திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்
இறைவன் இத்தனையும் படைத்தான் என்றால் அவன் எங்கு இருந்து கொண்டு படைத்தான் ? அந்த இடம் அவனுக்கு முன்னாலேயே இருந்ததா ? அந்த இடத்தை யார் படைத்தது ? இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள முடியுமா ?
மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பால் சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் திருமழிசை பிரான்.
அவர் எழுதிய திரு சந்த விருத்தம் சந்த லயம் நிறைந்த பாடல்களை கொண்டது.
உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்திமீண்
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே
சீர் பிரிக்காமல் முடியாது....
உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுளே பிறந்து ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே
பொருள்
இந்த உலகத்தை நீ படைத்து, உன்னுள்ளே ஒடுக்கி வைத்து, மீண்டும் அதை வெளியே கொண்டு வந்தாய். இந்த உலகம் உன்னோடு ஒன்றி நிற்கிறது. ஆதலால் நீ இருக்கும் இடத்தை யாரால் அறிய முடியும்?
உலகு தன்னை = இந்த உலகத்தை
நீ படைத்து = நீ படைத்து
உள் ஒடுக்கி வைத்து = உனக்குள்ளே ஒடுக்கி வைத்து
மீண்டு = மீண்டும்
உலகு தன்னுளே = உலகத்தை உன்னில் இருந்து
பிறந்து = பிறப்பித்து
ஓரிடத்தை அல்லையால் = ஓரிடத்தில் அல்லாமல்
உலகு நின்னோடு ஒன்றி நிற்க = இந்த உலகம் உன்னோடு ஒன்றி நிற்பது
வேறு நிற்றி ஆதலால் = அன்றி வேறு வழி இல்லை ஆதலால்
உலகில் = இந்த உலகில்
நின்னை உள்ள சூழல் = நீ இருக்கும் இடம், இருக்கும் வண்ணம்
யாவர் உள்ள வல்லரே = யாரால் நினைத்து பார்க்க முடியும் ? (யாராலும் முடியாது)
அறிவியலில் கூட புதிதாக ஒரு கோட்பாடு சொல்கிறார்கள். பெரு வெடிப்பு (Big Bang) என்பது ஒரு தடவை நிகழ்ந்த ஒன்று அல்ல. இந்த உலகம் ஒரு பலூன் மாதிரி பெரிதாக்கிக் கொண்டே போய் பின்னால் சுருங்கி மீண்டும் ஒரு பெரு வெடிப்பு உண்டாகி..இப்படி பெரிதாவதும், சுருங்குவதும், பின் வெடிப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. பெரு வெடிப்பு நிகழ்வதற்கு முன்னால் என்ன நடந்தது என்று அறிவியலால் அறிய முடியாது.
திருமழிசை பிரான் அதைத்தான் சொல்கிறார் என்று நான் சொல்ல வரவில்லை. இருந்தாலும், இந்த ஒற்றுமை என்னை ஆச்சரியப் பட வைக்கிறது....
இது சும்மா கடவுளைப் பற்றிப் பாடியது. இதில் பெரு வெடிப்பு பற்றி எண்ணுவது, வலிந்து பொருள் கொள்வதாகும்.
ReplyDelete