Wednesday, April 17, 2019

கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்

கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்


சூர்ப்பனகையார் என்று இராமன் கேட்க, அவள் நான் ப்ரம்மாவின் பேத்தி, குபேரனின் தங்கை, இராவணனின் தங்கை என்று கூறுகிறாள்.

இராவணனின் தங்கை என்றால், இவள் ஒரு அரக்கியாகத்தானே இருக்க வேண்டும். எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று இராமனுக்கு சந்தேகம். அவளிடமே கேட்டு விடுகிறான்.

பாடல்

அவ் உரை கேட்ட வீரன், 
     ஐயுறு மனத்தான், 'செய்கை 
செவ்விது அன்று; அறிதல் ஆகும் சிறிதின்' 
     என்று உணர, ' "செங்கண் 
வெவ் உரு அமைந்தோன் தங்கை" என்றது 
     மெய்ம்மை ஆயின் 
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி 
     இயல்பின்' என்றான்.

பொருள்

அவ் உரை கேட்ட வீரன்,  = சூர்ப்பனகை சொன்னதைக் கேட்ட இராமன்

ஐயுறு மனத்தான் = மனதில் சந்தேகம் வர

செய்கை செவ்விது அன்று = இவள் செய்கை சிறப்பாக இல்லை

அறிதல் ஆகும் சிறிதின் = கொஞ்சம் விசாரித்து அறிவோம்

என்று உணர = என்று உணர்ந்து கொள்ள

"செங்கண் = சிவந்த கண்கள். கோபத்தால் சிவந்த கண்கள்

வெவ் உரு = வெம்மையான உருவம்

அமைந்தோன் = அமைந்தோன், இராவணன்

தங்கை" என்றது = தங்கை நீ என்றால்

மெய்ம்மை ஆயின்  = அது உண்மை என்றால்

இவ் உரு = இந்த தெய்வ வடிவம்

இயைந்த = ஏற்பட்ட

தன்மை இயம்புதி  = தன்மை எப்படி என்று சொல்

இயல்பின்' என்றான். = எந்த வழியில் வந்தது என்றான்

இதெல்லாம் இராமனுக்குத் தேவையா என்பது என் கேள்வி. அவள் யாராக இருந்தால் என்ன. அவள் யாருடைய தங்கையாவும் இருந்து விட்டுப் போகட்டுமே.

இதை எல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது இராமனுக்கு?

இந்த வெட்டிப் பேச்சு எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு மாட்டி விட்டது இராமனையும், இலக்குவனையும், சீதையையும்.

இராமன் இதோடு விடவில்லை. மேலும் அரட்டை அடிக்கிறான் அவளுடன்.

இராமனுக்கும் சூர்பனகைக்கும் நடந்த உரையாடல் கம்ப காதையில் மிகவும் சுவையான பகுதி.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_17.html

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால், "நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று விசாரிப்பதில் என்ன தவறு?

    அதையும் மீறி, "உங்களை பார்த்தால் இன்னார் தங்கை போல இல்லையே" என்பதுதான் தவறு. பெண்களிடம் வெட்டிப் பேச்சு பேசியதுதான் தவறு .

    ReplyDelete