நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை
எருமை.
மந்த புத்தி மகிஷம்.
வெயில் என்றாலும் விலகாது.
மழை வந்தாலும் மயங்காது.
என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.
அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை.
அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.
எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே
ஒரு குவளை மலர்.
அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.
அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.
அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.
அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.
அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...
பாடல்
வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும்
இரும் கடா யானை இவன்
பொருள்
வண்ணக் குவளை மலர் = வண்ண மயமான குவளை மலரை
வௌவி = வாயில் கவ்வி
வண்டு எடுத்த = அந்த மலரில் இருந்த வண்டுகள் எழுப்பிய
பண்ணில் = ரீங்காரமான இசையில்
செவி வைத்துப் = காதில் கேட்டு
பைங்குவளை உண்ணாது = குவளை மலரை உண்ணாமல்
அரும் கடா நிற்கும் = பெரிய (எருமை) கடா மாடு மயங்கி நிற்கும்
அவந்தி நாடு = அவந்தி நாட்டை
ஆளும் = ஆளும்
இரும் கடா யானை இவன் = பெரிய யானை போன்ற வலிமை மிக்கவன் இவன்
where is the G+1 button?
ReplyDeleteVery nice poem. Thanks.
அருமை
ReplyDelete