திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள்.
அந்தப் பெண்கள். வில் போன்ற புருவத்தை வளைத்து, மீன் போன்ற கண்களில் வேல் போன்ற பார்வையை தீட்டி, தங்கள் கொலுசு என்ற பறை முழங்க சண்டைக்கு வருகிறார்கள்.
இனிமையான கற்பனை கொண்ட அந்தப் பாடல்
பாலேறும் விடையில் வருந் திரிகூடப்
பெருமானார் பவனிக் காணக்
காலேறுங் காமனுக்காக் கையேறும்
படைப்ப வுஞ்சாய்க் கன்னிமார்கள்
சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப்
புருவநெடுஞ் சிலைகள் கோட்டி
மாலேறப் பொருதும் என்று
மணிச்சிலம்பு முரசறைய வருகின்றாரே
பொருள்:
பாலேறும் = பால் போன்ற வண்ணம் கொண்ட. பால் மேல கொட்டினால் எப்படி வெள்ளையாக இருக்குமோ அதுபோல். பால் ஏறும்.
விடையில் = எருதின் மேல்
வருந் = வருகின்ற
திரிகூடப் பெருமானார் = திரிகூடத்தில் இருக்கும் சிவன்
பவனிக் காணக் = பவனி வருவதை காண
காலேறுங் = கால் என்றால் காற்று. தென்றல் தேரில் ஏறி வரும்
காமனுக்காக் = மன்மதனுக்காக
கையேறும் = கையில் (கை ஏறும்)
படைப்ப வுஞ்சாய்க் = படையில் உள்ள வீரர்கள் போல
கன்னிமார்கள் = கன்னிப் பெண்கள்
சேலேறுங் = மீன் கண்ணில் ஏறியதைப் போன்ற
கலக = கலகம் செய்யும்
விழிக் கணைதீட்டிப் = விழிகள் என்ற அம்பை தீட்டி
புருவ = புருவமாகிய
நெடுஞ் சிலைகள் = நீண்ட வில்லினை
கோட்டி = வளைத்து
மாலேறப் = மால் என்றால் மயக்கம். மயக்கம் ஏற
பொருதும் = சண்டை இடுவோம்
என்று = என்று
மணிச்சிலம்பு = காலில் கட்டிய கொலுசு
முரசறைய = முரசு ஒலிக்க
வருகின்றாரே = வருகின்றனர்
இப்படி வந்தால், எப்படி ஆண்கள் வெற்றி கொள்ள முடியும்....
No comments:
Post a Comment