திருக்குறள் - தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
உள்ளதுக்குள்ளே பெரிய திறமை அல்லது அறிவு எது?
அறிவியில், புவியியல், கணிதம், வணிகம், உயிரியல், என்று எண்ணற்ற அறிவு சார்ந்த துறைகள் இருக்கின்றன.
விளையாட்டு, சண்டை, நடனம், பாடுதல், நீந்துதல், சமைத்தல், படம் வரைதல், என்ற எண்ணற்ற திறமைகள் இருக்கின்றன.
இது அனைத்திலும் உயர்ந்தது எது?
சிந்தித்துக் கொண்டிருங்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும். மீண்டும் வருவோம் அந்தக் கேள்விக்கு.
கணவன் வெளியில் இருந்து வீடு வருகிறான். முகம் சரி இல்லை. என்னமோ அலுவலகத்தில் குளறுபடி என்று மனைவி தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்கிறாளோ இல்லையோ, தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்? மாறாக, உள்ளே நுழையும் போதே "...அதை வாங்கி வரச் சொன்னேனே...வாங்கிட்டு வந்தீங்களா..." என்று ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.
கணவன் வருகிறான், மனைவி சோர்ந்து அமர்ந்து இருக்கிறாள். அவளைப் பார்த்த உடனேயே சரி, அவளுக்கு உடல் நலம் இல்லை. அல்லது மனதில் என்னமோ கிடந்து குழம்புகிறது என்று அறிந்து கொண்டு, "என்னடா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க" என்று ஆறுதலா கேட்டா எப்படி இருக்கும்? அதை விடுத்து, "டீ போட்டியா...சாப்பிட ஏதாவது இருக்கா ...பசி உயிர் போகுது " என்று சொல்லிக் கொண்டே நுழைந்தால் எப்படி இருக்கும்.
எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. சொல்லாமலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
கணவனுக்கு / மனைவிக்கு இது வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பிள்ளைகளிடம், பெற்றோரிடம், உறவு,நட்பு, அலுவலகம் என்று எல்லா இடத்திலும் குறிப்பு அறிந்து நடக்க வேண்டும்.
தெய்வம் இருக்கிறதே, அதுக்குத் தெரியும் நமக்கு என்ன வேண்டும் என்று. நாம் போய் கேட்க வேண்டாம். எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்க வேண்டுமா? கடவுளுக்குத் தெரியாதா? எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நமக்கு என்ன வேண்டும் என்று தெரியாதா ?
வேண்ட தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே
என்பார் மணிவாசகர் (திருவாசகம்).
நீ எனக்கு ஏதாவது தருவதாய் இருந்தால், அதுவும் உன் விருப்பம் என்கிறார்.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து
என்பார் மணிவாசகப் பெருந்தகை.
பிள்ளை பசித்து, அம்மாவிடம் போய் , அம்மா, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் பால் தர முடியுமா என்று கேட்பது இல்லை. பிள்ளைக்கு பசிக்குமே என்று அவள் நினைத்து பால் தருவாளாம்.
பால் நினைந்து ஊட்டும்
அந்த தாயை விட அன்பு கொண்டவன் கடவுள்.
அதாவது, நமக்கு வேண்டியதை, நாம் கேட்காமலேயே நமக்குத் தருபவன்.
அப்படி கேட்காமலேயே, குறிப்பறிந்து செய்பவர்களை தெய்வத்தோடு ஒப்பாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
குறிப்பறிதல், தெய்வத்தின் குணம். உள்ள குணங்களிலேயே, திறமைகளிலேயே மிக உயர்ந்த குணம் குறிப்பறிதல்.
பாடல்
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
பொருள்
ஐயப் படாஅது = சந்தேகம் இல்லாமல்
அகத்தது = உள்ளத்தில் உள்ளதை
உணர்வானைத் = உணர்பவனை
தெய்வத்தோடு = தெய்வத்து
ஒப்பக் கொளல் = இணையாக கொள்ள வேண்டும்
எங்கே? நாம் எப்போதும் நமக்கு என்ன வேண்டும் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
மற்றவர்களை பற்றி எங்கே நினைக்கிறோம்?
சுயநலமே தலை தூக்கி நிற்கிறது.
மற்றவர்களின் மனதை அறிந்து கொள்பவனை தெய்வத்தோடு வைக்க வேண்டும் என்கிறார்.
வந்தவன் நம்மை ஏமாற்றும் எண்ணத்தோடு வந்திருக்கலாம். அதை அறிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் மனதை அறிந்து கொள்வது தெய்வத்துக்கு மட்டுமே முடிந்த காரியம். எனவே, அதை எவன் செய்கிறானோ, அவன் தெய்வத்துக்கு சமமாவான்.
குறிப்பறிய முடியாதவனை மனிதன் என்றே சொல்லக் கூடாது. அவன் ஒரு மரம் போன்றவன் என்கிறார் ஒளவை.
"குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்" என்பது ஒளவை வாக்கு.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.
குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.
பத்து குறள்.
மற்றவர்களின் குறிப்பை எப்படி அறிவது? அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர்.
அதை வரும் நாட்களில் சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_3.html
அருமையான விளக்கம்.நன்றி.
ReplyDeleteகுறிப்பறிவது என்பது அடுத்தவர் தேவையை எண்ணிப் பார்த்து நடப்பது என்ற பொருள் நன்றாக இந்த உரையில் இருந்து புரிகிறது
ReplyDeleteநன்றி.