நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழ்க்கையை இரசிக்க வேண்டும்
வாழ்க்கை பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எதுக்குமே நேரம் இல்லை. யாரைக் கேட்டாலும் , "நேரமே இல்லை " என்கிறார்கள்.
தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. வேகமான வண்டிகள், விமானம், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. இருந்தும் நேரம் இல்லை என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.
ஏன் ?
நாம் ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய நினைக்கிறோம். செய்கிறோம்.
சாப்பிடும் போது செல் போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். கோவிலில் நின்று கொண்டு அலுவலத்தை நினைக்கிறோம். அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு ஞாபகம். வீட்டில் இருக்கும் போது அலுவலக ஞாபகம். மனம் எதிலும் ஒன்றுவது இல்லை.
ஒரு நாளாவது, மனைவியை இரசித்து ஒரு பாராட்டு உண்டா. "இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க...இந்த necklace உனக்கு எடுப்பா இருக்கு" னு ஒரு பாராட்டு உண்டா ?
"அடடா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப ருசியாக இருக்கு..இன்னும் கொஞ்சம் போடு " னு இரசித்து சாப்பிட்டது உண்டா?
"ஏங்க, முடி வெட்டிட்டு வந்தா, ஒரு பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க" னு கணவனை இரசித்து உண்டா?
மழையை, பனியை , இனிமையான சங்கீதத்தை, மனைவியின் வெட்கத்தை, பிள்ளைகளின் வெகுளித் தனத்தை, எதையுமே ரசிப்பது இல்லை.
வாழ்க்கை எப்படி இனிக்கும்.
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க படிக்க வேண்டும்.
சில்லென்ற நீர் முகத்தில் படும் போது அந்த சிலிர்ப்பை இரசிக்க வேண்டும்.
shower ஐ திறந்து விட்டு குளிக்கும் போது கண்ணை மூடி, நீர் உடல் எங்கும் தழுவி செல்வதை இரசிக்க வேண்டும்.
சாப்பிடும் போது, அந்த நிறம், மணம் , சுவை என்று அனைத்தையும் இரசிக்க வேண்டும்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்,
"இறைவா, உன் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சுவையே போதும். இதை விட்டு விட்டு சுவர்க்கம், பரமபதம், வைகுண்டம், இதெல்லாம் கிடைத்தாலும் வேண்டேன்" என்கிறார்.
இருப்பதை அனுபவிக்க வேண்டும். இரசிக்க வேண்டும்.
இறைவன் திருநாமத்தை அவர் எப்படி அனுபவிக்கிறார் என்று பாருங்கள்.
பாடல்
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
பொருள்
பச்சைமா மலைபோல்மேனி = பசுமையான மலை போன்ற மேனி
பவளவாய் = பவளம் போல சிவந்த உதடுகள்
கமலச் செங்கண் = தாமரை போல சிவந்த கண்கள்
அச்சுதா = அச்சுதன் என்றால் கை விட்டு விடாதவன் என்று அர்த்தம்
அமர ரேறே = அமரர் + ஏரே = அமரர்களில் ஏரு போன்றவனே
ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் இளைய பிள்ளையே
என்னும் = என்று கூறும்
இச்சுவை = இந்த சுவையை
தவிர = தவிர
யான்போய் = நான் போய்
இந்திர லோக மாளும் = இந்திர லோகம் ஆளும்
அச்சுவை = அந்த சுவையை
பெறினும் வேண்டேன் = பெற்றாலும் அதை வேண்ட மாட்டேன்
அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய ஊரில் உள்ளவனே
இப்போது உள்ளதை இரசிக்கத் தெரியாதவன், மற்றது வந்தால் மட்டும் இரசித்து விடவா போகிறான்?
இருப்பதை இரசி. அனுபவி. அதுவே பெரிய அனுபவம்.
ஸ்வர்கத்துக்குப் போனாலும், அது இல்லையே, இது இல்லையே என்று தான் ஏங்கிக் கொண்டு இருப்போம்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பார்களாம் ஸ்வர்கத்தில். ஒரே ஒரு இரம்பை , ஒரு திலோத்தமை, ஒரு ஊர்வசி, ஒரு காமதேனு, ஒரு கற்பக விருட்சம் இருக்கிறது.
நம் முறை எப்போது வருமோ....
அங்கேயும் பெரிய queue இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஆழ்வார் சொல்கிறார்...இறைவா, உன்னிடம் இருப்பது கூட வேண்டாம், உன்னை பார்க்கக் கூட வேண்டாம் , உன் திருநாமத்தை சொல்கின்ற இந்த சுகம் , இந்த சுவை இருக்கிறதே, அதுவே போதும் என்கிறார்.
இதையே தான் நாவுக்கரசரும் சொல்கிறார்
"இந்த மானிடப் பிறவி எவ்வளவு சுகமானது, சுவையானது. இறைவனது திரு உருவை காணும் பேறு பெற்றதால், "மனித்த பிறவியும் வேண்டுவதே" என்கிறார்"
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிற்றின்பத்தில் இருந்துதான் பேரின்பம் பிறக்க முடியும். சிற்றின்பத்தையே அறியாமல் பேரின்பத்தை எப்படி அறிய முடியும்.
இன்றிலிருந்து வைத்துக் கொள்ளுங்கள்...எதையும் இரசித்துச் செய்வது என்று. மனம் ஒன்றி செய்வது என்று.
காலத்தை வெல்ல, மரணத்தை வெல்ல அதுவே வழி.
மனம் ஒன்றினால் காலம் நின்று போகும். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம். எப்படி மார்க்கண்டேயன் மரணத்தை வென்றான் என்று.
அதுவரை, வாழ்க்கையை இரசிக்கப் படியுங்கள்.
வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும், அனைத்தையும் இரசியுங்கள்.
இறைவன் திருநாமத்தை இரசிப்பதில் அவ்வளவு சுவை இருப்பதைக் கண்டார் தொண்டரடி பொடி ஆழ்வார். நீங்களும் கண்டு பிடியுங்கள் எங்கெல்லாம் எவ்வளவு சுவை இருக்கிறது என்று.
https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_4.html
ஒரு வாரமாக இந்த பச்சைமா மலை போல் மேனி பவளவாய்... ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை.... பாட்டுகளை வாட்ஸ்ஆப்பில் ரொம்ப ரசனையுடன் கேட்டு கொண்டு இருக்கிறேன் .ஆனால் இந்த கண்ணோட்டத்துடன் இல்லை. உங்கள் பதிவை படித்தவுடன் தொண்டரடி பொடி ஆழ்வாரின் பக்திதான மனதை நெகிழ வைக்கிறது.
ReplyDeleteசும்மா கடவுள் கடவுள் என்று உரை எழுதாமல், நம் தினசரி வாழ்கைக்குப் பொருந்தி வரும்படி எழுதிய உரைக்கு நன்றி.
ReplyDelete