கம்ப இராமாயணம் - இராமனின் காதல் திருமணம்
இராமாயணம் என்றால் இராமன் + அயனம் என்று அர்த்தம். அயனம் என்றால் வழி, பாதை என்று பொருள். தட்சிணாயனம், உத்தராயணம் என்று சொல்லுவதுப் போல.
இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி என்று பொருள்.
இராமனை தெய்வமாகத் தொழுபவர்கள், அவன் வழியில் நடக்க விரும்புபவர்கள், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது ஏன் என்றால் இராமன் காதல் திருமணம் தான் செய்து கொண்டான்.
இது என்ன புதுக் கதையாக இருக்கிறது. இதுவரை யாருமே சொல்லவில்லையே. எத்தனையோ முறை இராமாயணம் படித்து இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம், யாரும், இதுவரை இராமன் காதல் திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னதே இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.
கம்பன் சொல்லியதை திரும்பிச் சொல்கிறேன். முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
காதல் எப்படி வரும் ? முதல் பார்வையிலேயே எங்கோ ஒரு மணி அடிக்கும். அடி வயிற்றில் இனம் புரியாத ஒரு சங்கடம். இவள் தானா ? இவன் தானா என்று இதயம் ஒரு தடம் துடிப்பது மறக்கும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். கிட்ட போக வேண்டும். பேச வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும் என்று சொல்லுகிறார்கள். ஒரு கணம் கூட பிரிந்து இருக்க முடியாது. பிரிந்தாலும் மற்றவர் நினைவாகவே இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.
அப்படி எல்லாம் இராமாயணத்தில் இருந்ததாக சொல்லி இருக்கிறதா ? ஒரு வேளை அப்படி சொல்லி இருந்தால் அது காதல் என்று ஏற்றுக் கொள்வீர்களா? இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் விழுந்து விடுகிறது.
மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
அந்த ஒரு கணத்தை கம்பன் புகைப்படம் கிளிக் செய்வது போல படம் படிக்கிறான்.
"கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது. அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்"
என்கிறான் கம்பன்.
உலகில் எந்த மூலையில் தேடினாலும் இது போல ஒரு romantic பாடல் கிடைப்பது அரிது.
பாடல்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
பொருள்
எண்ண அரு = எண்ணிப்பார்க்க அருமையான, கடினமான. எண்ணில் அடங்காத
நலத்தினாள் = நல்ல குணங்களை உடையவள்
இனையள் = இந்தத் தன்மை உடையவள்
நின்றுழி. = நின்ற பொழுது
கண்ணொடு கண் இணை கவ்வி = இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி
ஒன்றை ஒன்று உண்ணவும் = ஒன்றை மற்றொன்று உண்ணவும்
நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. = நிலை பெறாத உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் = அண்ணலும் நோக்கினான்
அவளும் நோன்கினாள் = அவளும் நோக்கினாள்
சரி. இந்தப் பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டு இருப்போம். இதில் என்ன பெரிய புதுமை இருக்கிறது. ஆனாலும், அதற்கு இவ்வளவு build up தேவையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பார்ப்போம்.
இருவரில் யார் முதலில் பார்த்தது ? சீதை முதலில் பார்த்தாளா? இராமன் முதலில் பார்த்தானா ?
அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன் பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.
அவள் நோக்கினாள் . அண்ணலும் நோக்கினான் என்று சொல்லி இருந்தால் முதலில் சீதை பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.
கம்பன் அப்படி சொல்லவில்லை.
அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.
இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பார்வைகள் ஒன்றை ஒன்று ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டன. இன்னும் சொல்லப் போனால், பார்வைகள் பார்த்துக் கொள்ள வில்லையாம்.
