நாலடியார் - பீடிலார் செல்வம்
நமக்கு அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. யாரிடமாவது கைமாற்று வாங்க வேண்டிய சூழ்நிலை. ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்து விட முடியு. யாரிடம் கேட்கலாம்?
நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு ரௌடி இருக்கிறான். கொலை, கொள்ளை, என்று பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் கேட்போமா?
அவ்வளவு ஏன், நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்லவர்தான். ஆனாலும், யாருக்கும் ஒரு உதவியும் செய்ய மாட்டார். யார் என்ன கேட்டாலும், ஏதாவது சொல்லி தட்டிக் கழித்து விடுவார். நாம் போய் கேட்டாலும், தரமால் வெறும் கையோடு அனுப்பி விடலாம்.
அவரிடம் கேட்போமா?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
விழாம்பழம் பார்த்து இருக்கிறீர்களா? வெளியே கடினமான ஓடு இருக்கும். கொஞ்சம் முள் இருக்கும். உள்ளே மெதுவான, இனிப்பான பழம் இருக்கும். அந்த பழத்தை வௌவால் நாடி வராது. காரணம், வௌவாலால் அந்த பழத்தை உண்ண முடியாது.
தகுதி, சிறப்பு இல்லாதவரிடம் உள்ள செல்வம் அது போன்றது. யாருக்கும் பயன்படாது.
பாடல்
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_3.html
(please click the above link to continue reading)
அருகல தாகிப் = அருக முடியாமல், அருகில் செல்ல முடியாமல்
பலபழுத்தக் கண்ணும் = பல பழங்களை பழுத்த பின்னும்
பொரிதாள் = பெரிய பட்டையை உடைய
விளவினை = விளா மரத்தை (விளாம் பழம் உள்ள மரத்தை)
வாவல் =வௌவால்
குறுகா = அணுகாது, அதனிடம் செல்லாது
பெரிதணிய ராயினும் = பெரிய செல்வம் உடையவர் ஆயினும்
பீடிலார் = பெருமை இல்லாதவர்
செல்வம் = செல்வம்
கருதுங் = பிறருக்கு பயன் படும் என்று நினைக்கும்
கடப்பாட்ட தன்று = தன்மை உடையது அல்ல .
விளாம் பழத்தை சுவைக்க வேண்டும் என்றால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து சுத்தியலால் அதன் தலையில் இரண்டு போட வேண்டும். போட்டால்,ஓடு உடையும். பின் உள்ளே உள்ளதை எடுத்து உண்ண முடியும்.
சில பேரிடம் உள்ள செல்வம் அப்படித்தான் இருக்கும்.
மாம்பழமா, கொய்யா பழம் போன்ற பழங்களை வௌவால் வந்து கொஞ்சம் உண்டு விட்டு போய் விடும். நம்மிடம் எவ்வளவோ இருக்கிறது. இந்த வௌவாலுக்கு, அணிலுக்கு கொஞ்சம் தந்தால் என்ன என்று அந்த மரங்கள் பெருந்தன்மையாக கொடுக்கும். ஒரு சில பழங்களை கொடுப்பதன் மூலம் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவது இல்லை என்று நினைக்கும்.
மேலும், அந்த பழங்களை கொத்தி தூக்கிச் செல்லும் வௌவால் , அதை உண்டு விட்டு, விதையை வேறு எங்கோ போட்டு விடும். அந்த மரம் அங்கே முளைக்கும்.
எளிய உவமை. சிறந்த கருத்து.
No comments:
Post a Comment