திருப்பாவை - ஓங்கி உலகளந்த
பாடல்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்
ஓங்கி = உயர்ந்த
உலகளந்த =உலகை அளந்த
உத்தமன் பேர்பாடி = உத்தமனின் பேரைச் சொல்லிப் பாடி
நாங்கள் = நாம் எல்லாம்
நம்பாவைக்குச் = நம் பாவை நோன்பில்
சாற்றி நீராடினால் = சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி = தீமை இல்லாமல்
நாடெல்லாம் = நாடெங்கும்
திங்கள்மும் மாரி பெய்து = மழை மாதம் மூன்று முறை பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் = ஓங்கி வளரும் பெரிய நெல் பயிர்கள்
ஊடு = ஊடே செல்லும்
கயல் உகளப் = கயல் (மீன்) நீந்தி விளையாட
பூங்குவளைப் போதில் = குவளை மலரின் தளிரில்
பொறிவண்டு கண்படுப்ப = வண்டுகள் கண் துயில
தேங்காதே = தயங்காமல்
புக்கிருந்து = உள்ளிருந்து
சீர்த்த முலைபற்றி = சிறந்த முலைகளை பற்றி
வாங்கக் = வாங்கும் போது
குடம்நிறைக்கும் = குடங்களை நிறைக்கும்
வள்ளல் பெரும்பசுக்கள் = வள்ளலான பெரும் பசங்கள்
நீங்காத செல்வம் = நீங்காத செல்வம்
நிறைந்தேலோ ரெம்பாவாய்! = நிறைந்தேலோர் எம்பாவாய்
மற்றுமொரு எளிய பாடல்.
தவறு செய்யாதவர்கள் யார் இந்த உலகில்? எல்லோரும் தவறு செய்கிறோம். பாவம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு, நம் பாவங்கள் இருக்கின்றன.
மகாபலியிடம் அளவற்ற ஆற்றல் இருந்தது. அனைத்து உலகையும் கட்டி ஆண்டான். தான் தான் பெரிய ஆள் என்ற ஆணவம் அவன் மனதில் குடி கொண்டது. நல்லவர்களை துன்புறுத்தினான். அவன் ஆணவத்தை அகற்றி அவனுக்கு நல் அறிவு புகட்டினான் குள்ள உருவத்தில் வந்த திருமால்.
தவறு செய்தவனை அழிக்கவில்லை. தன் திருவடியை அவன் தலை மேல் வைத்து அவனை ஆடிக்கொண்டான்.
எனவே,
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"
என்கிறாள் ஆண்டாள். மகாபலிக்கு அவன் தவறுகளை பொறுத்து அருள் தந்தது போல நமக்கும் அருள் புரிவான் என்பது ஒரு பொருள்.
அவன் திருவடிகளில் சரண் அடைந்து விட்டால், அவன் பார்த்துக் கொள்வான் என்பது இன்னொரு பொருள். சரணாகதி தத்துவம்.
அப்படி நாம் சரண் அடைந்து விட்டால், நமக்கு அல்ல, இந்த ஊருக்கே நன்மை தரும் மழை பொழியும்.
மழை இருக்கிறதே அது அதிகமாக பெய்தாலும் தீமை தான், பெய்யாவிட்டாலும் தீமை தான். அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்
"தீங்கின்றி மும்மாரி பெய்து" என்று.
நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று சொல்லுவதைப் போல, நாம் இறைவன் திருவடிகளில் சரண் அடைந்தால் நாட்டில் உள்ள எல்லோருக்கும் மழை பொழியும்.
குழந்தைக்கு தாய் பால் தருவாள். அவள் பால் தராவிட்டால், அது மார்பில் கட்டிக் கொள்ளும். மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம் அதை அறுவை சிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். தாய் பால் தருகிறாள் என்றால் அவளுக்கு வேறு வழி இல்லை. அது போல இறைவனுக்கும் நமக்கு அருள் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.
"சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
முலையைப் பற்றினால் போதும், குடம் குடமாய் பால் தரும். அது போல, இறைவனை அண்டினால் போதும், கேட்க வேண்டாம், அவன் பாட்டுக்கு தந்து கொண்டே இருப்பான்.
அது மட்டும் அல்ல, பசு தன்னுடைய கன்று குட்டிக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ளவர்களுக்கும் பால் தரும். நம் வீட்டுக்கு பால் வருகிறது. நாம் பசு வளர்ப்பதில்லை.
அது போல, நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர், ஆச்சாரியர்கள் இறைவனை அண்டி அருள் பெறும் போது, அந்த அருள் நமக்கும் வந்து சேரும். பசுவின் பால் கன்று குட்டிக்கும், மற்றவர்களுக்கும் சென்று சேர்வதைப் போல.
இந்த செல்வம் இருக்கிறதே, அது பாட்டுக்கு வரும். சொல்லாமல் கொள்ளாமல் போய் விடும். எனவே தான் அதற்கு "செல்வம்" என்று பெயர் வைத்தார்கள். செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.
இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் ஒரு நாள் நம்மை விட்டு செல்லக் கூடியவை.
இறை அருளால் கிடைப்பது "நீங்காத செல்வம்" என்கிறாள். ஒரு முறை வந்து விட்டால், பின் நீங்கவே நீங்காது.
அப்படி நீங்காத செல்வம் கொஞ்சம் அல்ல, "நிறைந்தேலோர் எம்பாவாய்" என்று அருளுகிறாள் ஆண்டாள்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_21.html
ஆண்டாள் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்து எடுத்து கையாண்டு இருக்கிறாள்.'தீங்கின்றி மும்மாரியை' பல தடவை அதில் உள்ள நுட்பத்தை அறியாமல் மேலோட்டமாக படித்து இருக்கிறேன்..தீங்கு இல்லாமல் வரட்சியும் இல்லாமல் வெள்ளத்தையும் தவிர்த்து அளவாக பெய்யவேண்டிய அவசியத்தை அருமையாக விளக்கி உள்ளீர்கள்.
ReplyDelete"பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" - இதைப் படிக்கும்போது , நின்றாகத் தேன் குடித்ததால் உறங்கும் வண்டு என்று தோன்றியது!
ReplyDeleteநல்ல விளக்கம். நன்றி.
Thanks for publishing thiruppavai songs with meaning, I really enjoyed reading your posts every Marghazhi after finding your blog. Can you also share rest of the songs with meaning :) Thanks in advance.
ReplyDeleteஅருமை
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteநல்விளக்கம். மனத்துள் நிறைந்தது. மகிழ்ச்சி பெருகுகின்றது.
நிறைநன்றியுரித்து.
21-8-2024 : 15-22.
மிக அருமையான விளக்கம். இது போன்ற விளக்கம் எதிலும் இல்லை
ReplyDelete