Sunday, March 8, 2020

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேற முடியும். 

குடும்ப உறவில், உடல் ஆரோக்கியத்தில், செல்வம் சேர்ப்பதில், புகழ் அடைவதில், அறிவை பெருக்குவதில் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாம் அதில் பெரிய முன்னேற்றம் காண முடியும். 

இருந்தும், நாம் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்த மாதிரி தெரியவில்லையே. 

ஏன்? 

நம்மிடம் போதுமான அறிவு இருக்கிறது. நம்மை விட அறிவு குறைந்தவர்கள் எல்லாம் எப்படியெல்லாமோ உயர்ந்து இருக்கிறார்கள். 

நல்ல உடல் வலிமை இருக்கிறது. கை , கால், கண், மூக்கு, மூளை எல்லாம் சரியாக செயல்படுகிறது. 

இருந்தும் ஏன் சாதிக்க முடியவில்லை?

காரணம், ஒரு வேலையை செய்வதால் வரும் துன்பத்தை சகித்து கொள்ள முடியாமல் அதை தொடங்குவது இல்லை அல்லது தொடங்கினால் முடிவு வரை தொடர்வது இல்லை. 

ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, தள்ளிப் போட்டு விடுவது அல்லது அது சரியா வரல , சரிப்படாது என்று கூறி தொடங்கியதை பாதியில் விட்டு விடுவது. 

படிப்பதாக இருக்கட்டும், உடற் பயிற்சியாக இருக்கட்டும்,  உணவு கட்டுப்பாடாக இருக்கட்டும், உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பணத்தை எதில் , எப்படி முதலீடு செய்வது என்று அறிந்து கொண்டு செயல்படுவதாக இருக்கட்டும்...எல்லாவற்றிலும் ஓரளவுக்கு மேல் அதை செய்வதால் வரும் துன்பத்தை  பொறுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். 

சாதனை செய்தவர்கள் எல்லாம், அந்த வலியை , துன்பத்தை பொறுத்துக் கொண்டு மேலே  சென்றவர்கள். 

சாதிக்க வேண்டும் என்றால் உடல் உழைப்பு வேண்டும், தூக்கம் குறைக்க வேண்டும், சோம்பல் இருக்கக் கூடாது, தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். 

"முடியல...கால் வலிக்குது, முதுகு வலிக்குது, கண் வலிக்குது," என்று விட்டு விட்டால், எங்கிருந்து சாதனை வரும். 

ஒளவை ரெண்டே வார்த்தையில் சொன்னாள் 


"துன்பத்திற் கிடங்கொடேல்"

துன்பம் வரும். அதுக்கு இருக்க இடம் கொடுக்கக் கூடாது. விரட்டி அடித்து விட வேண்டும். 

"சீ போ...இங்க வராத...வேற எங்காவது போ " என்று விரட்டி விட வேண்டும். 

கொஞ்சம் துன்பம் வந்தவுடன் 

"ஐயோ, முடியலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது. எடுத்தது எல்லாம் தடங்கல், ஒண்ணாவது போன உடனே நடக்குதா" என்று அலுத்துக் கொண்டு தொடங்கிய வேலையை விட்டு விடுவது.

துன்பம் வந்தால், அது என்னவோ அழையா விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போகட்டும் நாம் நம்  வேலையை பார்ப்போம் என்று முயற்சியை கை விட்டு விடக் கூடாது. 


தடங்கல் வரும், தோல்வி வரும், காலம் இழுக்கும், பண விரயம் ஆகும், உடல் சோர்வு வரும், மனச் சோர்வு வரும். 

இவற்றால் வரும் துன்பத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. 

தொடங்கிய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிக்கோளை எட்டும் வரை. 

துன்பத்தைக் கொண்டு துவண்டு விடக் கூடாது.  துன்பத்தை சகிக்க படிக்க வேண்டும். அதை உதாசீனப் படுத்த பழக வேண்டும். 

"ஏய் துன்பமே, இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நான் இல்லை"  என்று அதைப் பார்த்து கை ஆட்டி விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். 

"துன்பத்திற்கு இடம் கொடேல்"

இடம் கொடுப்பீர்களா?


1 comment: