Pages

Monday, December 31, 2018

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை



ஆண்டாள், தன்னுடைய தோழிகளை ஒவ்வொருவராக எழுப்பி கண்ணனை காண அழைத்துக் கொண்டு போகிறாள்.

இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது. கோவிலுக்குப் போகிற வழியில் தோழிகளை கூட்டிக் கொண்டு போகிறாள். இது ஒரு பெரிய விஷயமா? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இதைப் படிப்பதால் நமக்கு என்ன பயன். படிக்க எளிமையாக இருக்கிறது. அதைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

ஒன்றும் இல்லாத பாடல்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் எழுதும் பாடல்கள் ஒரு சில மாதங்கள் கூடத் தங்குவது இல்லை.

அப்படி என்றால், இந்தப் பாடல்களில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.


இந்தப் பாடல்களில் இலயிக்க இலயிக்க அது நம்மை எங்கெங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு போவதை நாம் உணர முடியும்.

பாடல்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்

புள்ளும் = பறவைகளும்
சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன
புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 
கோயிலில் = கோவிலில்
வெள்ளை = வெண்மையான 
விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 
பேரரவம் = பெரிய சப்தத்தை 
கேட்டிலையோ = கேட்கவில்லையோபிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 
பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
சகடம் = சக்கரம்
கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )சக்கரம்
கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்
கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பாற்  கடலில்
அரவில் = பாம்பின் மேல்
துயில் = உறங்கிய
அமர்ந்த = இருந்த
வித்தினை = விதையை, மூலத்தை
உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

தூங்குவது யார் ? ஆயர்பாடி பெண்கள் அல்ல. நாம் தான்.

நாம் எங்கே தூங்குகிறோம். விழித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இதோ இதைப் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நாம் எப்படி தூங்குவது ஆகும்?

விழித்து இருந்தால் எல்லாம் தெரியும் அல்லவா? எதையும் தெளிவாக பார்க்க முடியும் அல்லவா? தூங்கும் போது ஒன்றும் தெரியாது. கனவில் வேண்டுமானால் தெரியலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை போல இருக்கும். விழித்துக் கொண்டால் கனவில் கண்டது உண்மை அல்ல என்று தெரிந்து போகும் அல்லவா. விழித்துக் கொள்ளாதவரை கனவுதான் உண்மை என்று நாம் இருப்போம். 

நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

நாம் பெரிய ஆள் என்று, நிறைய படித்தவர்கள் என்று, அழகானவர்கள் என்று, நல்லவர்கள் என்று, நல்லது செய்கிறோம் என்று, இறந்த பின் சுவர்க்கம் போவோம் என்று, பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று, டிவி இல், செய்தித் தாளில் வருவது எல்லாம் உண்மை  என்று ஆயிரம் கனவுகளோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறோம்.

நாம் யார் என்றே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா மற்றவை எல்லாம் தெரிய. 

விழித்துக் கொள்ளச் சொல்வது , தன்னைத் தான் அறிய. self realization 



ஆண்டாள் என்ன சொல்ல வருகிறாள் ?

பறவைகள் கத்துகின்றன......சங்கின் ஒலி கேட்கிறது, முனிவர்களும் யோகிகளும் அரி என்று  ஓதுகிறார்கள்...என்ன அர்த்தம்.

இயற்கையை, இந்த உலகை நாம் அப்படியே நேரடியாக உணர வேண்டும்.

நாம் இந்த உலகை நாம் நேரடியாக அறிவது இல்லை.  அதற்கு ஒரு சாயம் பூசுகிறோம்.

இது இந்தியா, இது பாக்கிஸ்தான்,
இவன் ஹிந்து, இவன் கிருத்துவன்,
இவன் நல்லவன், இவன் கெட்டவன்
இவன் படித்தவன், இவன் படிக்காதவன்
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்
செல்வன், ஏழை


என்று ஆயிரம் பாகுபாடுகளோடு பார்க்கிறோம்.  உலகை இந்த பாகுபாடுகள் இல்லாமால்  பார்க்க முடியுமா ? வேறுபாடு இல்லாத ஒரு உலகை நம்மால் உணர முடியுமா ?

பறவைகளின் ஒலி , சங்கின் சப்தம், முனிவர்களின் வேத கோஷம் அனைத்துக்கும் அடி நாதமாய் விளங்கும் அந்த நாதத்தை அறிய முடியுமா ?

சப்தங்கள் வேறு. நாதம் ஒன்று.

"துயில் அமர்ந்த வித்தினை"

அது என்ன துயில் அமர்வது?

தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே?

தூக்கம் என்றால் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒரே ஒரு வகை தூக்கம் தான்.

தூக்கத்தில் பல வகை உண்டு.

அவை என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_31.html

Saturday, December 29, 2018

திருப்பாவை - தீயினில் தூசாகும்

திருப்பாவை - தீயினில் தூசாகும் 



நாம் பல நல்ல காரியங்களை செய்ய முனையும் போது ஏதோ ஒரு தடங்கல் வந்து சேர்த்திருக்கும். ஏதோ ஒண்ணு தட்டிப் போகும். இது நமக்கு மட்டும் நடப்பது அல்ல.

நாள், கிழமை, முகூர்த்தம் எல்லாம் பார்த்து, வசிட்டன் குறித்த பட்டாபிஷேகமே இராமனுக்கு தட்டிப் போனது என்றால் நம் ஊரு பஞ்சாங்கம், ஜோசியம் எல்லாம் என்ன செய்வது.

முடி சூட்டு தள்ளிப் போனது போகட்டும், இருக்கிற எல்லாவற்றையும் இழந்து, மர உரி உடுத்து, காட்டுக்குப் போனான். நாள் குறிக்கச் சொன்ன தசரதன் மாரடைப்பால் மாண்டு போனான்.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ? இதற்கு என்ன காரணம் ?

ஆண்டாள் கூறுகிறாள் பதில்.

எல்லாம் வினை.

தசரதன் செய்த வினை. யானை என்று நினைத்து ஷ்ரவணன் என்ற அந்தணப் பையனை கொன்றதால் வந்த வினை.

"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்பான் இலக்குவனிடம் இராமன்.

விதி. செய்த வினை.

கோபியர்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை கவர்ந்து அவர்களை சங்கடப் படுத்தியதால், பின்னொரு நாள் ஆற்றில் குளிக்கும் போது தன் கீழ் ஆடை  ஆற்றில் போக தவித்து நின்றான் கண்ணன். அவன் செய்த வினை.

அப்படி ஆற்றில் தவித்து நின்ற கண்ணனுக்கு தன் சேலையில் இருந்து ஒரு முழத்தை கிழித்து கொடுத்து மானம் காப்பாற்றினாள் பாஞ்சாலி. பின்னொரு நாள் அவளுக்கு சபையில் சேலை பறி போகும் போல் இருந்த போது , முழ சேலைக்கு பதிலாக கோடி கோடியாக சேலை கொடுத்தான் கண்ணன். அது அவள் செய்த நல் வினை.


விதி யாரையும் விடாது.

அப்படி என்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா? எல்லாம் விதி விட்ட வழி தானா என்றால், இல்லை. அந்த விதியையும் மாற்றலாம் என்கிறாள் ஆண்டாள்.

செய்த வினை, செய்கின்ற வினை எல்லாம் தீயில் போட்ட தூசு போல இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்கிறாள்.

அதுக்கு என்ன செய்ய வேண்டும் ?

பாடல்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


பொருள்



மாயனை   = மாயங்கள் செய்பவனை

மன்னு வடமதுரை மைந்தனைத்  = என்றும் இருக்கும் வட மதுரையின் மைந்தனை



தூய பெருநீர் யமுனைத் துறைவனை   - தூய்மையான நீரைக் கொண்ட யமுனை ஆற்றின் துறையில் உறைபவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்  - ஆயர் குலத்தில் தோன்றும் அழகிய விளக்கை


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் - தான் பிறந்ததால் தாய்க்கு பெருமை தேடித் தந்தவனை

தூயோமாய்  - தூய்மை உடையவர்களாய்

வந்து நாம் = நாம் வந்து

தூமலர்தூ வித்தொழுது = மலர் தூவி தொழுது

வாயினால் பாடி = வாயினால் பாடி

மனத்தினால் சிந்திக்கப் = மனதில் சிந்திக்க

போய பிழையும் = முன்பு செய்த பாவங்களும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது செய்த பாவங்களும்

தீயினில் தூசாகும் = தீயில் போட்ட துரும்பு போல் ஆகும்

செப்பேலோர் எம்பாவாய். = சொல்லுவாய் என் பாவையே


இறைவனைத் தொழுதால் முன்பு செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் தீயில் போட்ட தூசு போல எரிந்து சாம்பலாகும்.

அட, இது ரொம்ப easy யா இருக்கே. செய்றதெல்லாம் செஞ்சிட்டு, இறைவனை தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போயிருமா ? அப்படினா இன்னும் கொஞ்சம் பாவம் செஞ்சிட்டு ஒண்ணா போய் தொழுதுருவோம்...அப்படின்னு சில பேர் நினைக்கலாம்.

தொழுவதற்கு ஆண்டாள் சில நிபந்தனைகள் வைக்கிறாள்.

முதலில் "தூயோமாய்".

செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி, இனி செய்வது இல்லை என்று உறுதி பூண்டு, மனதில் கூட பாவங்களை நினையாமல் இருக்க வேண்டும். அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அது முதல் நிபந்தனை.

இரண்டாவது, நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கு. சில பல இலட்சங்களை உண்டியலில் போட்டு விட்டால் போதுமா ? ஒரு வைர கிரீடம், ஒரு தங்க சங்கிலி, ஒரு tube light வாங்கிப் போட்டு விட்டால் போதுமா ? பணம் எல்லாம் நடக்காது. இறைவன் எளிமையை விரும்புபவன்.

"ஏழை பங்காளனை பாடேலோர் எம்பாவாய் "

என்பார் மணிவாசகர். ஏழையிடம் பங்கு போட என்ன இருக்கிறது, வறுமையைத் தவிர ?

ஆண்டாள் சொல்கிறார், "தூ மலர் தூவி"

மலர் போதும். பணம் காசு வேண்டாம்.

