Tuesday, October 27, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்


என்ன சொல்லியும் கேட்க மாட்டான் என்று அறிந்து, இராவவணனை விட்டு வீடணன் விலகினான் என்று நேற்றுப் பார்த்தோம். 

வீடணனோடு, அவனுடைய அமைச்சர்களும் உடன் வந்தார்கள். 

அவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்? 

அது கேள்வி.


அவர்கள் இராமனும் அவன் படையும் இருக்கும் இடமான கடற் கரைக்கு வந்தார்கள். 


நீங்கள் இரவில் ஒரு உயரமான இடத்தில் இருந்து ஒரு ஊரைப் பார்த்தால் எப்படித் தெரியும்?  தெருவெங்கும் விளக்குகள் எரியும். கை நிறைய வைரக் கற்களை எடுத்து விசிறி எறிந்த மாதிரி ஒளி விடும் அல்லவா? 


வீடணனும், அவன் அமைச்சர்களும் கடற்கரைக்கு வந்து பார்க்கிறார்கள்.


இரவு நேரம். தீ பந்தங்கள் எரிகின்றன. நிலவொளியில் அந்த மணற்பரப்பு பால் போல கிடக்கிறது. எரியும் தீப்பந்தங்கள் அந்த பாற்கடலில் முளைத்த தாமரை மலர்களைப் போல்  சிவந்த நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிகிறது. 


கம்பனின் கற்பனை வளம். 

 

பாடல் 

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,

விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்

வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,

களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_27.html

Pl click the above link to continue reading


அளக்கரைக் = கடற்கரை 

கடந்து = சென்று 

மேல் அறிந்து = மேல் நின்று பார்க்கும் போது 

நம்பியும் = வீடணனும் 

விளக்கு ஒளி பரத்தலின் = தீப்பந்தங்களின் ஒளி அங்கொன்றும் இங்கொன்றுமாக  தெரிவது 


பாலின் வெண் கடல் = பாற்கடலில் 


வளத் = வளமையான , செழிப்பான 

தடந் தாமரை மலர்ந்ததாம் என = குளிர்ந்த தாமரை மலர்கள் மலர்ந்து இருந்ததைப் போல 


களப் = போர் களத்தில் 

பெருந் தானையைக்  = பெரிய படையை 

கண்ணின் நோக்கினான். = கண்ணால் கண்டான் 


பயம், போட்டி, பொறாமை, போன்றவற்றால் நம் மனம் நாளும் குறுகிப் போகிறது. 

குறுகிய மனத்தை விரிவாக்க இலக்கியங்கள் உதவுகின்றன. 


இப்படி ஒரு காட்சியை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


கற்பனை விரியும்.மனமும்தான்.




No comments:

Post a Comment