Monday, November 19, 2018

கம்ப இராமாயணம் - நாய் என தகுதும்

கம்ப இராமாயணம் - நாய் என தகுதும் 


இராமனை எவ்வளவோ கம்பர் தூக்கிப் பிடிக்கிறார். இராமனை நினைத்து நினைத்து நெகிழ்கிறார். அது பக்தியா, பாசமா என்று தெரியாத அளவுக்கு உருகுகிறார்.

இருந்தும், அவர் இராவணனின் கம்பீரத்தை சொல்வதில் ஒரு குறையும் வைக்கவில்லை.  என்னைக் கேட்டால், கம்பர் , இராவணனை ஒரு படி மேலேயே காட்டி இருக்கிறார் என்றே சொல்வேன்.

போர் மூண்டு விட்டது. இராமனின் போர் செய்யும் ஆற்றலை இராவணன் நேரில் காண்கிறான்.

தன் மந்திரியிடம் கூறுகிறான்.

"இனி மேல் ஆகப் போவது என்ன ? இந்த பூமாதேவியை போல பொறுமை கொண்ட சீதையின், மூங்கில் போன்ற தோள்களை கொண்ட அந்த சீதையின் நாயகன் இராமனின் போர் செய்யும் அழகை சீதை நேரில் இதுவரை கண்டதில்லை. ஒரு வேளை அவள் அதை பார்க்க நேர்ந்தால், என்னையும், இந்த மன்மதனையும் நாய் என்று கேவலமாக நினைப்பாள்"

என்கிறான்.

பாடல்


'போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம்.


பொருள்

'போய் இனித் தெரிவது என்னே? = இனி மேல் போய் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது

பொறையினால் = பொறுமையால்

உலகம் போலும் = இந்த பூமாதேவியைப் போல

வேய் எனத் தகைய = வேய் என்றால் மூங்கில் . மூங்கில் என்று சொல்லத் தக்க

தோளி = தோள்களை உடைய அவள் (சீதை)

இராகவன் மேனி நோக்கி, = இராகவனின் மேனியை நோக்கி


தீ எனக் கொடிய  = தீ போல கொடிய

வீரச் = வீரமான

சேவகச் = போர் செய்யும்

செய்கை கண்டால், = ஆற்றலைக் கண்டால்

நாய் எனத் தகுதும் அன்றே = நாய் என்று கருதுவாள்

காமனும் = மன்மதனும்

நாமும் = நம்மையும்

எல்லாம் = நம் அனைவரையும்


இராமன் எதிரிதான். இருந்தாலும், அவன் ஆற்றலை மனம் விட்டுப் பாராட்டுகிறான். 

சீதை அவனுடைய ஆசைக்கு இணங்கவில்லை. உண்மையில் அவள் மேல் கோபம் வர வேண்டும். இருந்தும் அவளை பாராட்டுகிறான். 

"உலகம் [போலும் " என்று பாராட்டுகிறான். 

இந்த நிலம் இருக்கிறதே, தன்னை கடப்பாறை, வெடி என்று வைத்து தகர்ப்பவர்களையும் தாங்கும் பொறுமை உடையது. 

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்பார் வள்ளுவப் பேராசான். 

தனக்குத் துன்பம் செய்யும் இராவணனிடமும் அவள் பொறுமையோடு இருந்தாள் என்று இராவணனே கூறுகிறான். 

அவள் நல்ல குணத்தை மட்டும் அல்ல, அவள் அழகையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறான் இராவணன்.  

"வேய் எனத் தகைய தோளி". மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதை என்று அவள் அழகு அவன் மனதில் ஆழமாய் நிற்கிறது. 

இராகவனின் போர் செய்யும் அழகை மட்டும் சீதை பார்த்து விட்டால் பின் என்னையும்  மன்மதனையும் நாய் என்று கேவலமாக நினைப்பாள் என்கிறான். 

இவனை நினைப்பது சரி.  எதற்கு மன்மதனை இங்கே இழுக்கிறான். 

உலகிலேயே மிக அழகானவன் மன்மதன்.  அவனையும் நாய் என்று நினைப்பாளாம். இராகவனின் அழகு அவ்வளவு உயர்ந்தது.

அது மட்டும் அல்ல, அந்த மன்மதன் தானே இராவணனை இந்த பாடு படுத்துகிறான்.  அதனால், அவனையும் இழுக்கிறான் என்று நயம் சொல்லுவார்கள். 

இவ்வளவு அழகான இராகவனை விட்டு விட்டு , இந்த சீதை எங்கே நம்மை விரும்பப் போகிறாள் என்று இராவணன் ஆதங்கப் படுகிறான். 


எப்படியோ, இங்கே யார் உயர்ந்து நிற்கிறார்கள்?

பொறுமையும் அழகும் கொண்ட  சீதையா,  எதிரியே பாராட்டும் இராமனா, அல்லது  தன் எதிரியை உயர்த்திப் பிடிக்கும் இராவணனின் கம்பீரமா ?

அதுதான் கம்பன்.

எவ்வளவு நுண்ணிய மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறான் கம்பன். 

நமக்கு வாழ்வில் பல சிக்கல்களுக்குக் காரணம், நம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பதுதான். 

மனைவி, அம்மா செய்த உணவு நன்றாக இருந்தால் கூட, வாய் விட்டு பாராட்டுவது இல்லை. 

கணவன் எவ்வளவோ கஷ்டங்களுக்கு நடுவில் காரியம் செய்தாலும், அவனை ஒரு வரி  பாராட்டுவது கிடையாது. 

கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் வந்தால் அதை மென்மையாக , அழகாக வெளிப்படுத்தத் தெரிவதில்லை.  சண்டை ஒன்று தான் நமக்குத் தெரிந்தது. இல்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது. பேசாமல் இருப்பது. 

அது கொஞ்சம் முரட்டுத் தனமான உணர்ச்சி வெளிப்பாடு. 

மென்மையாக, அழகாக, உணர்வுகளை வெளிப்படுத்தப் பழக வேண்டும். 

இலக்கியங்களை படிப்பதன் மூலம் அந்த பயிற்சி நிகழும். 

சும்மா பாடலை படித்துவிட்டுப் போகக் கூடாது. அதில் உள்ள கருத்தை தேடித் பிடித்து  கடை பிடிக்க வேண்டும். 

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_19.html

3 comments:

  1. நானும்தான் சில சமயங்களில் பாசுரங்களை படிக்கிறேன். இந்ஆத அளவு ஆழ்ந்த நோக்கோடு அலச தெரியவில்லை. இவ்வளவு நுணுக்கமாகவும் ரசனையுடன் சொல்ல உம்மால்தான் முடியும். பிரமாதம்.

    ReplyDelete
  2. சுவையான பாடல். நன்றி.

    ReplyDelete