"வாயினால் பாடி" - வாயால் தான் பாட முடியும். அது என்ன வாயினால் பாடி ?  பொறுங்கள். அடுத்த வரியையும் சேர்த்து பார்த்துவிடலாம்.

"மனதினால் சிந்திக்க"

மனம் + வாக்கு + காயம் என்பார்கள். திரிகரண சுத்தி.

பூ போடுவது - கை - உடல்

பாடுவது = வாய்

சிந்திப்பது = மனம்

மூன்றும் ஒன்றாக செயல் பட வேண்டும்.


கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார். ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றாகி வணங்கினால்

'போய பிழை" = முன்பு செய்த பிழையும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது வந்து நிற்கும் பிழைகளும்

தீயில் தூசாகும்.

ஏன் தீயில் தூசாகும் ? ஏன் நீரில் கரைந்து போகும் என்று சொல்லவில்லை ?

நீரில் கரைந்தாலும் அது நீர் வற்றிய பின் எது கரைந்ததோ அது மீண்டும் தெரியும்.

தீயில் விட்டு பொசுக்கி விட்டால் இருந்த இடம் தெரியாமல் போகும்.

"அவன் தாள் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே "

என்பார் அருணகிரிநாதர்.

தலை எழுத்து மாறும். செய்த வினை அழியும்.

செய்து பாருங்கள். ஆண்டாள் என்ன பொய்யா சொல்லப் போகிறாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_29.html

Wednesday, December 26, 2018

திருப்பாவை - உலகினில் பெய்திடாய்

திருப்பாவை - தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கையா ?



தெய்வ நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கையா ? ஒரு அறிவியல் பார்வை இல்லாதர்வர்கள் தான் தெய்வத்தை நம்புவார்களா ? நம்பிக்கை என்பதே ஒரு சோம்பேறிகளின் இருப்பிடமா? நம்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம் ? சும்மா தலையை தலையை ஆட்டினால் போதும்...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆண்டாள் ஒரே பாசுரத்தில் மிகத் தெளிவான அறிவியல் பார்வையையும் , ஆன்மீகப் பார்வையையும் கொண்டு வருகிறாள். இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்.

பாடல்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்

எளிய பாடல் தான். ஆண்டாளின் அனைத்து பாடல்களும் மிக எளிமையானவைதான்.

ஆழி மழைக்கண்ணா! = ஆழி என்றால் கடல். கடல் போல் மழை நீரைத் தரும் வருண தேவனே.

ஒன்று நீ கைகரவேல் = கரத்தல் என்றால் மறைத்தல். உடையது கரவேல் என்பாள் ஒளவை.  இங்கே, நீ எதையும் மறைக்காதே

ஆழியுள் புக்கு = கடலில் புகுந்து

முகர்ந்துகொ டார்த்தேறி = நீரை மொண்டு கொண்டு, ஆர்த்து ஏறி என்றால் சப்தம் போட்டுக் கொண்டு  மேலே சென்று

ஊழி முதல்வன் = ஊழி காலம் தொட்டு இருக்கும் முதல்வன் (திருமால் )

உருவம்போல் = உருவத்தைப் போல

மெய்கறுத்து = உடல் கருமை வண்ணம் கொண்டு

பாழியந் தோளுடைப் = பாழி என்றால் அகன்ற என்று பொருள். அம் தோள் என்றால் அழகிய தோள்.

பற்பநா பன்கையில் = பத்ம நாபன் கையில். தாமரை மலரை நாபிக் கமலத்தில் கொண்டவன். அவன் கையில் உள்ள

ஆழிபோல் = சக்கரம் போல

மின்னி = மின்னல் அடித்து

வலம்புரிபோல் நின்றதிர்ந்து = வலம்புரி சங்கு போல நின்று அதிரும் படி சப்தம் செய்து

தாழாதே = தாமதம் செய்யாமல்

சார்ங்கம் = இராமனின் வில்

உதைத்த சரமழைபோல் = புறப்பட்ட அம்பு மழை போல

வாழ = வாழ

 உலகினில்  = உலகினில்

பெய்திடாய் = பெய்திடுவாய்

நாங்களும் = நாங்களும்

மார்கழி நீராட = மார்கழியில் நீராட

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! = மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய், என் பாவையே

மழை என்பது ஏதோ அதிசயம் அல்ல. அது நீர் ஆவியாகி , மேலே சென்று, மேகமாகி, கறுத்து , பின் நீராக பொழிவது தான் மழை. இது ஒரு அறிவியல் நோக்கு. பார்வை. நவீன விஞ்ஞானம் இதை கண்டு சொல்வதற்கு பல ஆண்டுகள் முன்பே ஆடல் சொல்லி விட்டாள்.

மழை எப்படி பொழிகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விடை.

நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. அதிலும் ஆண்டாள் குறிப்பாக சொல்கிறாள். "ஏ வருண பகவானே, நீ பாட்டுக்கு ஊருக்குள்ள இருக்கிற கிணறு , குளம் , குட்டை, ஏரி இதில் உள்ள நீரை ஆவியாக்கி கொண்டு போய் மழையாகப் பெய்யாதே . அதில் என்ன பலன். இருக்கிற நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் அதையே மழையாகத் தருவதில்? அதனால, கடல்ல போய் நீரை எடுத்துக் கொண்டு வந்து மழையாகப் பொழி" என்கிறாள்.


சரி, மழை பொழிகிறது. மேகம் எல்லாம் மழை பொழிந்தவுடன் காலியாகி விடும். அப்பறம் என்ன செய்வது ?

ஆண்டாள் வருணனிடம் சொல்கிறாள்..."ஏதோ வந்தோம், பெய்தோம் , போனோம் என்று இருக்கக் கூடாது. நீ எப்படி பெய்ய வேண்டும் தெரியுமா ...இராமனின் அம்பு போல எடுக்க எடுக்க குறையாத அம்பு போல நீ பெய்ய வேண்டும் "

"சார்ங்கம் உதைத்த சரமழைபோல்"

சர மழை போல பெய்ய வேண்டும்.

அதுதான் சாக்கு என்று வருணன் விடாமல் பெய்தால் , ஊரே வெள்ளக் காடாகி விடும் அல்லவா?

அதையும் யோசித்து இரண்டு விஷயம் சொல்கிறாள் ஆண்டாள்

ஒன்று, கருணையோடு பெய்ய வேண்டும். இராமன், நிறம் கறுப்பு. "வருணனே , நீ மழை பொழிந்த பின் உன் மேகங்கள் கறுமை மாறி வெண்மையாகி விடுகின்றன. அப்படி இருக்கக் கூடாது. எப்போதும் இராமன் மாதிரி கறுப்பாக இருக்க வேண்டும்." அப்படி என்றால், எப்போதும் கருணையோடு தேவைப் படும் போதெல்லாம் பெய்ய வேண்டும்.

இராமனின் அம்புகள் பகைவர்கள் மேல் பாய்ந்து அவர்களை கொன்றது.  அது போல  மழை பெய்ய வேண்டுமா என்றால், இல்லை.


"வாழ உலகினில் பெய்திடாய்"

சாவதற்கு இல்லை, வாழ்வதற்கு பெய்வாய் என்கிறாள்.

ஒரு புறம் அறிவியல் சார்ந்த ஒரு நோக்கு.

இன்னொரு புறம்  ஆன்மீகப் பார்வை.

இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள் ஆண்டாள்.

அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று காட்டுகிறாள்.

தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் ஆன்மீகத்தை ஒதுக்கத் தேவை இல்லை.

ஆன்மீகத்தில் உள்ளவர்கள், அறிவியலை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.

இரண்டையும் அரவணைத்துக் கொண்டு போகலாம் என்று காட்டுகிறாள் ஆண்டாள்.

ஒன்றுக்கொன்று முரண் அல்ல. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அறிவியல் பார்வை இருப்பது ஒன்றும் தவறு அல்ல. அதே போல் அறிவியலில் இருப்பவர்களும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதில், அதை அடைவதில் தவறு இல்லை.

அது மட்டும் அல்ல, ஆண்டாளின் பரந்த பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு எல்லாமே இறை வடிவாகத்தான் தெரியும்.

மழையின் ஒவ்வொரு அங்கமும் இறை வடிவாகவே பார்க்கிறாள்.

சக்கரம் போல மின்னி

சங்கு போல ஆர்ப்பரித்து

அம்பு போல பாய்ந்து

என்று எல்லாமே அவன் வடிவாகவே அவளுக்குத் தெரிகிறது.

இயற்கையும், இறைவனும் ஒன்றென காண்கிறாள் ஆண்டாள்.

அறிவியலும் ஆன்மீகமும் இயற்கையின் கூறுகள் தானே.

இறைவன் என்பது ஒரு ஆள் அல்ல. இந்த இயற்கைதான் இறைவன். எங்கும் நிறைந்த இந்த இயற்கை தான் இறைவன்.  மழை ஒரு உதாரணம்.

மின்னல் - ஒளி - கண்ணால் காண்பது.

இடி - ஒலி - காதால் கேட்பது

மழை - குளுமை - உடலால் உணர்வது

மழை மண்ணில் விழும் போது எழும் மண்வாசம் - மூக்கால் உணர்வது

மழை தரும் பயிர்கள் - உணவாகி நாக்குக்கு சுவை தருவது

இப்படி இயற்கை, ஐம்புலன்களுக்கும் அனுபவம் தருவது. அது தான் இயற்கை. அது தான் இறை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப் பாருங்கள். கண் மூடி இரசித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_26.html

Friday, December 21, 2018

திருப்பாவை - ஓங்கி உலகளந்த

திருப்பாவை -  ஓங்கி உலகளந்த 


பாடல்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்

ஓங்கி = உயர்ந்த

உலகளந்த =உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனின் பேரைச் சொல்லிப் பாடி

நாங்கள் = நாம் எல்லாம்

நம்பாவைக்குச் = நம் பாவை நோன்பில்

சாற்றி நீராடினால் = சாற்றி நீர் ஆடினால்

தீங்கின்றி = தீமை இல்லாமல்

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரி பெய்து = மழை மாதம் மூன்று முறை பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் = ஓங்கி வளரும் பெரிய நெல் பயிர்கள்

ஊடு = ஊடே செல்லும்

கயல் உகளப் = கயல் (மீன்) நீந்தி விளையாட

பூங்குவளைப் போதில் = குவளை மலரின் தளிரில்

பொறிவண்டு கண்படுப்ப = வண்டுகள் கண் துயில

தேங்காதே = தயங்காமல்

புக்கிருந்து = உள்ளிருந்து

சீர்த்த முலைபற்றி = சிறந்த முலைகளை பற்றி

வாங்கக் = வாங்கும் போது

குடம்நிறைக்கும் = குடங்களை நிறைக்கும்

வள்ளல் பெரும்பசுக்கள் = வள்ளலான பெரும் பசங்கள்

நீங்காத செல்வம் = நீங்காத செல்வம்

நிறைந்தேலோ ரெம்பாவாய்! = நிறைந்தேலோர் எம்பாவாய்

மற்றுமொரு எளிய பாடல்.

