Friday, April 26, 2019

திருக்குறள் - மெல்ல நகும்

திருக்குறள் - மெல்ல நகும் 



திருக்குறள் என்றால் ஏதோ எப்பப் பார்த்தாலும் அறிவுரை சொல்லும் நூல் என்று நினைக்கக் கூடாது. காதலை, வள்ளுவரைப் போல மென்மையாக, இனிமையாகச் சொன்னவர் இன்னொருவர் இல்லை.

காதல் பற்றி சொல்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் பிசகினாலும் விரசமாகிவிடும். ஆண் பெண் நெருக்கத்தை மென்மையாக, இனிமையாகச் சொல்ல வேண்டும்.

காமத்துப் பாலை ஒரு தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு தகப்பனும் மகளும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு இடத்தில் கூட ஒரு இம்மி கூட தடம் மாறாமல் இருக்கும்.

உலக அறத்தை சொன்ன வள்ளுவரா இப்படியும் எழுதி இருக்கிறார் என்று வியக்கவைக்கும் பகுதி.

அதில் , குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள்.

காதலன் சொல்கிறான், "நான் அவளைப் பார்க்கும் போது, நாணத்தால் தலை குனிந்து தன் நிலத்தைப்  பார்ப்பாள். நான் அவளை பார்க்க்காதபோது  என்னைப் பார்த்து மெல்ல புன்னகை பூப்பாள்"



பாடல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும் 


பொருள்

யான்நோக்கும் காலை  = நான் அவளை பார்க்கும் போது

நிலன்நோக்கும் = நிலத்தைப் பார்ப்பாள்

நோக்காக்கால் = நான் அவளை பார்க்காத போது

தான்நோக்கி = அவள் என்னை நோக்கி

மெல்ல நகும் = மெல்ல நகும்

இதில் என்ன அப்படி ஒரு romance இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த குறளில் ஒரு பிழை இருப்பது போலத் தெரிகிறது அல்லவா ?

நான் அவளை பார்க்கும் போது அவள் நிலத்தைப் பார்ப்பாள். அது சரி.

நான் அவளை பார்க்காத போது, அவள் என்னை பார்த்து, புன்முறுவல் செய்வாள்...என்று சொல்கிற போது எங்கேயோ இடிக்கிறதே.

நான் அவளைப் பார்க்காத போது, அவள் என்னை பார்த்தது எனக்கு எப்படி தெரியும்?

அதுவம் அவள் சிரித்தாள் என்பது எப்படி தெரியும் ?

வள்ளுவர் தவறி சொல்லி விட்டாரோ?

இல்லை.

அது ஒரு கல்லூரி வகுப்பறை என்று வைத்துக் கொள்வோம்.

அங்கே பையன்களும் பெண்களும் படிக்கிறார்கள்.

அவனுக்கு அவள் மேல் காதல். அவளுக்கும் தான். இருந்தும் இருவரும் வாய் விட்டு சொல்லிக் கொள்ளவில்லை. அப்பப்ப பேசிக் கொள்வார்கள். பட்டும் படாமல்  இருக்கும் அந்தப் பேச்சு.

இருந்தும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வகுப்பு நடக்கும் போது அவன் அவளை மெல்ல திரும்பிப் பார்ப்பான். அவள் அவனை பார்ப்பதே இல்லை. அவள் உண்டு, அவள் பாடம் உண்டு என்று இருப்பாள்.

அவனுக்கான மனதுக்குள் ஏக்கம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம்...ஒரு நாளாவது  தன்னை திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று ஏங்குவான்.

அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அவன் வகுப்பை கவனித்துக் கொண்டு இருந்தான். எதேச்சையாக அவள் பக்கம் திரும்பினான்.

அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே என்று அவளுக்குள் நாணம் ஒரு பக்கம். "சே...நான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே..." என்று வெட்கம் ஒரு பக்கம். நான் அவனை விரும்புகிறேன் என்றும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என்று ஒரு காதல் ஒரு பக்கம். இத்தனையும் மனதில் அலை மோதுகிறது அவளுக்கு.

தலையை குனிந்து கொண்டு லேசாக சிரிக்கிறாள். புன் முறுவல் பூத்தாள் என்கிறார் பரிமேல் அழகர்.

தான் அவனை இரசிப்பதை அவன் அறிந்து கொண்டான் என்றவுடன் அந்தப் பெண்ணின் மனதில் பிறக்கும் வெட்கம், நாணம், கொஞ்சம் பயம், ரொம்ப காதல்  எல்லாம் அவளை அலைக்கழிக்கிறது.

என்ன செய்வாள் பாவம். வந்த நாணத்தில் மெல்ல ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.

இப்போது கூட பல திரைப்படங்களில் பார்க்கலாம்.

கதாநாயகன் வேகமாக போய் விடுவான். கதாநாயகி தூணுக்கு பின்னால் இருந்து  லேசாக அவனை எட்டிப் பார்ப்பாள். அவன் சட்டென்று திரும்பிப் பார்ப்பான்.

கதாநாயகிக்கு வெட்கம் பிடுங்கி தின்னும். நாக்கை கடித்துக் கொண்டு , கண்ணை மூடிக் கொண்டு "சீ" என்று செல்லமாக சிணுங்குவாள். முகம் எல்லாம் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும். தன்னை அறியாமலேயே ஒரு புன்னகை பிறக்கும்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன . காதல் அப்படியேதான் இருக்கிறது.

மனித மனத்தின் உணர்ச்சிகள் ஈரம் மாறாமல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

இன்றும் பெண்கள், வெட்கத்தில் முகம் சிவந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காதல் உணர்ச்சியை இதை விட மென்மையாக சொல்ல முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_26.html

1 comment:

  1. "காலாலே நிலத்திலே கோலம் போட்டுப் பார்க்கிறா,
    கம்பி போட்ட ஜன்னனிலே கன்னத்தைத் தேய்க்கிறா!"

    ("மாட்டுக்கார வேலன்" படைப் பாடல்)

    ReplyDelete