Sunday, October 28, 2012

திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


திருக்குறள் - தீயா வேலை செய்யணும்


எப்படி வேலை செய்யணும் என்பதற்கு வள்ளுவர் கொஞ்சம் டிப்ஸ் தருகிறார். 

அதில் முதலாவது. 

ஒரு வேலை செய்யும் முன்னால் அதோடு கூட வேற என்ன வேலை எல்லாம் சேர்த்து செய்யலாம் என்று சிந்தித்து எல்லாவற்றையும் ஒன்றாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்.

எப்படி ?

இப்ப ஒரு வெளியூருக்கு வேலை நிமித்தமாய் போவதாய் வைத்துக் கொள்ளுவோம்..அப்படியே அந்த ஊரில் உள்ள நம்ம நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து விட்டு வரலாம், அங்கே உள்ள நல்ல கோவில் அல்லது சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு வரலாம், அந்த ஊரில் ஏதாவது சிறப்பான பொருள் அல்லது மலிவான பொருள் இருந்தால் அதை வாங்கி வரலாம். இப்படி, அலுவலக வேலையோடு இன்னும் ஓரிரண்டு வேலைகளை சேர்த்து செய்வது உத்தமம். 

அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம். 

எப்போதும் ஒரு வேலைய மட்டும் செய்யக் கூடாது...ஒரு வேலை கூட ஒண்ணு ரெண்டை சேர்த்து செய்ய வேண்டும் என்கிறார். 

எப்படி ஒரு யானையை வைத்து இன்னொரு யானையை பிடிப்பார்களோ அது மாதிரி...ஒரு வேலையின் மூலம் இன்னொரு வேலையும் செய்து முடிக்க வேண்டும்....

பாடல்


வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள்

வினையான் = ஒரு வேலையின் மூலம்

வினையாக்கிக் கோடல் = இன்னொரு வேலையை ஆக்கிக் கொள்ளுதல் (செய்து முடித்துக் கொள்ளுதல்)

நனைகவுள் = கவுள் என்றால் கன்னம். நனை கவுள், நனைந்த கன்னம், ஈரமான கன்னம் கொண்ட

யானையால் = ஒரு யானையால்

யானையாத் தற்று = இன்னொரு யானையை பிடிப்பதைப் போல 
.

1 comment:

  1. Very nice.

    Why haven't you written about Kamathu Paal for a while?

    ReplyDelete