கம்ப இராமாயணம் - காமவல்லி ஆம் கன்னி
தீது இல் வரவு ஆகுக நின் வரவு என்று வந்த சூர்பனகையை இராமன் வரவேற்றான். அவளைப் பற்றி விசாரித்தான். நீ யார், உன் ஊர் எது, என்றெல்லாம் விசாரித்தான். அதற்கு சூர்ப்பனகை பதில் சொல்கிறாள் ....
பாடல்
பூவிலோன் புதல்வன் மைந்தன்
புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்
தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை
எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காமவல்லி ஆம்
கன்னி' என்றாள்.
பொருள்
பூவிலோன் = பூவில் தோன்றிய முதல்வன், பிரம்மா
புதல்வன் = அவனுடைய புதல்வன்
மைந்தன் = புதல்வனின் மைந்தன்
தல்வி; = மைந்தனின் புதல்வி. அதாவது, ப்ரம்மா எனக்கு தாத்தா முறை என்கிறாள்.
முப்புரங்கள் செற்ற = முப்புரங்களை எரித்த
சேவலோன் = காளை மீது ஏறியவன்
துணைவன் = நண்பன், குபேரன்
ஆன = ஆகிய
செங்கையோன் = கொடுத்து கொடுத்து சிவந்த கைகளை உடையவன்
தங்கை = தங்கை. குபேரனின் தங்கை
திக்கின் மா எலாம் = பெரிய திசைகள் எல்லாம்
தொலைத்து = வென்று
வெள்ளிமலை = கைலை மலை
எடுத்து = கையால் எடுத்து
உலகம் மூன்றும் காவலோன் = மூன்று உலகங்களையும் காக்கும் வலிமை படைத்த இராவணனின்
பின்னை; = பின் பிறந்தவள்
காமவல்லி = என் பெயர் காமவல்லி
ஆம் கன்னி' என்றாள். = நான் ஒரு கன்னிப் பெண் என்றாள்
இன்று fake நியூஸ் என்று போடுகிறார்களே...எப்படி போடுகிறார்கள்? கொஞ்சம் உண்மை கலந்து, அதோடு பொய் செய்தியையும் தள்ளி விடுவது.
வந்த செய்தியை முழுவதும் பொய் என்றும் சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சம் உண்மை இருக்கும். எதை விடுவது, எதை எடுத்துக் கொள்வது என்று உலகமே தடுமாறிப் போய் நிற்கும் காலம் இது.
இங்கே, சூர்ப்பனகை அதையே செய்கிறாள்.
கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய் கலந்து பேசுகிறாள்.
எல்லாமே உண்மை. "பெயர் காமவல்லி, கன்னி" என்பது மட்டும் பொய்.
எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தால் என்ன? காமம் என்று வந்து விட்டால், அனைத்தும் பறந்து போய் விடுகிறது.
காமம் மட்டும் அல்ல, எல்லா ஆசையும் அப்படித்தான்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
இன்மை புகுத்தி விடும்
என்பது வள்ளுவம்.
சூர்ப்பனகையின் ஆசை வரம்பு மீறியது. மிகப் பெரிய துன்பத்தில் அவளையும் அவள் சார்ந்த குலத்தையும், நாட்டையும் பாதித்தது.
சூர்பனகையிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_16.html
அருமையான பதிவு. தப்பான ஆசை தீதில்தான் முடியும்.
ReplyDelete"குபேரனின் தங்கை" மற்றும் "இராவணனின் பின் பிறந்தவள்" என்று இரண்டையும் எப்படிக் கூற முடியும்?
ReplyDelete