Monday, October 23, 2023

கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?

 கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை மிகக் கொடுமையானது. 


ஆணோ, பெண்ணோ, அவர்களின் உணர்வுகளை தங்களின் துணையிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும். 


சோகம் என்ன என்றால், இராமனும் சீதையும் பிரிந்து இருக்கிறார்கள். இராமன் யாரிடம் சொல்லி தன் உணர்சிகளை பகிர்ந்து கொள்வான்?


இராமனின் சோகத்தை நம் மமீது ஏற்றுகிறான் கம்பன். 


தென் கடற்கரையில், தனியாக நிற்கும் இராமனை முதலில் தென்றல் வருத்தியது, பின் பவளம் வருத்தியது, இங்கு, இப்போது முத்து வருத்துகிறது. 


பவளம், சீதையின் உதடுகளை ஞாபகப் படுத்தி அவனை வருத்தியது. 


முத்து, சீதையின் பல் வரிசையை நினவு படுத்தி வருத்துகிறது. 


கம்பன், அந்த முத்தைப் பார்த்து கேட்கிறான் 


"ஏய் முத்தே, 


சீதை இருக்கும் தூரம் ரொம்பத் தொலைவு இல்லை.  எப்படியாவது இராவணனை வென்று சீதையை மீட்டு வந்து விடலாம் என்று அவன் வீரம் துணை நிற்க. ஒரு பக்கம் நம்பிக்கை, இன்னொரு பக்கம் வீரம் என்று இருந்தாலும், பிரிவும் அவனை வாட்டுகிறது. நாளும் மெலிந்து போகிறான்.

அப்படி இருக்க, எதற்காக சீதையின் பல் வரிசையை ஞாபகப் படுத்தி அவனை நீ வதைக்கிறாய். ஒரு வேளை இராமனை துன்பம் செய்வதால் உனக்கும் அந்த அரக்கர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா" 


என்று. 


பாடல் 




தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,

வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-

ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு? -ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_23.html


(pl click the above link to continue reading)


தூரம் இல்லை = ரொம்ப தூரம் இல்லை 


மயில் இருந்த சூழல் = மயில் போன்ற சீதை இருக்கும் இடம் 


என்று மனம் செல்ல = என்று இராமனின் மனம் சொல்ல 


வீர வில்லின் = வீரம் நிறைந்த வில்லின் 


நெடு மானம் வெல்ல = வென்று விடலாம் என்ற ஆண்மை கொப்பளிக்க 


நாளும் மெலிவானுக்கு = நாளும் மெலிகின்ற இராமனுக்கு 


ஈரம் இல்லா  = மனதில் ஈரம் (கருணை ) கொஞ்சம் கூட இல்லாத 


நிருதரோடு = பகைவர்களோடு 


என்ன உறவு உண்டு உனக்கு = உனக்கு என்ன உறவு ? 


ஏழை = சீதையின் 


மூரல் முறுவல் = பல் தெரியும் புன்சிரிப்பைக்


குறி காட்டி = குறித்து ஞாபகப் படுத்தி 


முத்தே = முத்தே 


உயிரை முடிப்பாயோ? = அவன் உயிரை முடிப்பது என்றே முடிவு செய்து விட்டாயோ ?


ஆண்கள் கவலைப் படுவதை பற்றி பல கதைகளில் படித்து இருக்கிறோம். 


ஆனால் அது பொதுவாக அரசு பறிபோனது, போரில் தோல்வி, வியாபாரத்தில் நட்டம், உடல் நிலை, என்று இருக்கும். 


மனைவியை பிரிந்த கணவனின் சோகத்தை அதிகமாக பார்க்க முடியாது. 


காதலனைப் பிரிந்த காதலியின் சோகம், கணவனை பிரிந்த மனைவியின் சோகம் எளிதாக காணக் கிடைக்கும். 


உடல் மெலிந்து, வளையல் கழண்டு, இடுப்பில் ஆடை நிற்காமல் நெகிழ என்று பிரிவு ஒரு பெண்ணை வாட்டுவதை விவரித்து காட்டும் இலக்கியம் பல. 


மனைவியப் பிரிந்த கணவன் உடல் மெலிந்தான் என்று எங்காவது இருக்கிறதா? 


இராமன் நாளும் மெலிந்தான் என்று கம்பன் மீண்டும்  மீண்டும் சொல்கிறான். 


அதுவும், யுத்த காண்டத்தின் முன்னுரையில்....




1 comment: