Tuesday, November 20, 2018

திருக்குறள் - சொல்லும் வலிக்கும்

திருக்குறள் - சொல்லும் வலிக்கும் 


ஒரு சொல் இதம் தரும்.

ஒரு சொல் வலி தரும்.

தெரியும்தானே?

சிலர் பேசுவது மென்மையாக, அழகாக, இதமாக இருக்கும். சிலர் எப்போது வாயைத் திறந்தாலும் சுருக் சுருக் என்று குத்துவார்கள். ஏதாவது மனம் சங்கடப் படும் படி பேசுவார்கள். அபசகுனமாக ஏதாவது சொல்லி வைப்பார்கள். அது நம் மனதில் கிடந்து நம்மை குழப்பிக் கொண்டே இருக்கும்.

சொற்களை , யோசித்து, அவற்றின் அர்த்தம் தெரிந்து , தெளிவாக பேச வேண்டும்.

அவனுடைய காதலி மிக மிக மென்மையானவள். அவள் குரல், அவள் பேசும் விதம் எல்லாமே மென்மையாக இருக்கும். இவ்வளவு மென்மையாக பேசுபவள் உடலும் மென்மையாகத்தான் இருக்கும் என்று கருதுகிறான் அவன். மென்மை என்றால் எவ்வளவு மென்மை ? அதை எப்படிச் சொல்வது?

அனிச்ச மலரும், அன்னத்தின் சிறக்கும் அவளுடைய பிஞ்சு பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல குத்துமாம். அப்படி என்றால் அவளுடைய பாதங்கள் எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும் ?


பாடல்


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்சமும் = அனிச்ச மலரும்

அன்னத்தின் தூவியும் = அன்னத்தின் சிறக்கும்

மாதர் = அவளின்

அடிக்கு = பாதங்களுக்கு

நெருஞ்சிப் பழம் = நெருஞ்சிப் பழம்

பாடல் என்னவோ ஏழு வார்த்தைதான். அதில் வள்ளுவர் வைக்கும் நுட்பம் இருக்கிறதே..அடடா ....

நெருஞ்சி என்பது ஒரு சின்ன முள் செடி. அதில் பூ பூத்து, காய் காய்க்கும். அந்த  காயில் முள் இருக்கும். அந்த முள் கூராக இருக்காது. வளையும். நாளடைவில் அந்த காய்  முற்றி கனியாக மாறும். அந்த முள்ளும் கெட்டிப் படும். அந்த சமயத்தில் அந்த முள் நன்றாக குத்தும். வலிக்கும்.

வள்ளுவர் என்ன சொல்லி இருக்க வேண்டும் ?

மாதர் அடிக்கு நெருஞ்சி முள்

என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொல்லவில்லை. நெருஞ்சிப் பழம்  என்கிறார்.

ஏன்?

முள் என்றால், அந்த சொல் கூட குத்துமாம். அவளுக்கு வலிக்குமாம். எனவே  நெருஞ்சிப் பழம்  என்கிறார். பழம் என்றால் மென்மை என்று சொல்லமாலே தெரியும் அல்லவா.

சொல் கூட குத்தி விடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார் வள்ளுவர்.

பெண் என்பவள் மென்மையானவள்.  இன்னொருத்தர் வீட்டுக்குப் போகிறவள்.  நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெண்ணை  பூ போல பெற்றோர்கள் வளர்ப்பார்கள். அந்த மென்மை அவளிடம் தங்கி விடும்.

அப்படி மென்மையாக இருக்கும் அந்தப் கணவனுக்காக, காதலனுக்காக  எவ்வளவோ  துன்பங்களையும் வலிகளையும் பொறுத்துக் கொள்கிறாள்.

நமக்காக எவ்வளவு துன்பங்களை அவள் தாங்கிக் கொள்கிறாள் என்று நினைக்கும் போது, அவள் மேல் இன்னும் அன்பு பிறக்கிறது.

பெண்ணின் மென்மையை போற்றாத இலக்கியம் இல்லை.

நாளெல்லாம் வேலை செய்கிறாள். நின்று நின்று பாவம் கால் கடுக்குமே என்று  வள்ளியின் பாதங்களை முருகன் வருடினானாம்.

"பாகு கனி மொழி மாது குற மகள்  பாதம் வருடிய மணவாளா "

என்பார் அருணகிரி நாதர்.

செல்வத்தையெல்லாம் இழந்து விட்டு வந்து நிற்கிறான் கோவலன். காலில் ஒரு சிலம்பு மட்டும் இருக்கிறது கண்ணகியிடம். சரி அதை வைத்து தொழில் தொடங்கலாம்  என்று இருவரும் மதுரை நோக்கி புறப்படுகிறார்கள்.

கோவலன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது. பாவம் இந்தப் பெண். என்னால் தானே அவளுக்கு இவ்வளவு சிரமம் என்று வருந்துகிறான்.


வீட்டை விட்டு வெளியே போனதே இல்லை. பாவம் இப்போது காடு மேடெல்லாம் நடக்கிறாள்.

அவள் பாதம் எவ்வளவு சிரமப் படும் என்று நினைத்து வருந்துகிறான். இந்த பூமிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. அவள் பாதங்களை இவ்வளவு குத்தி வருந்த வைக்கிறதே என்று கல்லும் முள்ளும் நிறைந்த பூமியை பார்த்து நினைக்கிறான்.

"வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள்"

மண் மகள் இதற்கு முன்பு இது போன்ற மென்மையான பாதங்களை அவள் பார்த்தது இல்லை. அதனால் தான் இப்படி குத்தி வருத்தம் தருகிறாள் போலும் என்று நினைக்கிறான்.

மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்.

சொற்களை தேர்ந்து எடுங்கள். நல்ல சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகுங்கள். கடிய சொற்களை, மற்றவர்களை காயப் படுத்தும் சொற்களை, உங்கள் அகராதியில் இருந்து எடுத்து தூர வீசிவிடுங்கள்.

அது மற்றவர்களை மட்டும் அல்ல, உங்களையும் இன்பத்தில் ஆழ்த்தும்.

சரிதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_20.html


1 comment:

  1. ரொம்ப சரியாகவும் அழகாகவும் சொன்னீரகள்

    ReplyDelete