Thursday, October 11, 2012

குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?


குற்றாலக் குறவஞ்சி - எது முந்தியது ?




காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க எத்தனிக்கிறாள். அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அவனை இல்லா விட்டால் ?

அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று. 

சந்த நயம் நிறைந்த அந்தப் பாடல்:


இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.

சீர் பிரித்தபின் 

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ
மோகினியோ - மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ
எனவே - உயர் சந்திர சூடர் குறும் பல வீசு அரர் சங்கு அணி
வீதியிலே - மணிப் 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்
பந்து கொண்டாடினளே

பொருள் 

இந்திரையோ = இந்து என்றால் நிலவு. நிலவு போன்றவளோ. இன்னொரு 

அர்த்தம், இந்திரனின் மனைவி இந்திராணியோ

இவள் சுந்தரியோ = இவள் அழகே வடிவானவளோ

தெய்வ ரம்பையோ = தேவலோகத்தில் வாழும் ரம்பையோ

மோகினியோ = அல்லது மனதை மயக்கும் மோகினியோ 

மனம் முந்தியதோ = மனம் முதலில் போனதா ?

விழி முந்தியதோ = விழி முதலில் போனதா ?

கரம் முந்தியதோ = கரம் முதலில் போனதா ?

எனவே = என்று வினவும் பொழுது

உயர் சந்திர சூடர் = உயர்ந்த சந்திரனை தலையில் சூடியவர் (சிவன்)

குறும் பல வீசு அரர் = குறும் பலா மரத்தடியில் அமர்ந்த சிவனின்

சங்கு அணி = சங்கு அணிந்தவர் உள்ள 

வீதியிலே = அந்த தெருவிலே

மணிப் பைந்தொடி = தொடி என்றால் வளையல். மணி படித்த அழகிய 
வளையலை அணிந்த

நாரி = பெண் 

வசந்த ஒய்யாரி = வசந்த காலம் போல் சிறந்தவள்

பொற் பந்து கொண்டாடினளே = பொன் போன்ற பந்து விளையாடி கொண்டு வந்தாள்

3 comments:

  1. பாடலில் சந்தம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு உன் விளக்கம் அதைவிட மேல்!

    ReplyDelete
  2. அற்புதம்மான விளக்கம்!
    மிக்க நன்றி!

    ReplyDelete