுங்கள். படித்ததை மற்றவர்களுக்கும் தாருங்கள். படித்தத்தின் பலன் என்ன என்று சிந்தியுங்கள். பயன் என் கொல் என்று வள்ளுவர் கேட்கிறார்.
interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_25.html
நல்ல பாடலும் விளக்கமும். நன்றி
ReplyDelete