திருக்குறள் - பெறுவது என்?
இந்த தமிழ் இலக்கியம் எப்பப் பார்த்தாலும் ஏதாவது அறிவுரை சொல்லும், இல்லை என்றால் பக்தி, கடவுள், வீடு பேறு , அறம் என்று பஜனை மடம் போல இருக்கும் என்ற நினைப்பு பலருக்கு வரலாம்.
எப்பப்பாரு, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, பெண்களை கண்டபடி ஏசுவது, இல்லைனா இறைவா நீ அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன், உனக்குத் தெரியாதா, என்னை காப்பாற்று என்று ஓலம் இடுவது. இதுதான் வாழ்க்கையா.
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா. எவ்வளவு இன்பம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டு விட்டு சாமியாரா போ, காட்டுக்குப் போ, கோயில் குளம் னு திரினு சொன்னா யார் கேட்பா என்று ஒரு எண்ணம் வரலாம்.
அவர்கள், தமிழ் இலக்கியத்தை முழுமையாக படிக்காதவர்கள்.
வள்ளுவர் சொல்கிறார்.
கல்யாணம் பண்ணிக் கொள். மனைவி கூட சந்தோஷமா இரு. பிள்ளைகளை பெற்றுக் கொள். குடும்ப வாழ்வில், அன்பு திகட்ட திகட்ட அனுபவி. தப்பு தண்டா செய்யாதே. உனக்கு கிடைத்ததை பகுத்து உண்டு வாழ்.
அப்படி எல்லாம் வாழ்ந்தால், இந்த துறவறம், சாமியாரா போவது, காட்டுக்குப் போவது, எல்லாம் எதுக்கு? தேவையே இல்லை. இதுதான் சுவர்க்கம். இதுதான் வீடு பேறு . இதுதான் ஆனந்தம். அனுபவி என்கிறார்.
பாடல்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
பொருள்
அறத்தாற்றின் = அறத்து + ஆற்றின் என்று இரண்டா பிரிச்சுக்கணும். அறத்தின் வழியில். ஆறு என்றால் வழி.
இல்வாழ்க்கை ஆற்றின் = இல்வாழ்க்கை சென்றால், நடத்தினால்
புறத்தாற்றில் = புற வழிகளில். அதாவது இல்லறம் அல்லாத புற வழிகளில்
போஒய்ப் = சென்று
பெறுவது எவன்? = பெறுவது என்ன? (ஒன்றும் இல்லை)
இல்வாழ்க்கை இனிமையாக அமைந்து விட்டால், வீடு பேறு ,சுவர்க்கம், வானுலகம் எல்லாம் தானே வரும். இதுக்காக தனியா முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம் என்கிறார். இல்லறமே போதும் என்கிறார்.
இல்லறம் என்று அவர் சொல்வது முன் சொன்ன 6 குறள்கள்.
11 கடமைகள். அன்பும் அறனும் நிறைத்த குடும்ப வாழ்க்கை. பகுத்துண்டு வாழும் வாழ்க்கை.
இங்கே ஒரு முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும்.
பொதுவாக நாம் திருக்குறள் படிக்கும் போது , ஒவ்வொரு குறளும் தனியானது என்று அவற்றை தனித்தனியே படிக்கிறோம்.
அது தவறு.
ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு அதிகாரத்தில் , ஒவ்வொரு குறளும் தொடர்பு கொண்டவை.
இந்தக் குறளில் சொல்லப்பட்ட "அறத்தாற்றின் இல் வாழ்க்கை" என்பது முந்தைய 6 குறளிலும் சொல்லப்பட்டவை. அவற்றை ஒரு முறை மீண்டும் படித்து விடுங்கள்.
இன்னும் வர இருக்கின்ற குறள்களும், இவற்றோடு தொடர்பு கொண்டவை.
தனித்தனியே படிக்கக் கூடாது.
திருக்குறள் வாழ்க்கையை சொல்லிக் கொண்டு வருகிறது. அது எப்படி தனியாக இருக்க முடியும்.
சரியா ?
மீண்டும் குறளுக்கு வருவோம்.
அப்படி என்றால், இந்த சாமியாராகப் போனவர்கள், துறவிகள் எல்லாம் செய்வது தவறா?
இல்லறம் நன்றாக இருந்தால், வேற வழி ஒன்றும் வேண்டாம் என்கிறார். அப்படி என்றால், வேற வழியில் போனவர்கள் யாராக இருக்கும் என்பதை நம் சிந்தனைக்கு விட்டு விடுகிறார்.
இல்வாழ்க்கை இனிமையாக இருந்தால், இந்த கோவிலுக்குப் போவது, கிரி வலம் வருவது, மொட்டை அடிப்பது, பாத யாத்திரை போவது, அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, பாராயணம் செய்வது என்பது எல்லாம் தேவையே இல்லை.
"எவன் செய்யும்?" என்று கேட்கிறார்.
அதெலாம் யார் செய்வா? எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
உன் இல்லறத்தை நீ கவனி. மத்ததெல்லாம் தேவையே இல்லை என்கிறார்.
சரி, நல்ல குடும்ப வாழ்க்கை நடத்தினால் போதுமா? அவ்வளவு தானா?
பொறுங்கள். வள்ளுவர் கூட்டிக் கொண்டு போகிறார் நம்மை. அவர் கை பிடித்துச் செல்வோம்.
interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_7.html
.தனித் தனியாக படிக்காமல் முழுமையாக படித்தால் தான் அவர் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளமுடியும் என்பதை அருமையாக சொன்னீர்கள்
ReplyDelete