Wednesday, April 24, 2019

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள்

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள் 


"மன்மதனிடம் இருந்து என்னைக் காப்பாற்று" என்று சூர்ப்பனகை இராமனிடம் வேண்டினாள்.

இதைக் கேட்ட இராமன், என்ன செய்திருக்க வேண்டும்.

சீ சீ இவள் கெட்டவள். தீய நோக்கத்தோடு வந்திருக்கிறாள் என்று அவளை போகச் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா. அது தான் இல்லை.

இராமன் அவளை எடை போடுகிறான்.

"இவள் நாணம் இல்லாதவள். விநோதமானவள். கீழான எண்ணங்கள் கொண்டவள். நல்லவள் அல்லள்" என்று நினைக்கிறான்.


பாடல்


சேண் உற நீண்டு, மீண்டு, செவ் 
     அரி சிதறி, வெவ்வேறு 
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, 
     இருண்ட வாள்-கண் 
பூண் இயல் கொங்கை அன்னாள் 
     அம் மொழி புகறலோடும், 
'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் 
     அல்லள்' என்றான்.

பொருள்

சேண் உற = நீண்ட தொலைவு சென்று

நீண்டு = நீளமாக சென்று

மீண்டு = மீண்டும் இங்கு வந்து

செவ் அரி சிதறி = கணங்கள் சிவந்து. கண்ணில் இரத்த நாளங்கள் சிவந்து இருக்க

வெவ்வேறு  = வெவ்வேறு

ஏண் உற மிளிர்ந்து = சிறப்பு கொண்டு பின் அதில் இருந்து பிறழ்ந்து

நானாவிதம் புரண்டு,  = நாலா பக்கங்களிலும் அலைந்து

இருண்ட = கரிய

வாள் = கூர்மையான கத்தி போன்ற

கண் = கண்களை உடையவள்

பூண் இயல் கொங்கை அன்னாள் = அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடையவள்

அம் மொழி புகறலோடும்,  = அவ்வாறு சொன்னவுடன்

'நாண் இலள் = நாணம் இல்லாதவள்

ஐயள் = கீழான எண்ணம் கொண்டவள்

நொய்யள் = விநோதமானவள்

 நல்லளும்  அல்லள்' என்றான். = நல்லவள் அல்லள் என்று இராமன் முடிவு செய்கிறான்.


எவ்வளவு தான் ஆடை அலங்காரம் பண்ணிக் கொண்டாலும், தேனொழுக பேசினாலும், உள்ளத்தில் உள்ளதை கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.

சூர்ப்பனகையின் கண்கள் அலை பாய்கின்றன.

தூரத்தில் உள்ளதை நோட்டம் விடுகிறது.

பின் பக்கத்தில் வருகிறது.

காமத்தால் சிவந்து இருக்கிறது.

நாலா பக்கமும் உருள்கிறது.

வள்ளுவர் சொல்லுவார்,

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம் 

என்று.

சேண் என்றால் தொலை தூரம் என்று பொருள்.

சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர், திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .


தூரத்தில் இருக்கும் சூரிய ஒளி.

அவளின் சொல் மட்டும் கண்ணை வைத்து அவள் நல்லவள் இல்லை என்று அறிந்து கொள்கிறான்  இராமன். 

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_24.html

3 comments:

  1. அருமையான விளக்கம்.நன்றி

    ReplyDelete
  2. சூர்ப்பனகையின் கண்கள் எப்படி அலை பாய்கின்றன என்பது மிகச் சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. இப்படி ஒரு வழியாக இராமன் விழித்துக் கொண்ட பின் என்ன ஆனது?

    ReplyDelete