பார்வைகள் சந்தித்தன. அவர்களால் அந்த பார்வையை நகர்த்த முடியவில்லை. கண்ணை எடுக்க முடியவில்லை. அவளோ தோழிகளோடு மாடத்தில் நிற்கிறாள். அவனோ, வீதியில் பல வித மக்களோடு நடந்து போய் கொண்டிருக்கிறான். நின்று பார்க்க முடியாது. பார்வையை தவிர்த்தே ஆக வேண்டும். ஆனாலும் முடியவில்லை.
"கண்ணொடு கண் இணை கவ்வி"
கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டனவாம். கவ்விக் கொண்டது என்றால் அதை எளிதில் எடுக்க முடியாது. lock ஆகி விட்டது என்று சொல்வார்களே அது மாதிரி. இழுத்தாலும் வர மாட்டேன் என்கிறது. இருவருக்கும் சங்கடம்தான். பார்வையை மாற்ற விரும்புகிறார்கள். முடிந்தால்தானே. கண்கள் கவ்விக் பிடித்துக் கொண்டன. அறிவு சொல்கிறது, "ஏய் , எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படி பார்க்காதே, நாகரீகம் இல்லை " என்று. கண் விட்டால்தானே.
சரி, இப்படி ஒரு பெண் முன் பின் தெரியாத ஒரு ஆணை இப்படி பார்க்கலாமா? அது அவ்வளவு நல்ல செயலா. ஒரு பெண் பால்கனியில் நின்று தெருவில் போகும் ஆணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்தால், நாம் அவளைப் பற்றி என்ன நினைப்போம்.
அப்படி எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று முதலிலேயே கம்பன் சொல்லி விடுகிறான்
"எண்ண அரு நலத்தினாள்"
எண்ணில் அடங்கா நல்ல குணம் கொண்டவள் என்று. பொறுமை, கருணை, அன்பு, பாசம், நேசம், அருள் என்று எத்தனை நல்ல குணங்கள் உன்டோ அதற்கெல்லாம் மேலும் நல்ல குணங்கள் உள்ளவள் அவள். இருந்தும் என்னவோ அவனைப் பார்த்ததும் காதல் வந்து விட்டது.
சரி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடியது?
'அடடா, இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு நல்லா இருக்கும். அதுக்கு முன்னாடி அவளை கூட்டிக் கொண்டு பார்க், பீச், சினிமா என்று ஜாலியா சுத்தலாம்" என்றெல்லாம் நினைத்திருப்பானோ? அவள் என்ன நினைத்து இருப்பாள் ? "என்ன ஒரு கம்பீரமான ஆள் இவன். இவனை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் " என்று அவள் நினைத்து இருப்பாளோ .
இரண்டுமே இல்லை. அதெல்லாம் நம்ம ஊரு லோக்கல் கதாநாயகன், கதாநாயகி நினைப்பது.
பின் அவர்கள் என்னதான் நினைத்தார்கள்.
ஒன்றுமே நினைக்கவில்லை என்கிறான் கம்பன்.
"நிலைபெறாது உணர்வும் ஒன்றிட"
இந்த உணர்ச்சிகள் இருக்கிறதே ஒரு நிலையில் நிற்காது. அலைந்து கொண்டே இருக்கும். அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன. வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது.
இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில். அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.
சரி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அதை வைத்துக் கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்று எப்படி சொல்லுவது ?
ஆகா, இந்தப் பாடலில் இத்தனை அழகு உண்டா? அதை வெளிக் கொணர்ந்து தந்ததற்கு நன்றி.
ReplyDeleteகமபன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்று! பாக்களை 'பொருள்தோன்ற'ப் பிரிக்காமல், யாப்பிலக்கணத்தின் சீரமைப்பின்படி எழுதினால் மேலும் சிறப்பாயிருக்கும். முதலில் அவ்வாறு எழுதிவிட்டு அடுத்த படியில் பிரித்துக்காட்டவேண்டும்.
ReplyDeleteமுதல் பார்வையில் காதல் இல்லை
ReplyDeleteபருகிய நோக்கெனும்... வரிகளை படித்தால் புரியும்