தவறு செய்யாதவர்கள் யார் இந்த உலகில்? எல்லோரும் தவறு செய்கிறோம். பாவம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு, நம் பாவங்கள் இருக்கின்றன.

மகாபலியிடம் அளவற்ற ஆற்றல் இருந்தது. அனைத்து உலகையும் கட்டி ஆண்டான். தான் தான் பெரிய ஆள் என்ற ஆணவம் அவன் மனதில் குடி கொண்டது. நல்லவர்களை துன்புறுத்தினான். அவன் ஆணவத்தை அகற்றி அவனுக்கு நல் அறிவு புகட்டினான் குள்ள உருவத்தில் வந்த திருமால்.

தவறு செய்தவனை அழிக்கவில்லை. தன் திருவடியை அவன் தலை மேல் வைத்து அவனை ஆடிக்கொண்டான்.

 எனவே,

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

என்கிறாள் ஆண்டாள்.   மகாபலிக்கு அவன் தவறுகளை பொறுத்து அருள் தந்தது போல  நமக்கும் அருள் புரிவான் என்பது ஒரு பொருள்.

அவன் திருவடிகளில் சரண் அடைந்து விட்டால், அவன் பார்த்துக் கொள்வான் என்பது இன்னொரு பொருள். சரணாகதி தத்துவம்.

அப்படி நாம் சரண் அடைந்து விட்டால், நமக்கு  அல்ல, இந்த ஊருக்கே நன்மை தரும் மழை பொழியும்.

மழை இருக்கிறதே அது அதிகமாக பெய்தாலும் தீமை தான், பெய்யாவிட்டாலும் தீமை தான். அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்

"தீங்கின்றி மும்மாரி பெய்து" என்று.

நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று சொல்லுவதைப் போல, நாம் இறைவன் திருவடிகளில் சரண் அடைந்தால் நாட்டில் உள்ள எல்லோருக்கும் மழை பொழியும்.

குழந்தைக்கு தாய் பால் தருவாள். அவள் பால் தராவிட்டால், அது மார்பில் கட்டிக் கொள்ளும். மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம் அதை அறுவை சிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். தாய் பால் தருகிறாள் என்றால் அவளுக்கு வேறு வழி  இல்லை. அது போல இறைவனுக்கும் நமக்கு அருள் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

"சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"

முலையைப் பற்றினால் போதும், குடம் குடமாய் பால் தரும். அது போல, இறைவனை அண்டினால் போதும், கேட்க வேண்டாம், அவன் பாட்டுக்கு தந்து கொண்டே இருப்பான்.

அது மட்டும் அல்ல, பசு தன்னுடைய கன்று குட்டிக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ளவர்களுக்கும் பால் தரும். நம் வீட்டுக்கு பால் வருகிறது. நாம் பசு வளர்ப்பதில்லை.

அது போல, நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர், ஆச்சாரியர்கள் இறைவனை அண்டி  அருள் பெறும் போது, அந்த அருள் நமக்கும் வந்து சேரும். பசுவின் பால் கன்று குட்டிக்கும், மற்றவர்களுக்கும் சென்று சேர்வதைப் போல.

இந்த செல்வம் இருக்கிறதே, அது பாட்டுக்கு வரும். சொல்லாமல் கொள்ளாமல் போய் விடும். எனவே தான் அதற்கு "செல்வம்" என்று பெயர் வைத்தார்கள். செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் ஒரு நாள் நம்மை விட்டு செல்லக் கூடியவை.

இறை அருளால் கிடைப்பது "நீங்காத செல்வம்" என்கிறாள். ஒரு முறை வந்து விட்டால், பின் நீங்கவே நீங்காது.

அப்படி நீங்காத செல்வம் கொஞ்சம் அல்ல, "நிறைந்தேலோர் எம்பாவாய்" என்று அருளுகிறாள் ஆண்டாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_21.html

Thursday, December 20, 2018

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள்

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள் 



பாடல்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!


பொருள்

வையத்து  = உலகில்

வாழ்வீர்காள்! = வாழ்பவர்களே

நாமும் = நாமும்

நம் பாவைக்கு = நம்முடைய பாவை நோன்புக்கு

செய்யும் கிரிசைகள் = செய்ய வேண்டிய காரியங்களை

கேளீரோ!  = கேட்க மாட்டீர்களா

பாற்கடலுள்  = பால் கடலில்

பையத் = மெல்ல

துயின்ற = உறங்கிய

பரமனடி பாடி = பரமன் அடி பாடி

நெய்யுண்ணோம்  = நெய் உண்ண மாட்டோம்

பாலுண்ணோம்  = பால் உண்ண மாட்டோம்

நாட்காலே = அதிகாலையில்

நீராடி = நீராடி , குளித்து

மையிட்டெழுதோம் = கண்ணுக்கு மை இட்டுக் கொள்ள மாட்டோம்

மலரிட்டு = கூந்தலில் மலரை

நாம் முடியோம் = நாம் சூடிக் கொள்ள மாட்டோம்

செய்யாதன செய்யோம் = செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம்

தீக்குறளைச் = தீய குறளை

சென்றோதோம் = சென்று + ஓதோம்.

ஐயமும்  = ஐயமும்

பிச்சையும் = பிச்சையும்

ஆந்தனையும் = ஆகும் அளவும்

கைகாட்டி = கையால் செய்து

உய்யுமாறெண்ணி  = உய்யுமாறு எண்ணி

உகந்தேலோரெம்பாவாய்! = விருப்பத்துடன் ஏற்று செய்வோம், என் பாவையே


மிக எளிய பாசுரம். ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது.

 ஒவ்வொன்றாக பார்ப்போம்.


வையத்து வாழ்வீர்காள்! -  முதலில் ஆயர்பாடி பெண்களை மட்டும் அழைத்தாள். அது என்ன ஆயர்பாடி மட்டும் என்று நினைத்தாளே என்னவோ, உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று திருமூலர் கூறிய மாதிரி..உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

இறைவன் கருணை நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த மனம்.

அடுத்தமுறை கோவிலுக்குப் போகும் போதோ, அல்லது வேறு ஏதாவது நல்ல காரியம் செய்யும் போதோ இன்னும் கொஞ்ச பேரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அந்த பாற்கடல், யார் குடித்தும் வற்றி விடாது.


"நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ! "

நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை நாலு பேருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் பயன் பெற்றதைப் போல மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். இங்கே ஆண்டாள்,  இறைவனை அடையும் வழிகள் என்ன என்று சொல்கிறாள்.

எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று இரண்டு பட்டியல் தருகிறாள்.

அறம் என்றால் என்ன ? அறம் என்பது என்ன என்று சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை ஒரே வரியில் சொன்னார் பரிமேலழகர்.

"வேதம் முதலிய நூல்களில் சொன்னவற்றை செய்வதும், அவை விலக்க வேண்டும் என்று சொன்னவற்றை விலக்குவவதும் அறம் "

என்றார்.

அதாவது, நல்லனவற்றை செய்வதும் அறம். தீயனவற்றை செய்யாமல் இருப்பதும் அறம்.

உதாரணமாக, தானம் செய்வதும், ஏழைகளுக்கு உதவுவதும் அறம் .

அதே போல், பொய் சொல்லாமல் இருப்பது, கொலை களவு செய்யாமல் இருப்பதும் அறம்.  நீங்கள் இதுவரை கொலை செய்யாமல் இருந்தீர்கள் என்றால், நீங்கள் அற வழியில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.

அறம் பொருள் இன்பம் என்று தனது நூலை வகுத்த வள்ளுவர் , அறத்துப் பாலில் எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று சொல்கிறார்.

கல்வி, கேள்வி,  ஊருடன் ஒத்து வாழ்தல், அன்பு , அருள், என்று செய்ய வேண்டியதை சொன்ன வள்ளுவர்,

கள்ளுண்ணாமை, வெகுளாமை, சிற்றினம் சேராமை என்று செய்யக் கூடாதவற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

அதே போல, ஆண்டாளும், செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் கூறுகிறாள்.


"பாற்கடலுள் பையத்துயின்ற " - இந்த பைய துயின்ற சொல் தொடருக்கு பின் வருவோம்.

செய்ய  வேண்டியவை

"நாட்காலே நீராடி" = அதி காலையில் நீராடி

"பரமனடி பாடி"  = இறைவன் திருவடிகளை பாடி

"ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி" = நம்மை விட உயர்ந்தவர்களுக்குத் தருவது ஐயம் எனப்படும். துறவிகளுக்கு, ஆச்சாரியனுக்கு, சான்றோருக்குத் தருவது பிச்சை அல்ல, அது ஐயம் எனப்படும்.

நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அதாவது உடல் ஊனம் உற்றவர்கள்,  நோய்வாய்ப் பட்டவர்கள் ...போன்றோருக்கு உதவுவது பிச்சை எனப்படும்.

இரண்டையும் செய்ய வேண்டும்.

எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் ஆண்டாள் கூறுகிறாள். ஆகும் அளவு. எவ்வளவு முடியுமோ.  இலட்ச கணக்கில் பணம் இருக்கும்,உடல் ஊனம் உற்றவருக்கு ஐம்பது பைசா போடுவார்கள். ஒரு பத்து உரூபாய் கொடுத்தால் ஒண்ணும் குறைந்து விடாது. கொடுக்க மனம் வராது.


