Saturday, October 17, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம்

 திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம் 

மழை பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நாம் என்ன எழுதுவோம்?

மழை எப்படி உருவாகிறது, நீர் ஆவியாவது, அது மேகமாக மாறுவது, பின் அது குளிர்ந்து மழையாகப் பெய்வது பற்றி எழுதுவோம். எங்கே எவ்வளவு பெய்கிறது போன்ற குறிப்புகளை சேர்க்கலாம்.

மழை பற்றி வள்ளுவர் 10 குறள் எழுதி இருக்கிறார். 

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. 


முதல் குறள் , "வானத்தில் இருந்து உலகுக்கு வழங்கி வருவதால், மழை அமுதம் என்று உணரப் படும்" 


பாடல் 

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_17.html


(please click the link above to continue reading)


வானின்று = வானத்தில் இருந்து 

உலகம் = உலகிற்கு 

வழங்கி வருதலால் = கொடுத்து வருவதால் 

தான் = அது 

அமிழ்தம் = அமிழ்தம் 

என்றுணரற் பாற்று = என்று உணரப் படுகிறது. 


சரி. இதில் என்ன இருக்கிறது? மழை நல்லது தான், அதை அமிழ்தம் என்கிறார். இதில் என்ன பெரிய  விஷயம் இருக்கிறது ?


அர்த்தத்துக்கு அப்புறம் வருவோம். 

மொத்தம் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இதில் வான் சிறப்பு என்ற மழை பற்றிய அதிகாரத்தை எங்கே வைக்கலாம்?


எங்க வச்சா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு முறை வேண்டும் அல்லவா? 

காமத்துப் பாலில் கொண்டு போய் வான் சிறப்பு வைக்க முடியுமா?

இரண்டாவது அதிகாரமாக இதை வைக்கிறார். 

கடவுள் வாழ்த்து முடிந்த பின் அடுத்ததாக இதை வைக்கிறார். 

என்ன அர்த்தம்?

கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மழை என்று அதன் முக்கியத்துவத்தை  காட்ட வேண்டி, இந்த அதிகாரத்தை அங்கு கொண்டு போய் வைக்கிறார். 

அடுத்ததது, 

"உலகுக்கு"...உலகம் என்றால் என்ன? உலகம் என்றால் இங்கு உயிரினங்களை குறிப்பது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகள்,பறைவைகள், தாவரங்கள்  என்று அனைத்து உயிர்களுக்கும் மழை வேண்டும். எனவே "உலகுக்கு"  துன்று கூறுகிறார். 


"அமிழ்து"...அமிழ்தம் என்றால் உயிரையும், உடலையும் ஒன்றாக வைத்த்து இருப்பது.  அதாவது அமிழ்தம் உண்டவர்கள் சாக மாட்டார்கள். அவர்களின் உடலும், உயிரும் ஒன்றாகவே இருக்கும். 


ஆஹா , மாட்டுனார் வள்ளுவர். மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் சாகமலா இருக்கிறார்கள். பின்ன எப்படி மழையை அமிழ்தம் அப்படினு  சொல்ல முடியும்? தப்பு தான?  

வள்ளுவர் பிழை செய்வாரா?

ஒரு தனி மனிதன் இறந்து போகலாம். ஆனால், மனித குலம் சாகாமல் உயிரோடு இருக்கிறதே. அதனால் அதை அமுதம் என்றார் . மனித குலம் மட்டும் அல்ல, தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் நிலைத்து அவற்றின் உடலும் உயிருமாக இருக்கிறது அல்லவா? மழை இல்லாவிட்டால், எல்லாம் அழிந்து போகும். எனவே அதை அமுதம் என்றார். 

நமக்கு ஒரு விலைமதிப்பற்ற பொருள் கிடைத்தால் அதை என்ன செய்வோம். அதை எப்படி போற்றி பாதுகாப்போம்? மழை அமுதம் என்றதனால், அது எவ்வளவு உயர்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை போற்றி பாதுகாக்க வேண்டும். 

ஆற்றில் மணல் அள்ளுவது, ஏரியில் பிளாட் போட்டு குடி இருப்பது, கழிவு நீரை குடி நீர் தரும் நீர் நிலைகளில் கொண்டு போய் சேர்ப்பது, வீணாக மழை நீரை கடலில் போய் சேர விடுவது என்பதெல்லாம் மழைக்கு நாம் தரும் மரியாதைகள் அல்ல. அமுதத்தில் அழுக்கு தண்ணீரை விடுவோமா? 

உயிர் காக்கும் அமுதம் போல அதை பாதுகாக்க வேண்டும். 

"வான் நின்று". நின்று என்றால் நிலையாக, உறுதியாக என்று பொருள். எப்போதும் பெய்வதால். ஏதோ அஞ்சு வருடத்துக்கு ஒரு முறை, பத்து வருடத்துக்கு ஒரு முறை என்று இல்லாமல், எல்லா வருடமும் பெய்யும். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். ஆனால், வரும்.

"உணரப் படும்" என்றார். சொல்லிப் புரியாது. பார்த்து, அனுபவித்து, உணர வேண்டும். தண்ணீரின் மகத்துவம் அது இல்லாத போது தான் உணர முடியும். தாகத்தில் நாக்கு வரளும் போதுதான் ஒரு குவளை நீரின் அருமை தெரியும். 


ஒரு குறள் இது. இன்னும் ஒன்பது இருக்கிறது. 


சிலிர்கிறது அல்லவா?






1 comment: