Monday, October 30, 2023

நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு

 நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு 


நான் மணிக்கடிகை என்ற நூல் நான்கு மணி போன்ற விடயங்களை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கோர்த்து மாலை போல் தருகிறது. 


மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்குத் தேவையான, சில சமயம் நாம் மறந்தோ அல்லது தெரியாமலோ செய்துவிடும் விடயங்கள். 


ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வது பயன் தரும். 


நம்மைவிட செல்வத்தில், படிப்பில், பதவியில், அறிவில் குறைந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களை நாம் தினமும் சந்திப்போம். 


நம்மைவிட எளியவர்கள் தானே என்று ஒரு போதும் அவர்களை ஏளனம் செய்து விடக் கூடாது. காரணம், காலம் யாரை எப்போது எங்கே கொண்டு வைக்கும் என்று தெரியாது. 


கூனி தானே, வயதானவள், பெண், கூன் விழுந்தவள், பணிப்பெண் நானோ சக்கரவர்த்தி திருமகன் என்று இராமன் நினைத்து அவள் மேல் விளையாட்டாக மண் உருண்டையை அடித்தான். 


அவள் நேரம் பார்த்து தாக்கினாள். இராமன் அரசை இழந்து, காட்டில் பதினாலு வருடம் துன்பப் பட்டான். அதை அவனே சுக்ரீவனிடம் சொல்கிறான். 


இரண்டாவது, எவ்வளவு நல்ல பொருள் என்றாலும், தீயவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது. காரணம், இன்று உயர்ந்த பொருளை கொடுத்தவன் பதிலுக்கு நாளை ஏதாவது தீய செயலில் நம்மை இழுத்து விட்டுவிடுவான். எவ்வளவு அவசரமாக இருந்தாலும்,  தீயவர்களிடம் இருந்து  ஒரு பொருளை பெற்றுக் கொள்ளக் கூடாது. 


மூன்றாவது,  தாழ்ந்தவர்கள் நம் உள்ளம் சுடும்படி பேசினாலும் பதிலுக்கு பேசக் கூடாது. காரணம், அவன் நிலைக்கு அவன் பேசுகிறான். நாம் ஏன் நம் நிலையை தாழ்த்திக் கொள்ள வேண்டும். நாய் குரைக்கிறது என்றால் பதிலுக்கு குரைக்க வேண்டுமா?  


நான்காவது,  கூறக் கூடாத சொற்களை ஒரு போதும் கூறிவிடக் கூடாது. கோபத்தில் வார்த்தை விழுந்து விட்டால் பின் அதை மீட்க முடியாது. மிகப் பெரிய துன்பத்தில், உறவில் பெரிய குழப்பத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தைகளை பேசும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தீய சொற்கள், சுடு சொற்கள், உண்மை அல்லாத சொற்கள், புறம் சொல்லும் சொற்கள் போன்றவற்றை ஒரு காலும் பேசக் கூடாது. 


பாடல் 


எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_30.html


(pl click the above link to continue reading)



எள்ளற்க = ஏளனம் செய்யாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் = எளியவர் என்று எண்ணி, நினைத்து 


என் பெறினும் = எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் க் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா = பெற்றுக் கொடுக்கும் தகுதி இல்லாதவர் கை மேலே இருக்கும் படி 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க = கோபிக்கக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = சின்ன + இல்லத்தில் + பிறந்தவரை = அதாவது தாழ்ந்தவர்களை, ஏழைகளை, வசதி இல்லாதவர்களை 


கூறற்க = சொல்லக் கூடாது 


கூறல் லவற்றை = கூறக் கூடாதவற்றை 


விரைந்து = விரைவாக 


சில சமயம் மற்றவர்கள ஏதாவது பேசும் போது, அது நம்மை சுட்டு விடலாம். கோபித்து, உடனே பதிலுக்கு நாம் ஏதாவது சொல்லிவிடுவோம்.  பொறு. கொஞ்சம் பொறுமையாக இரு. அவசரப்படாதே. 


"விரைந்து" சொல்லாதே.  ஆறப் போடு என்கிறது செய்யுள். 


யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வில் இந்தத் தவறுகளை எவ்வளவு செய்து இருக்கிறோம் என்று தெரியும். 


கிண்டல் செய்கிறேன், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் என்று எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டி இருப்போம்.


கோபத்தில் வார்த்தையை விட்டு, பின்னால் வருந்தி இருப்போம். ச்சே, அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று நாமே நம்மை கண்டித்து இருப்போம். 


அலுவலகத்தில் நமக்கு கீழே இருக்கும் ஒருவரை பற்றி நாம் ஏதோ சொல்லப் போக, அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு, நம்மை பற்றி மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி நமக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்கி இருப்பார். 


இது எல்லாம் ஏதோ நமக்கு மட்டும் நிகழ்வது என்று நினைக்கக் கூடாது. எல்லோருக்கும் எப்போதும் நிகழும் ஒன்று.  எனவேதான் அதை ஒரு நீதியாக போதிக்கிறது இந்த நூல். 


மொத்தம் நூற்றி நான்கு பாடல்கள் இருக்கின்றன. 


எல்லாவற்றையும் ஒரு முறை வாசித்து விடுங்கள். நல்ல விடயம்தானே. 



1 comment:

  1. தமிழ் இலக்கியங்கள் வழியாக மக்களை அறவாழ்வு நோக்கி அழைத்து செல்லும் தங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்! வளர்க தங்கள் பணி தமிழ் போல் பல்லாண்டு பல்லாண்டு!

    ReplyDelete