கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்
சீதை சித்ர கூடத்தில் நடந்து வருகிறாள்.
பசுமையான அடர்ந்த கானகம்.
ஈரம் நிறைந்த வழித்தடம்.
மாசில்லாத காற்று.
மரங்கள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன.
அந்த மலர்களில் வண்டுகள் தேன் எடுக்க வருகின்றன.
ஏற்கனவே பூவின் பாரம் தாங்காமல் வளைந்து நின்ற மரக் கிளைகள், வண்டும் அமர்ந்ததால் இன்னும் வளைந்தன.
தேன் எடுத்த பின், வண்டுகள் சட்டென்று பூவை விட்டு விலகுகின்றன.
அதனால், அந்த மரக் கிளைகள் பட்டென்று நிமிர்கின்றன.
அப்படி வேகமாக நிமிர்ந்ததால், அதில் உள்ள பூக்கள் கொஞ்சம் சிந்தின
அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்றால்...
அந்த மரங்கள் சீதையை கண்டதும் அவள் பாதம் பணிந்து அவள் பாதத்தில் பூ தூவி வரவேற்றதை போல இருந்ததாம்....
அந்த கம்பனின் பாடல்...
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!
நீல வண்டினம் படிந்து எழ, வளைந்து உடன் நிமிர்வ,
கோல வேங்கையின் கொம்பர்கள், பொன்மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன – காணாய்!
சீலம் இன்னது என்று = கற்பு இது என்று
அருந்ததிக்கு = அருந்ததிக்கு
அருளிய திருவே! = அருளிய திருமகளே
நீல வண்டினம் = நீல நிறத்தில் உள்ள வண்டுகள்
படிந்து எழ, = மலர்களில் படிந்து (அமர்ந்து) பின் எழ
வளைந்து = அதனால் அந்த மரக் கிளைகள் வளைந்து
உடன் நிமிர்வ, = உடனே படீரென்று நிமிர
கோல வேங்கையின் = அழகான வேங்கை மரத்தின்
கொம்பர்கள்,= கொம்புகள், கிளைகள்
பொன்மலர் தூவிக் = பொன் போன்ற மலர்களை தூவி
காலினில் தொழுது = உன்னுடைய காலில் விழுந்து தொழுது
எழுவன நிகர்ப்பன = பின் எழுவதை போல் இருப்பதை
காணாய்! = காண்பாய்
என்று இராமன் சீதையிடம் சொல்வதாக வால்மீகி சொன்னதை, கம்பன் தமிழில் சொல்லி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்...:)
கம்பனின் பாடலை போலவே உங்கள் வர்ணனையும் வெகு அழகு.
ReplyDeleteஒரு கணவன் மனைவியிடம் இப்படிச் சொல்வதில், அவனுக்கு அவளிடம் இருந்த மதிப்பும் காதலும் கலந்து வெளிப்படுகிறது. அந்த மனைவியும் எவ்வளவு கொடுத்து வைத்தவள்!
ReplyDelete