முடிந்தவரை செய்யுங்கள் என்கிறாள் ஆண்டாள்.

செய்யக் கூடாதது:

நெய்யுண்ணோம் =  நெய் உண்ணோம்

பாலுண்ணோம் = பால் உண்ணோம்

அது என்ன நெய்யும் பாலும் மட்டும் உண்ண மாட்டேன் என்கிறாள். மத்தது எல்லாம் ஒரு கட்டு கட்டலாமா?

அது அல்ல அர்த்தம். ஆயர் பாடியில் நெய்யும் பாலும் பஞ்சமில்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பி உண்பார்கள். விருப்பமானவற்றை தள்ளி வைப்போம் என்கிறாள். அதாவது புலன்கள் போகின்ற பக்கம் எல்லாம் போகாமல், அவற்றை அடக்கி இறைவனை நினைப்போம் என்கிறாள்.

சில பேர், காலையில் எழுந்து ஒரு காப்பி குடித்த பின் தான் பூஜை முதலியவற்றை செய்வார்கள். நாக்கு.


மையிட்டெழுதோம் =கண்ணுக்கு மை இட மாட்டோம்

மலரிட்டு நாம் முடியோம் = கூந்தலுக்கு மலர் சூடிக் கொள்ள மாட்டோம்

இறைவன் புற அழகை விரும்புவது இல்லை. அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறாள். கோவிலுக்குப் போகும் போது கூட , பட்டுப் புடவை, வைர அட்டிகை, கொஞ்சம் பௌடர் , கொஞ்சம் லிப்ஸ்டிக், மேட்சிங் கைப் பை (handbag ) என்று மினுக்கிக் கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். தலையில் பூ கூட வைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறாள்.

அதாவது, புற அழகு முக்கியம் அல்ல. மனமும், அறிவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பொருள்


செய்யாதன செய்யோம்  =  பெரியவர்கள், நல்லவர்கள், சான்றோர் செய்யாத எதையும் நாம் செய்ய மாட்டோம். அது தானே ஒழுக்கம் என்பது. ஒழுகுதல் என்றால் மேலிருந்து கீழே வருவது. கூரை ஒழுகுகிறது என்கிறோம். அதே போல் பெரியவர்கள் செய்ததை நாம் செய்வதும், அவர்கள் செய்யாமல் இருந்ததை நாம் செய்யாமல் இருப்பதும் ஒழுக்கம் எனப்படும்.

தீக்குறளைச் சென்றோதோம் = தீயனவற்றை பேசக் கூடாது. செய்வது மட்டும் அல்ல, பேசுவதும் கூட கூடாது. எவ்வளவு பேசுகிறோம்? அரட்டை அடிக்கிறோம்.  அவற்றை நிறுத்த வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


உய்யுமாறெண்ணி  = இதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும் ? செய்தால் தப்பிக்கலாம். இதில் இருந்து தப்பிக்கலாம்? இந்த பிறவி சுழலில் இருந்து தப்பிக்கலாம்.

உகந்தேலோரெம்பாவாய்! = இதை எல்லாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.  உகந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். கடமையே என்று செய்யக் கூடாது.

பூஜை செய்யும் போது உங்கள் முகம் சந்தோஷமாக இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள். ஒரு பாசுரம் படிக்கும் போது , விளக்கு ஏற்றும் போது , நாலு பூ போடும் போது மனம் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டும். அது தான் பூஜை.

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, இயந்திரம் போல் வாய் எதையோ முணுமுணுக்க , கை எதையோ செய்ய, மனம் எதையோ நினைக்க அப்படி செய்வது பூஜை இல்லை.

மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

அலுத்துக் கொள்ளாமல், கோபம் கொள்ளாமல், எரிச்சல் படாமல், மகிழ்ச்சியோடு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்து பழகுங்கள்.

வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

மனதில் ஒரு இனம் புரியாத இன்பம் பிறக்கிறதா இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_20.html

Wednesday, December 19, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_18.html



எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

என்று போன பிளாகில் முடித்திருந்தோம்.

அதிகாலையில் நீராடி இறைவனைத் தொழப் போகிறாள். 

ஏன் அதிகாலை? ஒரு ஒன்பது பத்து மணிக்குப் போனால் என்ன? 

நமது மனம் மூன்று நிலைகளில் செயல் படுவதாக நமது இலக்கியங்கள் பேசுகின்றன. 

சாத்வீகம், தாமசம்,  ரஜோ குணம் என்ற மூன்று நிலைகளில் நம் மனம் இயங்குகின்றது. 

நான் உண்ணும் உணவு, பருகும் நீர், உடுத்தும் உடை, தட்ப வெப்ப நிலை, யாரோடு பழகுகிறோம், நம் சுவாசத்தின் வகை, என்று  இவற்றை எல்லாம் பொறுத்து நம் மனம் மாறிக் கொண்டே இருக்கும். 

நாம் கவனிப்பது இல்லை. உற்று கவனித்தால் தெரியும் நம் மனம் எந்த நிலையில் இருந்து செயல்படுகிறது என்று. 

நாம் இயந்திரம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நம் மனதின் நிலையை நாம் அறிவதில்லை.

நம் உள் உணர்வை கூர்மை படுத்திக் கொண்டால், நம் மனதை நாம் அறிய முடியும். 


இந்த மூன்று மன நிலையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நாம் ஊன்றி கவனித்தால் அது தெரியும். 

இதில் சாத்வீகம் என்பது நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை. படிப்பது,  சிந்தனை செய்வது, தொழுவது, என்று நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை சாத்வீகம். 

அது அதிகாலையில் உச்சம் பெற்று இருக்கும். நாள் ஏற ஏற ரஜோ குணம் ஓங்கும்..பின் தாமச குணம் வரும்.

சாத்வீக நிலையில் மனம் இருக்கும் போது இறைவனை தொழ வேண்டும். 

நன்றாக கவனித்துப் பாருங்கள்...ஒரு  நாள் ...காலை ஐந்து மணிக்கு தொழுது பாருங்கள், இன்னொரு நாள் மதியம் ஒரு மணிக்கு தொழுது பாருங்கள். வித்தியாசம் தெரியும். மதியம் ஒரு மணிக்கு பிரார்த்தனை செய்தால் மனம் ஒருமுகப் படாது. 

அடுத்து,நீராடி இறைவனை தொழ செல்கிறாள் ஆண்டாள். 

சாத்வீக குணம் தூய்மையின் இருப்பிடம். வெண்மை, தூய்மை என்பன எல்லாம் அவற்றின் குணம். 

நாம் கோவிலுக்குப் போகும் போது நம் மனம் எப்படி இருக்கும்...? வீட்டுப் பிரச்சனை, பணப் பிரச்சனை, இப்போது போனால் parking கிடைக்குமா என்ற கவலை, எவ்வளவு சீக்கிரம் வர முடியும் என்ற கேள்வி, வந்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இவற்றோடு கோவிலுக்குப் போவோம். உடல் மட்டும் கோவிலுக்குப் போகிறது மனம் எங்கெங்கோ செல்லும். 

ஆண்டாளின் மனம் நாராயணன் மேல் குவிந்து நிற்கிறது. 

அவனுடைய தாயார் (ஏரார்ந்த இளம் கண்ணி), தந்தையார் (கூர்வேல் கொடுந்தொழிலன்),  அவன் முகம் (கதிர் மதியம் போல் முகத்தான்) என்று அவளுடைய சித்தனை எல்லாம் அவன் மேல் படிந்து நிற்கிறது. 

இப்படி ஒரு மனப் பட்டு சென்றால் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்பதில் அவளுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. 

அடித்துச் சொல்கிறாள். 

பாடலைப் படிக்கும் போது அதில் உள்ள ஒவ்வொரு குறிப்பையும் உன்னிப்பாக கவனித்தால் பல உண்மைகள் புலப்படும். 

எந்த வேலையை செய்தாலும், அதில் மனம் இலயித்து, ஒரு முகப் பட்டு  செய்தால்  வெற்றிதான் என்று சொல்லாமல் சொல்கிறாள் ஆண்டாள். 


Tuesday, December 18, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான்

திருப்பாவை - நமக்கே பறை வருவான் 



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்


மார்கழி திங்கள் = மார்கழி மாதத்தில்

மதிநிறைந்த = நிலவு நிறைந்த

நன்னாளால் = நல்ல நாளில்

நீராடப் போதுவீர்! = நீராடப் போகின்றவர்களே

போதுமினோ, = போவோம் வாருங்கள்

நேரிழையீர்! = உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே

சீர்மல்கும் =செல்வம் கொழிக்கும்

ஆய்பாடிச் = ஆயர்பாடியில்

செல்வச் சிறுமீர்காள்! = செல்வ சிறுமிகளே

கூர்வேல் = கூரிய வேலைக் கொண்டு

கொடுந்தொழிலன் = கொடுமையான தொழில் செய்யும்

நந்தகோபன் = நந்தகோபனின்

குமரன் = குமரன்

ஏரார்ந்த கண்ணி = ஏர் போன்ற கூர்மையான கண்களை உடைய

யசோதை  = யசோதையின்

இளஞ்சிங்கம் = இளைய சிங்கம்

கார்மேனிச் = கரிய மேனியை உடைய

செங்கண் = சிவந்த கண்களை உடைய

கதிர் = சூரியன்

மதியம் = நிலவு

போல் = போன்ற

முகத்தான் = முகத்தை உடைய

நாரா யணனே = நாராயணனே

நமக்கே = நமக்கே

பறைதருவான் = பறை தருவான்

பாரோர் = உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும்

புகழப் = புகழும்படி

படிந்தேலோ ரெம்பாவாய்! = (நோன்பில்) படிந்து இதை ஏற்றுக் கொள்வாய்

இரண்டு சொற்களை சேர்க்கும் போது ஒரு புது எழுத்தோ அல்லது சொல்லோ வரும். இரண்டு சொற்களை ஒட்டுப் போடும் பசை போல. அந்த விதிக்கு புணர்ச்சி இலக்கணம் என்று பெயர்.

இலக்கணத்தில் அது ஒரு பெரிய பிரிவு. வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள், பண்புப் பெயர் புணர்ச்சி என்று பல விதிகள் உள்ளன.

இடைச் சொல் என்பது அவற்றுள் ஒன்று. இரண்டு சொற்கள் சேரும் பொழுது நடுவில் ஒரு எழுத்தோ சொல்லோ வந்து அந்த சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை, சிறப்பை குறிக்கும் சொல்லுக்கு இடைச் சொல் என்று பெயர்.

ஏகாரம் அவற்றுள் ஒன்று.

இரண்டு சொற்களுக்கு நடுவில் "ஏ" என்று ஒரு எழுத்து வந்து அந்த சொற்களை இணைத்து அவற்றிற்கு மேலும் பொருள் சேர்ப்பது ஏகாரம்.

நால்வரில் இராமன் சிறந்தவன்.

நால்வரில் இராமனே சிறந்தவன்.

இதில் இரண்டாவது வரும் வாக்கியத்தில் உள்ள இராமனே என்ற சொல்லில் ஏகாரம் வருகிறது. அந்த ஏகாரம் பிரி நிலை ஏகாரம் எனப்படும். மற்றவர்களில் இருந்து இராமனை பிரித்துக் காட்டுவதால்.


ஊருக்குத்தானே போகிறாய் என்ற வாக்கியத்தில் வரும் ஏகாரம் வினாப் பொருளில் வந்தது. 


அன்பே சிறந்தது என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. தேற்றம் என்றால் உறுதி என்று பொருள்.

அவள் சிரித்தால் முத்தே தோற்றுப் போகும் என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு ஏகாரம். முத்து தோற்றுப் போகும் என்றும் சொல்லலாம். முத்தே தோற்றுப் போகும் என்றால் வேறு எதுவும் வெல்லாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 

பிச்சைக் காரனே கூட இதை வாங்கிக் கொள்ள மாட்டான் என்று சொல்லும் போது ஏகாரம் இழிவு நிலையில் வந்தது. 

இந்த பாசுரத்தில் ஆண்டாள் இரண்டு இடங்களில் ஏகாரத்தை கையாளுகிறாள். 

நாராயணனே, நமக்கே பறை தருவான் என்கிறாள். 

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொல்லி இருக்கலாம். 

நாராயணனே என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு. வேறு  யார் தந்தாலும் அவ்வளவு சிறப்பு இல்லை. 

அவன் எல்லோருக்கும் தர மாட்டான், "நமக்கே" தருவான். 

சரி, என்ன தருவான்? "பறை" தருவான். 

இது என்ன பறை? வேறு யாருமே சொல்லாத ஒன்றாக இருக்கிறதே. பறை என்றால்  ஒலி எழுப்பும் ஒரு வித தோல் கருவி. அதை வாங்கவா இந்தப் பாடு?

இருக்காது. 

பறை என்றால் சொல்லுவது. சத்தியம் செய்வது என்று எடுத்துக் கொள்ளலாம். 

பறைதல் என்றால் சொல்லுதல். இன்றும் மலையாளத்தில் இந்த சொல் வழங்குகிறது. 

"ஞான் பறையுன்னது கேக்கு"

"ஞான் பறைஞ்சிட்டலே"

என்று சொல்லுவார்கள். 

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு வரம் தருவான் என்று சொல்கிறாள். 

வரம் என்பது என்ன? நாம் கேட்பதை, விரும்புவதை இறைவன் "அப்படியே ஆகட்டும் " என்று சொல்லுவது தானே?

அதுதான் பறை தருவது. 

நாம்  இறைவனிடம் என்று இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கிறோம்.  இறைவனுக்குத் தெரியாதா, நமக்கு எது வேண்டும், எப்போது வேண்டும் என்று? அவனிடம் சென்று கேட்பது அவனுடைய சக்தியை குறைத்து மதிப்பிடுவது போன்றது. 

பெற்ற குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்று அறிந்து பால் தருவாள் தாய். அந்தக் குழந்தை வந்து, "அம்மா, எனக்கு பசிக்கிறது , பால் தா " என்று கேட்பதில்லை. 

தாய்க்குத் தெரியும் எப்போது என்ன தர வேண்டும் என்று. 

இறைவன் தாயினும் மேலானவன் அல்லவா?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து 

என்பார் மணிவாசகர். 

நமக்குஎன்ன வேண்டும் என்று நாம் அறிவதற்கு முன்பே இறைவன் அறிந்து நமக்குத் தருவான் என்பது அதன் பொருள். 

அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்....

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

அவனுக்குத் தெரியும் நமக்கு எது தேவை என்று. எதுக்கு நாம போயி கேக்கணும். அவனே தருவான். 

இன்னொரு செய்தியும் கூட எனக்கு இந்த பாசுரத்தில் பிடித்தது....அது என்ன என்றால்...


நமக்கு ஒரு நல்லது கிடைக்கும் என்றால் அது எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்ற பரந்த மனப்பான்மை. 

யோசித்துப் பார்ப்போம். நமக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைக்கிறது என்றால் நாம்  அதை எல்லோரிடமும் சொல்வோமா ? எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள நினைப்போமா அல்லது நமக்கு மட்டுமே வேண்டும் என்று நினைப்போமா?

ஆண்டாள், இறைவனை நாடி,  அவன் அருள் பெற நினைக்கிறாள். தான் மட்டும் இரகசியமாக போய்  அதைப் பெற்றுக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கவில்லை.

"செல்வச் சிறுமிகாள்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டுப் போகிறாள். 

எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

மேலும் சிந்திப்போம்.




Sunday, December 9, 2018

வில்லி பாரதம் - அவை அடக்கம்

வில்லி பாரதம் - அவை அடக்கம் 


பெரிய இலக்கியங்களை செய்தவர்கள், இறை வணக்கம் செய்த பின் அவை அடக்கம் சொல்வது வழக்கம்.

தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்ல வந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல இருக்கும்.

இதற்கு அவை அடக்கம் என்று பெயர்.

எதற்கு இந்த அவை அடக்கம்? வித்தை என்றால் ஒரு கர்வம் வேண்டாமா? ஒரு பெருமை வேண்டாமா? இது என்ன தாழ்வு மனப்பான்மை என்று கேட்கலாம். இப்படி சொல்லி சொல்லியே தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது என்று சொல்கிறார்கள். கம்பரும், வில்லி புத்தூர் ஆழ்வாரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று மற்ற தமிழர்ககள் அடங்கிப் போய் விடுகிறார்கள்.

இது தேவையா ? மற்ற மொழிகளில் இப்படி இருப்பதாகக் காணோம்.

அவை அடக்கத்துக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை அல்ல. கல்வியின் ஆழ அகலம் தெரிந்ததால் வந்த பயம், வந்த பணிவு.

ஏதோ கொஞ்சம் தெரிந்து விட்டு, எல்லாம் தனக்குத் தெரியும் என்று மார் தட்டி அலைபவர்களைப் பார்க்கிறோம். அறிவின் ஆழம் தெரியாதவர்கள். அறிவின் ஆழம் தெரிந்தால் பேச்சு வருமா ?

அவை அடக்கம் சொல்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. கல்வியின், அறிவின் வீச்சு அறிந்ததால் அவர்களிடம் தானே வந்த பணிவு அது.

வில்லிப் புத்தூர் ஆழ்வார் அவை அடக்கம் பாடுகிறார்.

"வட மொழியில் வியாசர் பாடிய மகா பாரதத்தை நான் பாடுவது எப்படி இருக்கிறது தெரியுமா? சூரிய உதயத்தின் அழகை கண்ணில்லாதவனுக்கு ஒரு ஊமையன் சொல்லியது மாதிரி இருக்கிறது" என்கிறார்.

கண்ணில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் சூரிய ஒளியின் அழகு புரிபட போவதில்லை. அதுவும் சொல்லுவான் ஒரு ஊமையன் என்றால் எப்படி இருக்கும்.

மகா பாரதம் என்ற சூரிய ஒளி போன்ற பெரிய காவியத்தை ஊமையனான நான் கண்ணில்லாத உங்களுக்குச் சொல்கிறேன். விளங்கின மாதிரிதான் என்கிறார்.

பாடல்

மண்ணிலாரணநிகரெனவியாதனார்வகுத்த
எண்ணிலாநெடுங்காதையையானறிந்தியம்பல்
விண்ணிலாதவன்விளங்குநீடெல்லையையூமன்
கண்ணிலாதவன்கேட்டலுங்காண்டலுங்கடுக்கும்.

பொருள்


மண்ணில் = இந்த உலகில்

ஆரண = வேதத்துக்கு

நிகரென = ஒப்பான

வியாதனார் = வியாசர்

வகுத்த = அருளிய

எண்ணிலா = கணக்கில் அடங்காத

நெடுங்காதையை = பெரிய கதையை

யானறிந்தியம்பல் = யான் + அறிந்து + இயம்பல் = நான் அறிந்து சொல்லுவது

விண்ணில் = ஆகாயத்தில்

ஆதவன் = சூரியன்

விளங்கு = ஒளிவிட்டு விளங்குகின்றதை

நீடெல்லையை = அந்த பெரிய ஆகாயத்தை

யூமன் = ஊமை

கண்ணிலாதவன் = குருடன்

கேட்டலுங் = கேட்டததும்

காண்டலுங் = கண்டதும்

கடுக்கும். = ஆகும்

ஒளி வீசும் அந்த வானத்தின் அழகை , அந்த ஆகாயத்தைப் பற்றி ஊமையன் சொல்ல குருடன்  கேட்ட கதை மாதிரி என்கிறார்.

அவை அடக்கம் ஒரு புறம் இருக்கட்டும்.

பெரிய காவியங்களில், இலக்கிய படைப்புகளில் எவ்வளவோ அரிய பெரிய உண்மைகள் , தத்துவங்கள் கொட்டிக் கிடக்கும். ஆழ்ந்து, அறிய வேண்டும்.

மாறாக, நமது சிற்றறிவைக் கொண்டு அந்த இலக்கியங்களை உரசிப் பார்த்து , அது சரி இல்லை, இது சரி இல்லை என்று அவற்றை நம் தரத்துக்கு கீழே கொண்டு வரக் கூடாது. நாம் மேலே போக நினைக்க வேண்டுமே அல்லாமல், அவற்றை கீழே கொண்டு வரக் கூடாது.

