Wednesday, March 4, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை 


நம்மாழ்வார் பாசுரம்.


புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.

என்ன இது? ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே. புகழ்வோம் அப்படினு சொல்லிட்டு, அடுத்த வார்த்தையில் பழிப்போம் அப்படினு சொல்கிறார்.

அதே மாதிரி, புகழோம், பழியோம், இகழ்வோம், மதிப்போம், மதியோம் என்று போட்டு குழப்புகிறாரே.

இறைவன் மேல் உள்ள பல பாசுரங்கள், பாடல்கள் எல்லாம் அவனை போற்றி மகிழ்கின்றன. நாம் போற்றி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

நமச்சிவாய வாழ்க என்று சொன்னால் அவர் வாழப் போகிறாரா?

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு என்று வாழ்த்தினதால் அவர் வாழப் போகிறாரா?

இல்லையே. பின் எதற்கு இந்த வாழ்த்து?

S P பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ் போன்ற பெரிய பாடகர்கள் பாடலை கேட்டுவிட்டு, சங்கீதம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் நான், "நீங்க நல்லா பாடுனீங்க " என்று  புகழ்ந்தால் அது அவர்களுக்கு பெருமையா, சிறுமையா? "இவன் எல்லாம் வந்து சொல்ற அளவுக்கு நம் நிலைமை மோசமா ஆயிருச்சா " என்று தலையில் அடித்துக் கொள்வார்கள் இல்லையா?. அவர்கள் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொல்ல எனக்கு கொஞ்சமாவது சங்கீதம் தெரிய வேண்டும் அல்லவா?

அது போல, இறைவனை நாம் புகழ்வது, அவரை இகழ்வது போலத்தான். 

சரி, புகழ்வது தான் இகழ்வது போல இருக்கிறது என்றால், புகழாமல் இருந்து விட்டாலோ? புகழாமல் இருந்தால், அந்த இகழ்ச்சி வராது அல்லவா?

சரி, அப்படினு சும்மா இருந்தால், அதுவும் ஒரு இகழ்ச்சி தானே.

வீட்டில் மனைவி ருசியாக சமைத்துப் போடுகிறாள். சாப்பிட்டுவிட்டு, சும்மா வாயை மூடிக் கொண்டு போனால், அது அந்த சாப்பாட்டைப் பற்றி சிறப்பாக சொல்ல   ஒன்றும் இல்லை. அதனால் பேசாமல் எழுந்து விட்டேன் என்று சொல்லுவது போல  ஆகிவிடும் அல்லவா?

அல்லது, "நல்லா இருக்குனு சொல்லிட்டா  என்ன, வாயில இருந்து முத்தா உதிந்திரும்...பெரிய ஆளுன்னு நினைப்பு" என்று நாம் மௌனம் கூட ஏதோ நாம் அந்த   சாப்பாட்டை இகழ்வது மாதிரி தோணலாம்.




புகழ்வோம் பழிப்போம்  = நாம் புகழ்வது பழிப்பது மாதிரித்தான்.


புகழோம் பழியோம் = சரி, புகழாமல் இருந்து விட்டால், பழிக்காமல் இருந்து விடலாம்  என்று நினைத்தால்

இகழ்வோம் = இவ்வளவு செய்த கடவுளை புகழ்ந்து ஒரு வார்த்தையை சொல்லாமல்  வாய் மூடி இருந்தால், அது அவரை இகழ்ந்த மாதிரி ஆகிவிடும்.

எனவே, சும்மா இருக்கும் போது, இறைவனை இகழ்வது மாதிரி.

மதிப்போம் =  வெளியே சொல்ல வேண்டாம். மனதுக்குள்ளேயே ஒரு மதிப்பும்  மரியாதையும் வைத்துக் கொள்வோம் என்று பார்த்தால்.


மதியோம் = நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்கள் அவனை மனதில் வைத்து இருப்பது, அவனுக்கு ஒரு மதிப்பற்ற செயல் தான். இல்லையா?

இகழோம் = சரி, அப்படியா சங்கதி, அவனை நாம் மனதில் நினைப்பது அவனுக்கு இகழ்ச்சி என்றால், நாம் அவனை இகழ மாட்டோம்

மற்றெங்கள் = மாற்று எங்கள்

மால்  = மயக்கம் கொண்டவனே

செங்கண்மால் = சிவந்த கண்களை கொண்ட திருமாலே

சீறல் நீ = எங்கள் மேல் கோபம் கொள்ளாதே

தீவினையோம் = தீய வினைகள் உடைய நாங்கள்

எங்கள்மால் = நீ எங்க ஆளு

கண்டாய் இவை. = இதெல்லாம் உனக்குத் தெரியும்தானே

பக்தியின் உன்மத்த நிலை. என்ன செய்வது அறியாத தவிப்பு.

செய்தாலும் தப்பு. செய்யாவிட்டாலும் தப்பு.

நான் என்ன செய்தாலும் தப்பாகத்தான் போகப் போகிறது.

என் மேல கோபப் படாதே....என்று உருகுகிறார் நம்மாழ்வார்

இந்த ஒரு பாட்டுக்கே கண் கலங்குது. 4000 பாசுரம் இருக்கு இப்படி.

ஒரு வாழ்நாள் போதுமா?

தினம் ஒரு பாசுரம் படித்தாலும், பத்து வருடம் ஆகும் 3650 பாசுரம் படித்து முடிக்க.

அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_4.html



2 comments:

  1. நிஜமாகவே கண் கலங்க வைக்கும் பாடல்! என்ன வார்த்தை நயம்.

    அருமையான உரை. இந்த உரை இல்லாவிட்டால் ஒன்றும் புரிந்திருக்காது.

    நன்றி.

    ReplyDelete
  2. அருமை அருமை சகோதரரே.. வாழ்க வாழ்க...

    ReplyDelete