ஆத்திச் சூடி - படிப்பது
படிப்பது.
என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால்
சில இளம் வயது ஆண்களையும் பெண்களையும் கேட்டால் "படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு try பண்ணிக்கிட்டு இருக்கேன் " என்பார்கள். படித்து முடிக்க முடியுமா?
குடும்பத் தலைவிகளை கேட்டால், "வீட்டைப் பாக்கவே நேரம் பத்தலை, இதுல எங்க போட்டு படிக்கிறது..." என்று அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறோம்.
வயதானவர்களைக் கேட்டால் "..ஆமா..இத்தனை வயசுக்கு அப்புறம் படிச்சு என்ன செய்யப் போறேன்...வேலைக்கா போகப் போறேன் " என்பார்கள்.
வேலைக்கு போகும் ஆண் / பெண்களைக் கேட்டால், "வேலை, வீடு, பிள்ளைகள், குடும்பம் ...இதுக்கே நேர பத்தலை...இதுல எங்கிருந்து படிக்கிறது ..." என்பார்கள்.
ஆக மொத்தம், படிப்பது என்பது ஏதோ ஒரு சிலர்க்கு மட்டும் வாய்த்த வாய்ப்பாக இருக்கிறது.
அது சரிதானா?
வள்ளுவரிடம் கேட்டால்
யாதானும் நாடாமல் ஊராமால் எவனொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு
என்று நீட்டி முழக்கி ஒண்ணே முக்கால் அடியில் சொல்லுவார்.
அவருக்கு சுருக்கமாகச் சொல்லாத் தெரியாது.
நம்ம கிழவி தான் சரி.
இரண்டே வார்த்தை.
"ஓதுவது ஒழியேல் "
நாங்களும் தான தினமும் whatsapp துணுக்குகள், வதந்திகள் எல்லாம் படிக்கிறோமே , facebook ல யார் என்ன செய்றாங்கன்னு படிக்கிறோம்...அதெல்லாம் படிப்புல வராதா என்றால், வராது.
ஓதுவது என்றால் மனப்பாடம் செய்ய வேண்டி மீண்டும் மீண்டும் சொல்லுவது.
மனதுக்குள் ஏற வேண்டும்.
எதை திருப்பி திருப்பி படிப்போம்?
எது கடினமானதோ, எது நமக்கு மிகவும் தேவைப் படுகிறதோ , எது பயன் உள்ளதோ, அதை திருப்பி திருப்பி படிப்போம்.
அப்படி நல்லதை, உயர்ந்ததை படிப்பதை ஒரு நாளும் விட்டு விடக் கூடாது என்கிறாள் ஒளவை.
"ரொம்ப பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது"
"நாலு நாளா உடம்பு சரியில்லை"
"வீட்டுல கொஞ்சம் விருந்தாளிங்க வந்துட்டாங்க ..கொஞ்சம் பிஸி " (என்ன நாலஞ்சு நாளா பிளாக் படிக்கல போல அப்படினு கேட்டா)
"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, பக்கத்து வீட்டு மாடு கன்னு போட்டு இருக்கு, ஊருக்குள்ள நல்ல மழை, மாமனார் திவசம், "
என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள், படிக்காமல் இருப்பதற்கு.
ஒரு சாக்கும் சொல்லக் கூடாது.
ஓதுவது ஒழியேல்.
படிப்பதை நிறுத்தாதே.
வாழ்வின் கடைசி நாள் வரை, நாழிகை வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சாப்பிடுவது ஒழியேல், ஊர் சுற்றுவது ஒழியேல் அப்படினு சொல்ல வில்லை.
ஓதுவது ஒழியேல் என்று கூறினாள்.
தினம் ஒரு பத்து பக்கமாவது நல்ல செய்திகளை படியுங்கள்.
பாட்டி சொல்லைத் தட்டாதே.
https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_3.html
நல்ல அறிவுரை!
ReplyDelete