ஐங்குறு நூறு - Extra Marital Relationship
Extra marital relationship - இதற்கு தமிழ் என்ன என்று தெரியவில்லை. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்று சொல்லலாமா ?
அவன் தன்னுடைய மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறான். ஒரு நாள், மனைவியை வழியில் எங்கோ பார்த்து விடுகிறான். அவர்கள் பேசுகிறார்கள்.
இந்த விஷயம் எப்படியோ அந்த "மற்ற" பெண்ணின் காதுக்கு சென்று விடுகிறது. அவளுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் அவன் அவளோடு இருக்க மாட்டான் , அவன் மனைவியை தேடி போய் விடுவான் என்று...அவளே சொல்லுகிறாள்...
கொக்கின் குஞ்சு, கூட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் லேசாக சப்தம் போடும். ஆனால் அந்த சப்தம் வயல் எல்லாம் கேட்கும். எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இந்த கொக்கு குஞ்சு இனிமேல் இந்த கூட்டில் இருக்காது என்று. அது போல் நீயும் போய் உன் மனைவியுடன் சந்தோஷமாய் இரு
பாடல்
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக்குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது,
நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே!
பொருள்
வெண் தலைக் = வெண்மையான தலையை உள்ள
குருகின் = கொக்கின் குஞ்சு
மென் பறை = மெல்லமாக எழுப்பும்
விளிக்குரல் = அந்த சத்தம்
நீள் வயல் = நீண்ட வயல் எங்கும்
நண்ணி இமிழும் = நன்றாகக் கேட்கும்
ஊர! = அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவனே
எம் இவண் = இனி நீ
நல்குதல் அரிது = இங்கு தங்குதல் அரிது
நும் மனை = உன் வீட்டு
மடந்தையொடு = பெண்ணோடு (அதாவது மனைவியுடன்)
தலைப் பெய்தீமே! = ஒன்றாக இரு
இந்த பரத்தை பெண்களின் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்கு உரியதாய் இருக்கிறது. பணம் தான் அவர்களின் தேவை என்றாலும், அவர்களுக்குள்ளும் ஒரு மனம் இருக்கும் தானே. ஆண்கள் நினைத்த போது வருவதும், காரியம் முடிந்த பின் போய் விடுவதும்...பாவம் அவர்கள்....
இவ்வளவு அமைதியாக விட்டு விடுவது ஆச்சரியமாக உள்ளது.
ReplyDelete