கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?
பள்ளியில் படிக்கும் போது முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படித்து மேலே போவோம். எனக்கு நான்காம் வகுப்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. எனவே, நான் நான்காம் வகுப்பை விட்டு மேலே வர மாட்டேன் என்று யாராவது சொல்வார்களா?
அலுவலகத்தில் வேலையில் சேரும் போது ஒரு ஆரம்ப நிலையில் சேர்வோம். பின் நன்றாக வேலை செய்து மேலும் மேலும் பெரிய பெரிய பதவிகளை அடைவோம். நடுவில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு, இது ரொம்ப பிடித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு ஒரு பதவி உயர்வும் வேண்டாம். இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாராவது சொல்வார்களா?
ஆனால், வாழ்வில், பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகள் பெற்றோம்..அவற்றை வளர்த்தோம்...வளர்த்தோம்..வளர்ந்தன...என்று ஒரு இடத்தில் தங்கி விடுகிறோம். அடுத்து என்ன?
இல்லறம் தான் இறுதியா? அதற்கு மேல் ஒன்றும் இல்லையா?
அதற்கு மேல் போகத் தெரியவில்லையா அல்லது போக விருப்பம் இல்லையா?
சில பேருக்கு மேலே போக விருப்பம் இருக்கும், ஆனால் எப்படி போவது, எங்கே போவது என்று தெரியாது. குழப்பமாக இருக்கும்.
சிலருக்கு, நாலாவது வகுப்பு பிடித்து போய் விடுவதைப் போல, இல்லறமே இறுதி என்று இருந்து விடுகிறார்கள்.
இதில் இருந்து விடுபட்டு மேலே செல்வது எப்படி?
பாடல்
சிந்தா குல இல் லொடு செல்வ மெனும்
விந்தா டவி யென்று விடப் பெறுவேன்
மந்தா கினி தந்தி வரோதயனே
கந்தா முருகா கரு ணாகரனே .
சிந்தா குல = சிந்தை + ஆகுலம் = ஆகுலம் என்றால் வருத்தம், குழப்பம், துன்பம் என்று பொருள். சிந்தனை + ஆகுலம் என்றால் மனதுக்கு வருத்தம், குழப்பம் தரும் என்று பொருள்
இல் லொடு = இல்லறத்தோடு
செல்வ மெனும் = செல்வம் என்ற
விந்தா டவி = விந்தை + அடவி = அடவி என்றால் காடு. விந்தா அடவி என்றால் விந்தையான காடு
யென்று = என்று
விடப் பெறுவேன் = விடுவேன்
மந்தா கினி = கங்கை
தந்தி = தந்த
வரோதயனே = வரம் + உதயன் = தேவர்கள் பெற்ற வரத்தினால் உதயம் ஆனவனே
கந்தா = கந்தா
முருகா = முருகா
கரு ணாகரனே = கருணையே வடிவானவனே
இந்த இல்லறம் இருக்கிறதே அது சிந்தையை மயக்கும். ஒரு நாள் இனிமையாக இருப்பது போலத் தெரியும். இன்னொரு நாள் என்னடா இது என்று வெறுப்பு வரும். முன்னும் போக விடாது. பின்னும் போக விடாது. செக்கு மாடு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான்.
அதை ஒரு விந்தையான காடு என்கிறார்.
ஏன் விந்தை என்றால், காட்டுக்குள் போனவன், வெளியே வர வழி தெரியாமல் தவிப்பான். அவன் தான் போனான். போகும் போது காடு, மலை, மரம், அருவி என்று பார்த்துக் கொண்டே போனவன் திரும்ப வழி தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பான். அது போல இந்த இல்லறமும். உள்ளே நுழையத் தெரியும். வெளியே வரத் தெரியாது.
இன்னொன்று, காட்டுக்குள் போவது, அங்கேயே தங்கி விட அல்ல. ஆனால், சிலர் அடடா அருவி எவ்வளவு அழகாக இருக்கிறது, குயில் கூவுகிறது, மயில் ஆடுகிறது என்று அதன் அழகில் மயங்கி அங்கேயே இருந்து விடுகிறார்கள். பின்னால் புலி, சிங்கம் வரும், பாம்பு வரும், கள்ளர்கள் வருவார்கள், பல துன்பங்கள் வரும். அது தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.
எனவே, ஆபத்து நிறைந்தது தெரியாமல் அழகால் மயக்கும் காடு வினோதமான ஒன்று என்கிறார். இல்லறமும் அது போலத்தான்.
நம் வாழ்க்கை முறையை வகுத்த நம் முன்னவர்கள்
அறம், பொருள், இன்பம், வீடு என்று பாதை போட்டார்கள்.
அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக பிரியும்.
இரண்டு அறத்துக்கும் பொருள் வேண்டும். வெறும் பொருளும், அறமும் இருந்தால் போதாது, ஆணும் பெண்ணும் கூடும் இன்பம் வேண்டும்.
ஆனால், இவை எல்லாம் முடிவு அல்ல. முடிவு என்பது வீடு. அதை அடைய இவை எல்லாம் படிக்கட்டுகள். மாடிக்கு போகாமல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாமா?
மேலே போக வேண்டாமா?
அதெல்லாம் இருக்கட்டும், இப்ப சுட சுட ஒரு strong காப்பி கொஞ்சம் சர்க்கரை தூக்கலா போட்டு குடிச்சா எப்படி இருக்கும்....:)
நல்லா தான் இருக்கும் !
ReplyDelete