மிகப் பெரிய உண்மைகளை கண்டு நம்மிடம் சொல்கிறார்கள். கண் இருந்தும்  குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருந்து விடக் கூடாது.

புரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ நல்லதை சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள். கேட்டுத்தான் பார்ப்போமே.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_9.html


Tuesday, December 4, 2018

நற்றிணை - அம்ம , நாணுதும்

நற்றிணை - அம்ம , நாணுதும்


அவள் ஒரு இளம் பெண். கடற்கரை ஓரம் அவள் ஊர். எந்நேரமும் அலையின் சத்தமும், தலை வருடும் கடல் காற்றும் உள்ள ஊர். வயதில் வரும் காதல் அவளுக்கும் வந்தது. காதலனோடு ஓடி ஆடி மகிழ்கிறாள். இருவரும் ஓடி வந்த களைப்புத் தீர ஒரு பபுன்னை மரத்தின் அடியில் வந்து நிற்கிறார்கள். இருவர் முகத்திலும் சந்தோஷம் கரை புரண்டு ஓடுகிறது.

அந்த சந்தோஷத்தில், அவன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறான். அவளுக்கும் ஆசை தான். இருந்தும் நாணம் அவளைத் தடுக்கிறது.

அவள் சொல்கிறாள்

"நான் சிறு பிள்ளையாக  இருந்த போது, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது , ஒரு நாள்  ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை.  என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய்யும் பாலும் ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை  போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு கட்டிப் பிடித்து இன்பம் அனுபவிக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்  " என்று.

பாடல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. 10

பொருள்


விளையாடு = என்னோடு விளையாடும்

ஆயமொடு = தோழிகளோடு

வெண் மணல் அழுத்தி = வெள்ளை மணலில் அழுத்தி

மறந்தனம் = மறந்து விட்டோம்

துறந்த = துறந்தும் விட்டோம்

காழ் = விதை

முளை = முளை விட்டு

அகைய = கிளை விட்டு பெரிதாகி

'நெய்  பெய் = நெய் ஊற்றி

தீம் பால் பெய்து = சுவையான பாலை இட்டு

இனிது வளர்ப்ப; = சிறப்பாக வளர்த்து வரும் போது

நும்மினும் சிறந்தது = உன்னை விட சிறந்தவள்

நுவ்வை ஆகும்' என்று = உன் தமக்கை ஆகும் என்று

அன்னை கூறினள் = என் தாய் கூறினாள்

புன்னையது நலனே = என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்

அம்ம! = அம்மா

நாணுதும் = எனக்கு வெட்கமாக இருக்கிறது

நும்மொடு நகையே = உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது

விருந்தின் பாணர் = விருந்தாக வந்த பாணன்

விளர் இசை கடுப்ப = மெல்லிய இனிய இசை போல

வலம்புரி = வலம்புரி சங்கு

வான் கோடு நரலும் = வானம் போல வெளுத்த , அது இசைக்கும்

இலங்கு நீர்த் = அப்படிப்பட்ட நீரை உடைய

துறை கெழு = நிலத்தின் தலைவனே

கொண்க!- = அறிந்து கொள்

நீ நல்கின் = நீ கொடுத்தால், நீ சம்மதித்தால்



இறைபடு நீழல் = நிறைந்த நிழல் தரும் மரங்கள் 

பிறவுமார் உளவே. = இங்கு நிறையவே இருக்கிறது

நாம், நமது சூழ்நிலையை மறந்து இயந்திரம் போல வாழ்கிறோம். நம் சூழ்நிலை
நம்மை பாதிக்கும். அதை நாம் உணர்வது இல்லை.

நாம் வாழும் வீடு, அது இருக்கும் இடம், அதன் சுற்றுப் புற சூழல் இவை எல்லாம்
நம்மை , நம் சிந்தனைகளை பாதிக்கும்.

பெரிய வீடு, சுத்தமான வீடு, தோட்டம் உள்ள வீடு,அமைதியான வீடு நம்மை
ஒரு விதத்தில் பாதிக்கும் என்றால், சிறிய வீடு, குப்பை போல இருக்கும் வீடு,
நெருங்கிய வீடுகளின் நடுவில் இருக்கும் வீடு வேறு விதத்தில் பாதிக்கும்.

இந்த பாதிப்புகளை அறியாமலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சுற்றுப் புறத்தை மேம் படுத்துங்கள்..உங்கள் மனமும் மேம்படும்.

தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நிலத்தை ஒட்டி அமைத்தார்கள். நிலம், அதில் பெய்யும் மழை, அங்கு வளரும் தாவரங்கள், அங்கே இருக்கும் விலங்குகள் எல்லாமே நம்மை பாதிக்கும். நம் எண்ணங்களை, சிந்தனைகளை மாற்றும். வீட்டில் ஒரு நாயோ, பூனையோ, கிளியோ வளர்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விலங்குகள் எப்படி தங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என்று.

அதே போலத் தான் வீட்டில் ஒரு துளசிச் செடியோ, வேறு எந்த செடியோ, கொடியோ நட்டு வைத்து வளர்த்துப் பாருங்கள், அவை வெளியில் மட்டும் அல்ல, உங்கள் மனதுக்குள்ளும் வேர் விட்டு வளர்வதை உணர்வீர்கள்.

இந்த பாடலின் பெண், தான் நட்ட மரம் தன் உணர்வுகளை எப்படி பாதிக்கிறது என்று சொல்கிறாள். அப்படி இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.

மரத்தைக் கூட உடன் பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்த சமுதாயம் நம்  சமுதாயம். 

குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம், உன்னோடு எழுவரானோம் என்று இராமன் கூறினான்.

அனைத்து மக்களையும் சகோதர அன்புடன் கண்டது அவன் மனம்.

இங்கே ஒரு படி மேலே போய் , தான் நட்டு வைத்த மரத்தை கூட தன் சகோதரியாக நினைக்கிறாள்.

நாணம் வந்தாலும், ஆசையும் விடவில்லை. இந்த மரம் வேண்டாம்...இது போல நிறைய  நிழல் தரும் மரங்கள் இருக்கின்றன என்று கூறுகிறாள். குறும்பு  கொப்பளிக்கும் இடம்.

யார் கண்டது அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின், பாட்டியின் பாட்டியாகக் கூட இருக்கலாம்.

நற்றிணை. சங்ககாலப் பாடல். எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டது.

அவளின் காதல், அவளின் நாணம், அந்த மரத்தின் மேல் அவள் கொண்ட அன்பு எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கிறது அல்லவா...அது தான் கவிதை.

கொடுத்து வைத்திருக்க வேண்டும்...இதையெல்லாம் படிக்க, இரசிக்க.

கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். 

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_4.html

Monday, December 3, 2018

பெரிய புராணம் - காதலும் கோபமும்

பெரிய புராணம் - காதலும் கோபமும் 


சுந்தரர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். எல்லோரும் திருமண மண்டபம் வந்து விட்டார்கள். அப்போது, சிவ பெருமான் ஒரு முதியவர் வேடத்தில் வந்து "இந்த சுந்தரன் என் அடிமை. இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ...நான் இட்ட வேலைகளை செய்து கொண்டு எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் ..இவன் எனக்கு அடிமை என்று இவன் தாத்தா எழுதித் தந்த ஓலை என்னிடம் இருக்கிறது " என்றார்.

அது கேட்ட சுந்தரர் கோபம் கொண்டு "நீ என்ன பித்தனா ? எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா " என்று பேசினார்.

சிவன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இப்போது புறப்படு. நிறைய வேலை இருக்கிறது "

சுந்தரர் பார்த்தார். இந்த ஆளைப் பார்த்தால் மனதில் ஏதோ ஒரு அன்பு பிறக்கிறது. இருந்தாலும் இவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருகிறது. எதுக்கும் அந்த ஓலையில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து "சரி, நீ ஓலையைக் காட்டு"  என்றார்.


பாடல்


கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 
தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை.


பொருள்

கண்டது ஓர் வடிவால் = கண்டது ஒரு வடிவத்தை


உள்ளம் காதல் செய்து  = கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு

உருகா நிற்கும் = உருகி நிற்கும்

கொண்டது ஓர் பித்த வார்த்தை  = ஆனால், இவர் பேசுவதோ பைத்தியகாரன் மாதிரி இருக்கிறது

கோபமும் உடனே ஆக்கும் = கேட்டவுடன் உடனே கோபம் வருகிறது

உண்டு ஓர்ஆள் ஓலை  = ஒரு ஓலை இருக்கிறது என்று சொல்கிறாரே

என்னும் அதன் உண்மை அறிவேன் = அதன் உண்மை என்ன என்று அறிவேன்

என்று  = என்று மனதில் நினைத்து

தொண்டனார் = சுந்தரர்

 ‘ஓலை காட்டு’ என்றனர் = சரி அந்த ஓலையை காட்டு என்றார்

 துணைவனாரை. = துணைவனான சிவனைப் பார்த்து

காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் வந்து விடும்.

அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு.

மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும்.

மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல் , அப்படியே முடிவு செய்து விடும்.

சிவனை கண்டவுடன் சுந்தரருக்கு உடனே மனதில் காதல் பிறந்தது.

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.



பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.

இராமன் கானகம் போகிறான். தூரத்தில் அவன் வருவதை அனுமன் காண்கிறான்.

பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. "என் எலும்பு உருகுகிறது. அளவற்ற காதல் பிறக்கிறது. அன்புக்கோ அளவு இல்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை " என்று தவிக்கிறான்.

துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.

குகன் இராமனைக்  கண்டபோதும், விபீஷணன் இராமனைக் கண்ட போதும் இதே நிலை தான்.  பார்த்தவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு வரும். நீண்ட நாள் பிரிந்த பின் கூடுவது போல ஒரு அன்பு பிறக்கும்.

முன்பே கூறியது போல, இறைவனை தேடி காண முடியாது. அவனை காணும் போது உள்ளம் அறியும். அறிவுக்குத் தெரியாது. அறிவு தேடிக் கொண்டே இருக்கும். அறிவின் வேலை அது.

