கம்ப இராமாயணம் - தவம் செய்த மரவுரி
இராமன் கானகம் செல்லும் போது, பட்டு உடைகளை விடுத்து மரப் பட்டையால் ஆன உடைகளை உடுத்திக் கொண்டு சென்றான்.
சூர்ப்பனகை பார்க்கிறாள்.
அடடா, இவன் இடுப்பில் இந்த மர உரி (உடை) எப்படி ஒட்டி உறவாடுகிறது. இப்படி அவன் இடையில் உறவாட அந்த மர உடை என்ன தவம் செய்ததோ. இராமன் எப்போதும் உடுத்தும் பட்டாடைகள் அவ்வளவு தவம் செய்யவில்லை போல என்று நினைக்கிறாள்.
பாடல்
நல்கலை மதிஉற
வயங்கு நம்பிதன்
எல்கலை திருஅரை
எய்தி ஏமுற,
வற்கலை நோற்றன;
மாசு இலா மணிப்
பொன்கலை நோற்றில
போலுமால்' என்றாள்
பொருள்
நல்கலை = சிறந்த ஒளி பொருந்திய பிறைகளை உடைய (கலை என்றா பிறை )
மதி உற வயங்கு = வெண் மதி போல் விளங்கும் இந்த
நம்பிதன் = சிறந்த ஆண் மகனின். நம்பி என்றால் சிறந்த ஆண்மகன் என்று அர்த்தம். அதற்கு பெண் பால் நங்கை.
எல்கலை = எல்லையற்ற கலைகளை உடைய (சூரியன்) போல் ஒளி விடும்
திருஅரை = உயர்ந்த இடுப்பில்
எய்தி ஏமுற = சென்று இன்பம் அடைய
வற்கலை நோற்றன = மர உடைகள் தவம் நோற்றன
மாசு இலா = குற்றம் இல்லாத
மணிப் = மணி போல் ஒளி வீசும்
பொன்கலை = பொன் போல இருக்கும் பட்டு உடைகள்
நோற்றில = தவம் செய்யவில்லை
போலுமால்' என்றாள் = போல் இருக்கிறது என்றாள்
என்ன இது ரொம்ப அலுப்பாக இருக்கிறதே. சூர்ப்பணகை இராமனை இரசித்தாள் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே? எதுக்கு போட்டு இப்படி ஜவ்வாக இழுக்கிறார் இந்த கம்பர் என்று தோன்றலாம்.
மேலோட்டமாக படித்தால் அப்படித்தான் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் பல புதுப் பொருள்கள் தோன்றலாம்.
குடும்பத்தில் சில சமயம் நாம் செய்யாத தவறுக்காக துன்பப் பட நேரிடலாம். பெற்றோர்களுக்கு ஒரு பிள்ளை மேல் கொஞ்சம் அதிகமாக அன்பு இருக்கலாம். அதனால் மற்ற பிள்ளைகள் துன்பப் படலாம்.
மாமியாருக்கு ஒரு மருமகளை கண்டாலே பிடிக்காமல் இருக்கலாம். இன்னொரு மருமகளை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடலாம்.
நாம் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும் போதும் நம் மீது பழி விழலாம். நாம் தண்டனை பெற நேரலாம்.
கணவன் மனைவி உறவிலும் இது போன்ற சிக்கல்கள் வரலாம். "நீ அப்படித்தான் சொல்ல" என்று ஒருவர் சொல்ல, "நான் அப்படி சொல்லவில்லை " என்று இன்னொருவர் சொல்ல...சொல்லாத சொல்லுக்கு சண்டை வரலாம்.
என்ன செய்ய வேண்டும் ?
பதிலுக்கு சண்டை போடலாமா ? முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடலாமா? நீதிக்கு போராடலாமா?
தெரியாது.
இராமன் என்ன செய்தான் என்று பார்ப்போம்.
இராஜ்யம் அவனுக்கு வர வேண்டும். அவன்தான் சக்கரவர்த்தி திருமகன். முடி உனக்கு என்று தசரதன் சொல்லி விட்டான், அனைத்து அமைச்சர்கள் முன்னாலும்.
