Wednesday, October 4, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி 


யுத்த காண்டத்தில் என்ன இருக்கப் போகிறது. இவன் அவனை வெட்டினான், அவன் இவனைக் கொன்றான் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். "இன்று போய் நாளை வா" போன்ற பஞ்ச் டயலாக் ஓரிரண்டு இருக்கலாம் என்பதுதான் பொதுவான அப்பிராயம். 


அது ஒரு புறம் இருக்க....


கணவன் மனைவி உறவு, அதில் எழும் சிக்கல்கள், அண்ணன் தம்பி பாசம், அப்பா மகன் வாஞ்சை, பாகப் பிரிவு, நட்பு இதெல்லாம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். அதைப் பற்றி எல்லாம் எல்லோருக்கும் அனுபவம் இருக்கும். கம்பன் அவற்றை மிக நுணுக்கமாக, அழகாக, ஆழமாக சொல்லி இருக்கிறான்.  அவை நித்தமும் நம்மை சுற்றி நிகழ்பவை. 


கம்பன் வாழ்விலும், அவன் வாழ்ந்த சூழ் நிலையிலும் இவை எல்லாம் இருந்து இருக்கும். 


யுத்தம் என்பதை எத்தனை பேர் நேரில் பார்த்து இருக்கிறோம். அது பற்றி நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது. ஏதோ கதையில், சினிமாவில் பார்த்து இருக்கலாம். யுத்தம் என்றால் ஏதோ கத்தி, துப்பாக்கி கொண்டு சண்டை போடுவது மாத்திரம் அல்ல. யுத்தம் பற்றி சிந்திப்பது, எப்படி ஆலோசனை செய்வது, யாரை எப்படி அனுப்புவது, இழப்புகளை எப்படி சமாளிப்பது, எதிரியை எப்படி எடை போடுவது, இப்படி பல விடயங்கள் இருக்கின்றன. சண்டை போடும் வீரனுக்குக் கூட இது எல்லாம் தெரியாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_4.html


(click the above link to continue reading)


கம்பன் விவரிக்கும் யுத்த காண்டம் மிக விரிவானது, ஆழமானது, அதிசயிக்கும் படி இருக்கிறது. எப்படி இந்த மனிதனால் இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஏதோ நேரில் பார்த்த மாதிரி எழுதி இருக்கிறாரே என்று நமக்கு வியப்பாக இருக்கும். கம்பன் போர் களத்துக்குப் போய் இருக்க மாட்டான். கத்தி எடுத்து சண்டை போட்டிருக்க மாட்டான். பின் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடிந்தது. அவன் ஒரு தெய்வப் புலவன் என்பதற்கு இந்த யுத்த காண்டம் இன்னொரு சாட்சி. 


ஆடு மட்டும் அல்ல, சண்டையை எப்படி அழகாகச் சொல்ல முடியும்? தலையை வெட்டினான், இரத்தம் பீரிட்டு வந்தது, கை உடைந்தது, கால் முறிந்தது என்பதை அழகாக எப்படி சொல்வது? 


சொல்கிறானே. படு பாவி, அதையும் இவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறானே. 


உதரணத்துக்கு, இந்திர சித்து இறந்து போகிறான். இராவணன் அவன் மேல் விழுந்து அழுகிறான். ஒரு பத்துப் பாடல் இருக்கிறது. அதைப் படித்து விட்டு இரசிகமணி டி கே சி கூறினார் "இப்படி பத்துப் பாடல் கிடைக்கும் என்றால் இன்னும் இரண்டு மூணு பிள்ளைகளை போரில் இழக்கலாமே" என்று. அவ்வளவு  அருமையான பாடல்கள். உலகையே புரட்டிப் போட்ட இராவணனை புரட்டிப் போட்ட சோகம் அது. 


அவன் சோகத்தை கண்டு வருந்துவதா, அதை இப்படி அழகாகச் சொல்லி இருக்கிறானே என்று வியப்பதா என்று நாம் செயலற்று நிற்கும் இடங்கள் அவை.  


யுத்தத்தில், வீரம், சந்தேகம், பாசம், கண்ணீர், இறுமாப்பு, உறுதி என்ற உணர்சிக் கொந்தளிப்புகள் உண்டு. 


கம்பன் அத்தனையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். 


ஒரு புறம் மனைவியை இழந்து, வருந்தி, கோபம் கொண்டு, சண்டை போட வந்திருக்கும் இராமன். 


மறுபுறம் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை, குரங்கு வந்து நாட்டை எரித்து விட்டுப் போய் விட்டது, மனிதர்களை எதிர்த்து சண்டை செய்ய வேண்டும், நம் பலம் என்ன, வரம் என்ன, பராகிரமம் என்ன என்று தோள் தட்டி நிற்கும் இராவணன் மறு புறம். 


காய் நகர்த்த வேண்டும். 


ஒரு தேர்ந்த டைரக்டர் மாதிரி, காமெராவை அங்கும் இங்கும் நகர்த்துகிறான் கம்பன். 


யுத்த காண்டத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து போவீர்கள் என்பதில் அணுவளவும் எனக்கு சந்தேகம் இல்லை. 


வாருங்கள், கம்பன் காட்டும் யுத்தத்தை காண்போம். 


இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை போர் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுவாரசியமாக கம்பன் அதைக் காட்டுகிறான். 


கம்ப இராமாயணத்தின் கிளைமாக்ஸ் அது. 


அதற்குப் பின், அக்னிப் பரீட்சை, முடி சூட்டு விழா, என்று படம் முடிந்து விடும். யுத்த காண்டம் தான் கம்ப இராமாயணத்தின் மகுடம் என்பேன். 



2 comments:

  1. சுவாரஸ்யமான முன்னுரை. காத்திருக்கிறேன் பதவுரை காண..

    ReplyDelete
  2. Trailer superb. Waiting for the main picture

    ReplyDelete