கம்ப இராமாயணம் - அளவற்ற ஆற்றல் பெற
நமக்கு வேண்டியவற்றை அடைய நமக்கு ஆற்றலும், திறமையும் வேண்டும். நம் ஆசையோ அளவு இல்லாதது. அவ்வளவு ஆற்றலுக்கு எங்கே போவது?
கம்ப இராமாயணம் வழி சொல்கிறது. நேரடியாக அல்ல. சற்று மறைமுகமாக. நாம் தான் தேடி அதை கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.
இராமாயணத்தில் மிகுந்த பலம் வாய்ந்த பாத்திரம் என்றால் அது வாலிதான்.
கதாநாயகன் இராமன் மிகுந்த பலசாலி. அவனுக்கு எதிரே நிற்கும் இராவணன் இராமனுக்கு இணையான பலசாலி. வாலியோ, இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி அங்கதனின் தொட்டிலில் தொங்க விடுவானாம். அது மட்டும் அல்ல, வாலியின் எதிரில் நின்று போரிடாமல், இராமனே மறைந்து நின்று தான் போரிட்டான். இராமன் எய்த பாணம், வாலியின் நெஞ்சை தாக்கி உள்ளே செல்ல முயல்கிறது. வாலி அதைத் தடுத்து, வெளியே இழுக்கிறான். இராம பாணத்தை தடுக்கும் அளவுக்குவாலியிடம் பேராற்றல் இருந்தது.
அவனுக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சில நல்ல குணங்கள் இருக்கும். சில கெட்ட குணங்களும் இருக்கும். நல்லதே மட்டும் உள்ளவர்களும் இல்லை. அனைத்துமே கெட்ட குணங்கள் என்றும் எவரும் இல்லை.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்ல குணங்கள் என்ன என்று கண்டு பிடித்து அவற்றை நாம் அடைய முயற்சி செய்து, அடையவும் செய்தால், நம்மைப் போல பல சாலி யாரும் கிடையாது.
வாலி, தன்னை எதிர்க்கும் எதிரியிடம் இருந்து அவர்களின் "நல்ல" குணத்தில், பாதியை அவன் பெற்றுக் கொள்ளும் வரத்தை பெற்று இருந்தான். அவனை யாரும் வெல்லவே முடியாது. யார் எதிரில் நின்றாலும், அவர்களின் பலத்தில் பாதி வாலியிடம் போய் விடும் என்றால் அவர்கள் எப்படி வாலியை வெல்ல முடியும்?
அப்படி, ஒவ்வொருவரின் பலத்திலும் பாதி அவனை சென்று அடைந்ததால் அவன் மிகப் பெரிய பலம் பெற்று விளங்கினான்.
பாடல்
'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;
பொருள்
'கிட்டுவார் = எதிரில் வருபவர்கள்
பொரக் கிடைக்கின் = போருக்கு என்று வந்தால்
அன்னவர் = அவர்களின்
பட்ட நல் வலம் = பெற்ற நல்ல பலத்தில்
பாகம் எய்துவான்; = பாதியை வாலி அடைவான்
எட்டு = எட்டு
மாதிரத்து = பெரிய திசைகளிலும்
இறுதி = முடிவில்
நாளும் உற்று, = தினமும் சென்று
அட்ட மூர்த்தி = சிவனின்
தாள் பணியும் ஆற்றலான்; = திருவடி தொழும் ஆற்றல் பெற்றவன்
அவனிடம் இரண்டு குணங்கள் இருந்தன.
ஒன்று, மற்றவர்களின் நல்ல குணங்களின் பாதியை பெற்றுக் கொள்வான்.
இரண்டாவது, அவ்வளவு வலிமை பெற்ற பின்னும், அவனுள் ஒரு அடக்கம் இருந்தது. தினமும், இறைவனைத் தொழுதான்.
எனவே, ஆற்றல் பெற வேண்டும் என்றால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பார்த்து படித்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் வரம் இல்லை. எனவே அவர்களின் நல்ல குணங்கள் தானே நம்மை அடையாது. அதனால் என்ன? தானே வராவிட்டால், நாம் முயற்சி செய்து அடையலாம் தானே.
Inspiration and motivation என்று சொல்லுவார்கள். நம்மைவிட அறிவில், குணத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்து அவர்களின் அந்த குணங்களை நாம் அடைய நாளும் முயல வேண்டும்.
யோசித்துப் பாருங்கள், தலைக்கு இரண்டு நல்ல குணம் என்று பத்து பேரை எடுத்துக் கொண்டால், நம்மிடம் 20 நல்ல குணங்கள் வந்து விடும். அவர்கள் எல்லாம் இரண்டு நல்ல குணத்தோடு இருப்பார்கள். நாம் 20 நல்ல குணத்தை பெற்றவர்களாக இருப்போம்.
வாலி வதை சரியா தவறா என்பதை விட்டு விட்டு, நம்மை உயர்த்திக் கொள்ள அங்கே என்ன பாடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_75.html
நல்ல பாடல். நன்றி.
ReplyDelete