இருந்தும், பெண்டாட்டி பேச்சை கேட்டுக் கொண்டு, இராமனுக்கு நியாயமாக வர வேண்டிய மகுடத்தை பிடுங்கி பரதனிடம் கொடுத்து விட்டான். அது மட்டும் அல்ல, இராமனை காட்டுக்கும் விரட்டி விட்டான்.
இராமன் செய்த தவறு என்ன? ஒன்றும் இல்லை.
குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பம்.
ஒரு தவறும் செய்யாத இராமன் மேல் வந்து விழுந்தது.
ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, 14 ஆண்டுகள் வன வாசம்.
மர உரி.
மறு வார்த்தை பேசாமல் கானகம் போனான்.
குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும். குழப்பங்கள் இருக்கும். நீதி நேர்மை எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அது என்ன நீதி மன்றமா ?
பட்டாடை விடுத்து மர உரி உடுத்து கானகம் போனான்.
குடும்பத்தில் இப்படி சில சமயம் அநீதி நடக்கலாம். பெரியவர்கள் தவறு செய்யலாம். ஒரு மருமகள் அடங்கா பிடாரியாக இருக்கலாம். மாமியார் கொஞ்சம் தாடகை சாயலில் இருக்கலாம்.
அனுசரித்துத்தான் போக வேண்டும்.
எவ்வளவு தூரம் அனுசரிக்க வேண்டும் என்றால், இராஜ்யம் விட்டு கானகம் போகச் சொன்னாலும், சரி என்று அனுசரித்துக் கொண்டு போக வேண்டும்.
இலக்கியங்கள் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும். நமக்கு கானகம் செல்லும் அளவுக்கு சிக்கல் வராது. கொஞ்சம் விட்டு கொடுக்கத்தான் வேண்டும். அது நியாயமாக இல்லாவிட்டாலும், அது அநீதியாக இருந்தாலும், அது ஒரு தலை பட்சமாக இருந்தாலும்.
சரி, இராமன் போனான். சீதைக்கு என்ன வந்தது. சீதையை யாரும் கானகம் போகச் சொல்லவில்லையே ?
அவள் நினைத்து இருந்தால் " சரி நீங்க போயிட்டு வாங்க நான் உங்களுக்காக 14 வருடம் காத்து இருப்பேன்" என்று சொல்லி இருக்கலாம். இராமன் அப்படித்தான் அவளிடம் சொன்னான்.
சரியோ, தவறோ, கணவன் ஒரு முடிவு எடுத்து விட்டான், அவனுக்கு துணை போவோம் என்று சீதை உடன் சென்றாள்.
"உங்க அம்மாதான், உங்களுக்கு வர வேண்டிய இராஜ்யத்தை தட்டி பிடுங்கிக் கொண்டாள் . நீங்க எதுத்து கேக்க வேண்டியது தானே. உங்க வீரம் எல்லாம் என் கிட்டாதான். தள்ளுங்க. நான் போய் இன்னிக்கு இரண்டுல ஒண்ணு பாத்துட்டு வரேன் " என்று சீதை கிளம்பவில்லை.
ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. ஐயோ, சொத்து போச்சே என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. "உங்கள கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்" என்று ஒப்பாரி வைக்கவில்லை.
"நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு" என்று கிளம்பி விட்டாள் உடனேயே.
குடும்பம் என்பது அப்படி இருந்த காலம்.
இது பாடம்.
சூர்ப்பணகை படலம் தேவை இல்லாத ஒன்றா?
குடும்பம் என்பது அப்படி இருந்த காலம்.என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் முடிந்தவரை சாதாரண விஷயங்களில் சற்று விட்டு கொடுப்பது அனாவசிய சர்ச்சைகளை தவிர்க்கும் என்பது இப்போதும் பொருந்தும்
ReplyDeleteகுடும்பச் சண்டைக்கும், சூர்ப்பனகையின் இரசிப்புக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை.
ReplyDelete