சுந்தரருக்கு சிவன் மேல் காதல் பிறந்த அதே நேரம், சிவனின் சொற்களை கேட்டு கோபமும் பிறக்கிறது.

இருந்தும், இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உண்மை என்ன என்று அறிய முற்படுகிறார்.

நாம் வாழ்வில் உணர்ச்சி மிகுதியில் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

அது அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி

 நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

பெரிய புராணத்தில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை. அவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_3.html

Sunday, December 2, 2018

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும்

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும் 


சுந்தரர் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். அப்போது , சிவ பெருமான், ஒரு முதிய அந்தணன் வடிவில் வந்து , "நீ எனது அடிமை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என் பின்னே வா " என்று அழைக்கிறார். அதனால் கோபம் கொண்ட சுந்தரர் "ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆகும் வழக்கம் உண்டா. நீ என்ன பித்தனா " என்று கேட்கிறார்.

அதுவரை முந்தைய ப்ளாகுகளில் பார்த்ததோம்.

சுந்தரர் , "நீ பித்தனா?" என்று கேட்டவுடன் சிவ பெருமான் சொல்கிறார்

"நான் பித்தனோ, பேயனோ ..நீ என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. சும்மா வள வள என்று பேசிக் கொண்டிருக்காதே. புறப்படு , நிறைய வேலை இருக்கிறது உனக்கு செய்ய " என்றார்.

பாடல்

‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்;
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார்.


பொருள்

‘பித்தனும் ஆகப் = பித்தன் என்றாலும் சரி

பின்னும் பேயனும் ஆக, = பேயன் ஆகவும் இருந்து விட்டுப் போகிறேன்

நீ இன்று = நீ இன்று

எத்தனை தீங்கு சொன்னால்  = எத்தனை தீய வார்த்தைகளால் என்னை நிந்தித்தாலும்

யாதும் மற்று அவற்றால் நாணேன்; = அதுக்கெல்லாம் நாம் வெட்கப் பட மாட்டேன்

அத்தனைக்கு  = அனைத்துக்கும் மேலாக

என்னை  ஒன்றும் அறிந்திலை = நீ என்னை அறிய மாட்டாய்

ஆகில் = எனவே

நின்று = இங்கே வெட்டியாக நின்று கொண்டு

வித்தகம் பேச வேண்டாம்; = எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம்

பணி செய வேண்டும்’ = எனக்கு நீ பணி செய்ய வேண்டும்

என்றார். = என்று கூறினார்

எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், சுவர்க்கம் போக வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.

"சரி, கிளம்புங்கள் போவோம் " என்று கூறினால், எத்தனை பேர் அப்படியே கிளம்பி வருவார்கள்.

"இப்ப எப்படி வர முடியும்...பிள்ளைகளை தனியா விட்டு விட்டு எப்படி வர முடியும் ? அதுகளுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்" என்பார்கள்.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து "சரி , இப்போது தான் பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடித்து வாழ்வில் வழி கண்டு விட்டார்களே, கிளம்பலாமா ?" என்று கேட்டால் ..."ஐயோ, வயதான பெற்றோரை எப்படி விட்டு விட்டு வர முடியும்? அது மட்டும் அல்ல, நான் இல்லா விட்டால் என் கணவன் / மனைவி தனியா என்ன செய்வார்/செய்வாள் ..." என்று தட்டிக் கழிப்பார்கள்.

யாருக்கும் இதை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சொல்வது என்னவோ இறைவன் திருவடி, சுவர்க்கம் என்று.

இறைவன் நேரில் வந்து, "கிளம்பு என்னோடு" என்று கூப்பிட்டார். சுந்தரர் போகாதது மட்டும் அல்ல...அப்படி கூப்பிட்ட இறைவனை ஏசவும் தலைப் படுகிறார்.


சரி, இந்த சுவர்க்கம், இறைவன் திருவடி என்று சொல்கிறார்களே, ஒரு வேளை அங்கு போய் சேர்ந்து விட்டால், அப்புறம் என்ன செய்வது ? எந்நேரமும் பாட்டு, பஜனை, இறைவனை பார்த்துக் கொண்டே இருப்பது ...இது தானா வேலை. சலித்துப் போகாதா. எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் , எவ்வளவு சர்க்கரை பொங்கல் சாப்பிட முடியும், எவ்வளவு பாயசம் குடிக்க முடியும்.

சொர்க்கம் என்பது சோம்பேறிகளின் இருப்பிடமா ? ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு , நடனமாடும் பெண்களை சைட் அடித்துக் கொண்டு இருப்பது தான் வேலையா?  சரி, ஆண்களுக்காவது சில பல அழகாகன பெண்களை பார்த்து இரசிக்கலாம்...பெண்கள் பாவம் என்ன செய்வார்கள் ?

சுவர்க்கம் என்பது அது அல்ல. இறைவன் திருவடி என்றால் சும்மா போய் உட்கார்ந்து இருப்பது அல்ல.

வேலை செய்வது. பணி செய்வது.

என்ன பணி, யாருக்குப் பணி?

நல்ல வேலை, நல்லவர்களுக்கு வேலை செய்வது.

வேலை செய்வது ஒன்று தான் சுவர்க்கம். அது தான் இறைவன் திருவடி.

சுந்தரரிடம் , சிவன் சொன்னது அது தான். "வா சொர்கத்துக்ப் போகலாம் " என்று சொல்ல வில்லை. "வா , வேலை இருக்கிறது " என்றார்.

மணிவாசகர் சொல்லுவார் " எது எமை பணி கொள்ளுமாறு, அது கேட்போம் " என்று.

அதாவது, "இறைவா, எங்களுக்கு ஏதாவது வேலை கொடு. நீ என்ன வேலை கொடுத்தாலும் அப்படியே செய்கிறோம்" என்கிறார்.

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


"அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டு விட்டால் 
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே "

என்பார் தாயுமான சுவாமிகள்.

"என் கடன் பணி செய்து கிடப்பதே " என்பார் அப்பரடிகள்.


எங்களுக்கு எதாவது சின்ன சின்ன வேலைகள் கொடு என்று ஆண்டாள் , கண்ணனிடம் வேண்டுகிறாள் "குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது "

ஏவல் = ஏவுதல். அதைச் செய், இதைச் செய் என்று ஏவுதல்.

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

சுவர்க்கம், இறைவன் திருவடி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

பணி செய்து பழகுங்கள். அங்கே போனாலும் அது தான் செய்ய வேண்டி வரும்.

பணி செய்யுங்கள். பணிந்து செய்யுங்கள். அதுவே இறைவனை அடியும் வழி.

சுந்தரர் போனாரா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post.html

Thursday, November 29, 2018

பெரிய புராணம் - பித்தனோ?

பெரிய புராணம் - பித்தனோ?



இதை படிக்கத் தொடங்கும் முன், முந்திய பிளாக்கை படித்து விடுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html

இறைவனை எப்படி வழி படலாம்?

பூக்கள் இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, பட்டாடை சாத்தி, பன்னீர், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, துதிப் பாடல்களைப் பாடி வழி படலாம் என்று சொல்லுவீர்கள்.

இறைவனை எப்படியும் வழி படலாம் என்று சொல்ல வந்ததுதான் பெரிய புராணம். எனவே தான் அதற்கு பெரிய புராணம் என்று பெயர்.

இறைவனை இப்படித்தான் வழி பட வேண்டும் என்று அல்ல.

சுந்தரர் , இறைவனை பைத்தியக்காரன் என்று திட்டுகிறார். யோசித்துப் பாருங்கள், வேறு எந்த மதத்திலாவது, அந்த மதத்தின் மூலக் கடவுளை பைத்தியம் என்று சொல்ல முடியுமா ? சொன்னால் விட்டு விடுவார்களா?

சைவ சமயம் ஒன்றுதான் அந்த சுதந்திரத்தைத் தருகிறது.

நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றும் தெரியாத கடவுளை எப்படி வழிபடுவது? எனவே தான் சைவம் நம் அறியாமையை ஏற்றுக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் வழி படு என்று சுதந்திரம் தருகிறது.

நேரில் வந்த சிவ பெருமானை, சுந்தரர் "நீ என்னை உன் அடிமை என்கிறாய். எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா. இப்படிச் சொல்கிறாயே நீ என்ன பைத்தியமா " என்று கேட்டார்.

பாடல்


மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார்.


பொருள்

மாசு இலா = குற்றம் இல்லாத

மரபில் வந்த = வழியில் வந்த

வள்ளல் = வள்ளல் குணம் கொண்ட சுந்தரர்

வேதியனை நோக்கி = அங்கு வந்த வயதான வேதியனை நோக்கி

நேசம் முன் கிடந்த = முன்பு இருந்த நேசம் நீங்கி

சிந்தை நெகிழ்ச்சி யால்  = சிந்தை நெகிழ்ந்து

சிரிப்பு நீங்கி = முகத்தில் இருந்த சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் = குற்றம் அற்ற

அந்தணர்கள் = அந்தணர்கள்

வேறு ஓர் அந்தணர்க்கு = வேறு ஒரு அந்தணர்க்கு

அடிமை ஆதல் = அடிமை ஆவது

பேச = பேசும்படி

இன்று உன்னைக் கேட்டோம் = இன்று நீ சொல்லக் கேட்டோம்

பித்தனோ = நீ என்ன பித்தனா ?

மறையோய்?” = மறை ஓதியவனே

என்றார். = என்று கூறினார்.

இறைவன் நேரில் வந்திருக்கிறான். அடையாளம் தெரியவில்லை. நீ என்ன பைத்தியமா  என்று கேட்டார் சுந்தரர். கேட்டது போகட்டும், அப்படி சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவனை பித்தன் என்று இகழ்ந்து கூறிய சுந்தரரை நாயன்மார்களில் சிறந்த நால்வரில் ஒருவராக சைவ சமயம் போற்றுகிறது.

தோத்திரம் தந்த நால்வரில் சுந்தரர் ஒருவர்.

என்னடா இது, நாம் பெரிதாக நினைத்து வழிபடும் கடவுளை திட்டுகிறானே என்று அவரை ஒதுக்கி வைக்கவில்லை. தலையில் வைத்து கொண்டாடுகிறது சைவ சமயம்.


சைவ சமயத்தின் நீளமும் ஆழமும் புரிகிறதா?

சரி, நாம் கொண்டாடுவது இருக்கட்டும். தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா ?

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_29.html

Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


Wednesday, November 21, 2018

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார்

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார் 


நாளும் அலைந்து திரிகிறோம். கடுமையாக உழைக்கிறோம். அதைச் செய், இதைச் செய் என்று ஆலாய் பறக்கிறோம்.

கடைசியில் கண்டது என்ன?

வீட்டு மனைப் பத்திரங்களும் , பங்கு சந்தை certificate களும், வாங்கிக் கணக்குமே. வாழ் நாள் எல்லாம் இதற்கே போய் விட்டது. இதனால் ஏதாவது பலன் உண்டா என்றால் இல்லை. எப்போவாது அனுபவித்துக் கொள்ளலாம் என்று இருந்தோம்...அந்த நாள் வரவே இல்லை.

பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்தோம்...அவர்களோ, "இதெல்லாம் ஒரு பெரிய சொத்தா..." என்று எள்ளி நகையாடுகிறார்கள். என்ன செய்வது?


இவ்வளவு முயற்சியும் வீணே போய் விட்டதா ? "நமக்கு" ஒரு பலனும் இல்லையா ?

சுந்தரர் திகைக்கிறார். பணம் எல்லாம் சேர்த்து வைத்து விட்டு வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் என்று இருந்தேனே...இப்போது ஒன்றுக்கும் இல்லாமல் தனித்து நிற்கிறேனே என்று திகைக்கிறார்.

நல்ல நிலத்தில் நீர் பாய்ச்சினால் அதனால் பலன் கிடைக்கும். பாலைவனத்தில் நீர் பாய்ச்சினால்?


"இறைவன் மேல், உண்மையின் மேல் பற்று இல்லாமல் வாழ்ந்து, பாழ் நிலத்துக்கே நீர் பாய்ச்சினேன். பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பட்டால் தான் அறிவு வரும் கயவர்களுக்கு என்று சொல்லுவது போல நான் இருக்கிறேன். இப்படி இருக்கிறேன். என் செய்வேன்? உலக வாழ்க்கைச் சிக்கலில் சிக்கி ஞானம் தரும் நூல் ஒன்றையும் கற்கவிலை. இந்தப் பிறவி என்ற பந்தத்தில் இருந்து விடுபட ஒரு வழியும் தெரியவில்லையே " என்று திகைக்கிறார்....

பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொருள்


பற்றிலா = பற்று இல்லா (இறைவன் மேல் பற்று இல்லாத)

வாழ்க்கை வாழ்ந்து  = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பாழ் நிலத்துக்கே

நீரி றைத்தேன் = நீர் இறைத்தேன்

உற்றலாற் = உற்று + அல்லால் = பட்டால் ஒழிய

கயவர் = கெட்டவர்கள்

தேறா ரென்னுங்  = தேறார் எனும். தேற மாட்டார்கள் என்னும்

கட் டுரையோ டொத்தேன் = கட்டுரையோடு ஒத்தேன். பழமொழிக்கு பொருள் ஆனேன்

எற்றுளேன் = எதற்காக இருக்கிறேன்

என் செய்கேன் நான்  = என்ன செய்வேன்  நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானமேதும் = ஞானம் எதுவும்

கற்றிலேன் = கற்றுக் கொள்ள வில்லை

களைகண்காணேன் =  இந்த   சிக்கலில் இருந்து  விடுபடும் வழியும் அரிய மாட்டேன்

கடவூர்வீ ரட்டனீரே. = திருக்கடவூரில் உள்ள வீரட்டனாரே

பட்டுத் தெளிவதை விட, கற்றுத் தெரிவது நல்லது.

செய்யும் செயல்களின் விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். சும்மா  கண்ணை மூடிக் கொண்டு குருட்டுத் தனமாக எதையாவது செய்யக் கூடாது.

இருக்கும் நாள் குறைவு. அதை சிறப்பாக செலவழிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_53.html


கம்ப இராமாயணம் - ஒத்தது

கம்ப இராமாயணம் - ஒத்தது


வெற்றி பெற்று விட்டால், "என்னைப் போல் யார் உண்டு. நான் எவ்வளவு திறமைசாலி தெரியுமா " என்று நினைப்பதும், தோல்வி அடைந்து விட்டால் ஏதோ இந்த உலகமே தனக்கு எதிராக சதி செய்வது போலவும் நினைப்பது மனித இயல்பு.

வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் ஒருவர் மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. வெற்றியோ தோல்வியோ அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சரியான நேரத்தில் அல்லது பிழையான நேரத்தில் எடுத்த முடிவுகள், ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் நாம் செய்யும் ஆராய்ச்சி, துணை, நட்பு, இப்படி பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து நம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

எப்படி வெற்றிக்கு நாம் முழு காரணம் இல்லையோ, தோல்விக்கும் நாம் முழு காரணம் இல்லை.

ஆனால் இது வெற்றி வரும் போது புரிவது இல்லை. வெற்றி வரும் போது தலை கால் தெரியாமல் ஆடுவது. அப்படி என்றால் தோல்வி வரும் போது துவண்டு போவது என்பது கட்டாயம்.

முதல் நாள் போரில் இராவணன் தோல்வி அடைந்து அரண்மனைக்கு வருகிறான்.

அவன் எப்பேர்பட்டவன் ? நமது வாழ்க்கையை கோள்கள் தீர்மானிக்கின்றன. கோள்களின் வாழ்க்கையை தீர்மானம் செய்தவன் இராவணன். ஒன்பது கோள்களையும் பிடித்து வந்து தனது அரியணை படியில் படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறி நடந்து செல்வான் அவன். அவ்வளவு ஆற்றல்.

அந்த வெற்றிக்குக் காரணம் யார் ?

அவன் செய்த தவத்தால் கொற்றவை என்ற ஒரு பெண் தெய்வம் அவனை நோக்கிக் கொண்டே இருந்தாள். அவள் பார்வை அவன் மேல் படும் வரை அவனுக்கு வெற்றி வந்து கொண்டு இருந்தது. அவள் பார்வையை திருப்பினாள். அவன் வெற்றி போய் விட்டது.

துவண்டு போய் வருகிறான். வருகிற வழியில் அழகான பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வை எல்லாம் கூரிய வாளைப் போல இருக்கிறது. பிள்ளைகள் பேசுவது கூட இராமனின் அம்பு போல குத்துகிறது. வாடுகிறான்.


பாடல்


நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம

வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;--

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்

தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை.


பொருள்

நாள் ஒத்த = நாளில் மலர்ந்த தாமரை மலரைப் போன்ற

நளினம் அன்ன = அழகான

முகத்தியர் = முகத்தைக் கொண்ட பெண்களின்

நயனம் எல்லாம் = கண்கள் எல்லாம்


வாள் ஒத்த; = கூர்மையான வாளைப் போல இருந்தன (இராவணனுக்கு)

மைந்தர் வார்த்தை = பிள்ளைகளின் பேச்சு

இராகவன் வாளி ஒத்த = இராமனின் அம்பை போல துன்பம் செய்தன

கோள் ஒத்த = ஒன்பது கோள்களையும்

சிறை வைத்து = சிறை வைத்த்து

ஆண்ட = ஆட்சி செய்த

கொற்றவற்கு = மன்னனுக்கு

அற்றைநாள் = அந்த நாள்

தன் = தன்னுடைய

தோள் ஒத்த = தோள்களை போல (மதர்த்து நின்ற)

துணை = துணையான இரண்டு

மென் = மென்மையான

கொங்கை = மார்பகங்களைக் கொண்ட (கொற்றவையின்)

நோக்கு = பார்வை

அங்குத் தொடர்கிலாமை = அங்கு தொடர்ந்து வராமையால்

சில பாடங்கள்

முதலாவது, வாழ்வில் வெற்றி தோல்வி வரும் போகும். கிரகங்களை கட்டி ஆண்ட  இராவணனுக்கு தோல்வி வரும் என்றால் நாம் எம்மாத்திரம். ஏதோ நாம் தான் உலகிலேயே பெரிய பலசாலி, புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டாவது, வெற்றியில் ஆடினால், தோல்வியில் மனைவியின் அன்பு பார்வை கூட  சுட்டெரிப்பது போல  இருக்கும்.பிள்ளைகளின் மழலை கூட துன்பம் தரும். நிதானம் வேண்டும்.

மூன்றாவது, வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. அதிர்ஷட தேவதையின் பார்வை திரும்பினால் ஆனானப் பட்டவனும் தோல்வியை ருசிக்கத்தான் வேண்டி இருக்கும்.

நான்காவது, நாம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமது மற்றும் அவர்களின் வெற்றி தோல்வியை வைத்ததே எடை போடுகிறோம். பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க வேண்டும், கணவன் நிறைய சம்பாதிக்க வேண்டும்,  மனைவி சினிமாவில் வரும் நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்...இதில் எதுவும் குறைந்தால் நமக்கு வருத்தம் வருகிறது. பிள்ளைகள், மார்க் குறைந்தால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று கவலைப் படுகிறார்கள்.  வேலை போய் விட்டால் மனைவி நம்மை மதிப்பாளோ மாட்டாளோ என்று கணவன்  பயப்படுகிறான். வேலையில் சம்பள உயர்வு வரவில்லை என்றால் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். இது மாற வேண்டும். வெற்றியோ தோல்வியோ, மனிதர்களை மனிதர்களாக மதிக்க, நேசிக்க கற்க வேண்டும். முதலில் நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி எது வந்தாலும் நீங்கள் நல்லவர், அன்பானவர், இனிமையானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இல்லை என்றால் , தோல்வி வந்தால் மனைவி முகமும் கத்தி போல அறுக்கும், பிள்ளைகள் குரலும் அம்பு போல குத்தும்.  அது

அது அரக்க குணம். நாம் அரக்கர்கள் இல்லையே. அந்த குணம் நமக்கு எதுக்கு.

வெற்றி தோல்விகளை தள்ளி வைத்து விட்டு வாழ்வை நேசிக்க கற்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_21.html