Friday, October 16, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

சாகப் போகிறவனுக்கு மருந்து கசக்கும் என்பார்கள். அதாவது இனிப்பு மருந்து கூட கசக்குமாம். 

தீயவர்களுக்கு, நல்லது சொன்னால் கூட, அது அவர்களுக்கு துன்பம் நிறைந்ததாகவே தெரியும். அப்படி தங்களுக்கு துன்பம் தந்தவர்களை அவர்கள் பதிலுக்கு துன்பம் செய்யத் தயங்க மாட்டார்கள். 

எனவே, தீயவர்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 

அதனால் தான், ஒளவை சொன்னாள், "மற்றவர் தம் கண்ணில் படாது தூரத்து நீங்குவதே நல்ல நெறி" என்று. 


சீதையை விட்டு விடு என்று வீடணன் சொன்னது இராவணன் காதில் ஏறவில்லை. மாறாக அவன் வீடணனின் நல்ல எண்ணத்தை சந்தேகப் படுகிறான். 


"எங்கு வந்த மனிதர்களை நீ விரும்புகிறாய். அவர்களோடு நட்பு பாராட்டுகிறாய். என்னை வெற்றி அடைய நினைக்கிறாய். என்னை வென்று இந்த இலங்கைக்கு அரசனாக நினைக்கிறாய். உன் செயல்கள் எல்லாம் மிக வன்மை உள்ளது. உன்னை போல் ஒருவர் இருந்தால் எனக்கு வேறு ஒரு பகைவர் வேண்டாம். நீ ஒருவனே போதும்"


என்று சுடு சொற்கள் கூறுகிறான். 

பாடல் 

நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ?


பொருள் 

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_16.html


நண்ணின = நெருங்கி இங்கு வந்த 

மனிதர்பால் = மனிதர்கள் பால் 

நண்பு பூண்டனை; = நட்பு கொண்டாய் 

எண்ணினை செய்வினை = அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை சிந்தித்து வைத்து இருக்கிறாய் 

 என்னை வெல்லுமாறு = என்னை வெற்றி கொள்ள 

உன்னினை = நினைக்கிறாய் 


அரசின்மேல் ஆசை ஊன்றினை; = இந்த இலங்கை அரசின் மேல் ஆசை வைத்து இருக்கிறாய் 


திண்ணிது உன் செயல் = உறுதியானது உன் செயல் 

பிறர் செறுநர் வேண்டுமோ ? = வேறு பகைவர்களும் வேண்டுமோ? (வேண்டாம் நீ ஒருவனே போதும்) 


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

என்பார் வள்ளுவப் பேராசான். திண்ணியர் என்ற சொல் எப்படி கையாளப் படுகிறது  என்பதற்கு ஒரு உதாரணம்.  

"நீ என்னை வென்று, இந்த அரசை அடையும் முயற்சியில் திண்ணமாக இருக்கிறாய் " என்று சொல்கிறான்  இராவணன். 



No comments:

Post a Comment