Pages

Wednesday, October 26, 2022

கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே

        

 கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சும்மா சும்மா இறைவனைப் பற்றி "நீ யார், எவ்வளவு பெரிய ஆள், என்னவெல்லாம் செஞ்சிருக்க, எனக்கு அருள் செய்ய மாட்டாயா" என்று புலம்புவதில் யாருக்கு என்ன பயன். 


இறைவன் யார் என்று அவருக்குத் தெரியாதா? அவர் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியாதா? சரி, அப்படியே தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தரம் சொன்னால் போதாதா? 


அருணகிரிநாதர் அதில் இருந்து பெரிதும் வேறுபடுகிறார். மனித நேயம், வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழி என்பன பற்றி பேசுவார். 


"தவறான வழியில் சென்று கெடும் என் மனமே, உனக்கு சில நல்ல வழிகளை  சொல்கிறேன் கேள். மறைக்காமல் கொடு. முருகனின் திருவடிகளை நினை. உன்னுடைய நீண்ட துன்பங்களை எரித்து சாம்பலாக்கு. வினைகளை விடு"


மேலோட்டமாக இதுதான் அவர் சொல்ல வந்த செய்தி. 



பாடல் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவா 

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் 

சுடுவாய் நெடுவே தனை தூள் படவே 

விடு வாய் விடுவாய் வினையா வையுமே 


சீர் பிரித்த பின் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவாது  

இடுவாய் வடிவேல்  இறை தாள் நினைவாய் 

சுடுவாய் நெடு வேதனை தூள் படவே 

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


(pl click the above link to continue reading)




கெடுவாய்  = கெட்டுப் போகும் 


மனனே  = என் மனமே 


கதி = கதி என்றால் வழி. நல்ல வழியை 


கேள்  = சொல்கிறேன், கேட்டுக் கொள் 


கரவாது   = மறைக்காமல் 


இடுவாய் = ஏழை எளியவர்களுக்கு கொடு 


வடிவேல் = வடிவான, அழகான வேலை உடைய 


இறை  = இறைவன், முருகன் 


தாள்  = திருவடிகளை 


நினைவாய்  = மனதில் நினை 


சுடுவாய்  = சுட்டு எரிப்பாய் 


நெடு வேதனை  = நீண்ட வேதனை 


தூள் படவே  = தூள் தூளாகும்படி, சாம்பலாகும்படி 


விடுவாய் விடுவாய் = விட்டு விடுவாய் 


வினை யாவையுமே  = எல்லா வினைகளையும் 


இனி விரிவான பொருள் பற்றி சிந்திப்போம். 


"கரவாது இடுவாய்" - யாரோ ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்கிறான். சில்லறை இல்லை, ஒண்ணும் இல்லை வேற இடம் பாரு என்று அவனை அனுப்பி விடுகிறோம். நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை. வைத்துக் கொண்டே இல்லை என்கிறோம். கொடுக்கும் மனம் இல்லை. மறைக்காமல் கொடு என்கிறார். 


இதையே ஔவையும் "இயல்வது கரவேல்" என்றாள். எது முடியுமோ அதைச் மறைக்காமல் கொடு/செய். 


பசி என்று ஒருவன் வருகிறான். ஒரு வேளை உணவு அவனுக்குத் தர முடியாதா? பசி எவ்வளவு கொடுமையானது என்று அனுபவித்தால்தான் தெரியும். 


ஏன் கொடுக்கும் மனம் வருவது இல்லை? 


நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது, இருக்குறதை எல்லாம் தானம் பண்ணிட்டு நான் என்ன பண்ணுவது என்ற பயம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், நீ ஒண்ணும் பெரிதாக சேர்த்துவிடவில்லை. இதே நீ, உன் திறமை, அறிவு எல்லாம் இருந்தும், காலம் மாறினால் எல்லாம் மாறும். கம்பெனி மூடப்படலாம், நட்டத்தில் இயங்கலாம், வேலை போகலாம், வேறு நல்ல வேலை கிடைக்காமல் போகலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைப்பது தவறு. 


ஏதோ, இறை அருளால் எல்லாம் வந்தது. வந்ததில் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம் என்று நினைக்க வேண்டும். 


"வடிவேல்  இறை தாள் நினைவாய்"    - உனக்கு வந்த செல்வம், வாழ்வு எல்லாம் அவன் தந்தது என்று நினை. கொடுப்பது எளிதாகும். கொடுத்தால் இன்னும் அவன் தருவான் என்ற நம்பிக்கை பிறக்கும். 



"சுடுவாய் நெடு வேதனை தூள் படவே"  - எது நெடிய வேதனை? நமக்கு வரும் பெரும்பாலான வேதனைகள் சிறிது காலத்தில் போய் விடும் அல்லது நாம் அதற்கு பழகிக் கொள்வோம். தீராத வேதனை ஒன்று இருக்கிறது. பழகவும் முடியாது. அது இந்த பிறவியில் பிறந்து, இறந்து, ,பிறந்து உழல்வது. அது நீண்ட வேதனை.  அந்த வேதனையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அடுத்து சொல்கிறார். 


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே " வினை யாவையும் விடுவாய் என்கிறார். தீவினை, நல்வினை என்று இரண்டு இருக்கிறது.  அறம் பாவம் என்று சொல்கிறார்கள். 


தீவினையை விட்டு விடலாம். நல் வினையையும் விட வேண்டுமா?  அப்புறம் ஏன் "கரவாது இடுவாய்" என்று முதல் வரியில் சொன்னார்? அது நல்வினைதானே?


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே" என்பதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை கூறுகிறார்.  ஏன்?


தீவினைகளை விடுவாய். விட்டு விடு. செய்யாதே. 


நல்வினைகளை செய்யும் போது அதன் மேல் உள்ள பற்றினை, பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நல்லதைச் செய் ஆனால் அதற்கு உரிய பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நிஷ் காமிய கர்மம் என்று சொல்லுவார்கள். பலனை எதிர்பார்க்காத கர்மங்கள் நம்மைச் சேர்வது இல்லை. 


அதை எப்படிச் செய்வது ? 


இறைவன் இரு தாள் நினைத்து செய். பலன் அவனுக்குப் போகட்டும். எனக்கு வேண்டாம் என்று அதை விடுவாய். 


மறைக்காமல் கொடு 

அவன் தந்தது என்று நினைத்துக் கொடு 

தீ வினையை விட்டு ஒழி 

நல் வினையில் இருந்து வரும் பலனை எதிர்பார்க்காதே. 


இதுவே நற்கதி. கதி கேள். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


]




No comments:

Post a Comment