நன்னூல் - பாயிரம் - பாகம் 3
ஒரு நல்ல நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது. ஒரு நல்ல நூலின் கூறுகள், அல்லது பகுதிகள் என்ன என்ன என்று பட்டியல் தருகிறது. அவற்றின் மூலம், அந்த புத்தகம் நமக்குத் தேவையா இல்லையா, யார் இதைப் படிக்கலாம் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.
அந்த கூறுகள் அடங்கிய பாடலை முதலில் பார்த்தோம். அது கீழே உள்ளது.
பாடல்
நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .
அதில் உள்ள முதல் வரி
"நூலின் இயல்பே நுவலின் இரு பாயிரம் தோற்றி"
அது என்ன இரு பாயிரம் ?
பாயிரம் என்பது ஒரு நூலுக்கு முன்னுரை போல. அப்படிச் சொன்னால் போதுமா ? சரியான விளக்கம் வேண்டும் அல்லவா.
பாயிரம் என்றால் என்ன என்று சொல்லுகிறார் பவணந்தியார்
முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பது பாயிரம்.
இது என்னடா, வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், அதை விட கடினமான வார்த்தைகளில் அர்த்தம் சொன்னால் என்ன செய்வது என்று திகைக்க வேண்டாம்.
எளிமைப் படுத்துவோம்.
பாடல்
முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .
பொருள்
முகவுரை = நூலின் முன் பகுதி. முதலில் நூலை நமக்கு அறிமுகப் படுத்தும் பகுதி. அதை நூல்முகம் என்றும் கூறுவார்கள்.
பதிக = ஒரு நூலில் பொதுவான மற்றும் சிறப்பான பகுதிகள் என்னென்ன என்று எடுத்துக் கூறுவது
மணிந்துரை = அணிந்துரை = நூலின் சிறப்பை பற்றிக் கூறுவது
நூன்முகம் =அல்லது முகவுரை. இதை புனைந்துரை என்றும் கூறுவர்.
புறவுரை = நூல் எதைப் பற்றி சொல்லாது என்று சொல்வது. அதாவது, இந்த நூல் எந்த எல்லை வரை போகும் என்று கூறுவது.
தந்துரை = நூலில் இல்லாத சிலவற்றை பொருள் விளங்க வேண்டி, அவற்றை விளக்கிக் கூறுவது. உதாரணமாக, ஒரு இயற்பியல் (physics ) புத்தகத்தில் சில வேதியல் (chemistry ) பற்றி கூறுவது. அது இயற்பியலுக்கு சம்பந்தம் இருப்பதால்.
புனைந்துரை = நூல் முகம்
பாயிரம் = இவையே பாயிரம் எனப்படும்.
அதாவது நூலின் நோக்கம், அதன் சிறப்பு, அதன் எல்லை, அது எதை பற்றி எழுதப் பட்டது, என்று முதலில் கூறுவது பாயிரம்.
பாயிரத்தைப் படித்தாலே, அந்த நூலைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் தோன்றும்.
இது நமக்கு ஏற்ற நூல் தானா, இதை நாம் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.
முழு நூலையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
எவ்வ்ளவு நேரம் மிச்சமாகும் என்று நினைத்துப் பாருங்கள்?
ஒரு நூலின், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்கள்.
அடுத்த முறை ஏதாவது ஒரு புத்தகம் வாங்க வேண்டும் நினைத்தால், அதன் முன்பகுதியைப் படியுங்கள். இதில் சொன்ன எல்லாம் அதில் இல்லாமல் போகலாம். ஆனால், நமக்கு ஒரு பிடி கிடைக்கும்.
ஆங்கிலத்தில் Foreward கூறுவார்களே அது.
சரி, பாயிரம் என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "இரு பாயிரம்" ?
மேலும் சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_13.html
Preface பொருந்தும் நூலின் ஆசிரியரே அறிமுகப் படுத்துவது..
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி..