Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


2 comments:

  1. தொடர் கதை உத்தி போல முக்கியமான இடத்தில் எங்களை காக்க வைத்து விட்டீர்களே!

    ReplyDelete
  2. முதலில் சொல்லிய திருநாவுக்கரசரின் பாடல் அருமை. இறைவனுக்கு சில உருவங்களை வைத்துக்கொண்டு, "என் தெய்வங்களே உண்மை" என்று கூறி, பிறருடன் சண்டை செய்வது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது!

    இறைவன் இருக்கிறான் என்று சொல்வது கூட ஒருவேளை ஒப்புக்கொண்டு விடலாம். ஆனால் இறைவன் இந்த உருவத்தில்தான் இருக்கிறான் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

    ReplyDelete