கம்ப இராமாயணம் - தேயும் கற்பினாள்
சூர்ப்பனகை இராமனை காண்கிறாள். கண்டவுடன் காமம் கொழுந்து விட்டு எரிகிறது.
இராவணன் குடும்பத்தைப் பார்ப்போம்.
சூர்பனகைக்கு காமம் தலைக்கு ஏறி நிற்கிறது.
எவ்வளவோ சிறப்புகள் இருந்தாலும், இராவணனுக்கும் காமம் ஒரு சிக்கல் தான்.
கும்பகர்ணன், தூக்கம் மற்றும் சாப்பாட்டு பிரியன்.
வீடணன், தப்பிப் பிறந்தவன் அந்தக் குடும்பத்தில்.
சூர்ப்பனகையின் காமமும், இராவணனின் காமமும் அந்த அரக்க குலத்தையே வேரறுத்தது. எத்தனை தவம், எத்தனை செல்வம், எத்தனை வீரம், எத்தனை புகழ், எவ்வளவு அதிகாரம் ...அத்தனையையும் காமம் என்ற ஒரு குணம் எரித்துத் தீர்த்தது.
அதீத காமம் எவ்வளவு மோசமானது என்று அறிந்து கொள்ளலாம்.
சூர்ப்பனகை மனதில் தோன்றிய இந்த பொருந்தா காமத்தால் அவளின் கற்புக்கு களங்கம் வந்தது. அவள் கற்பு தேய்ந்தது. அதற்கு ஒரு உவமை தேடுகிறான் கம்பன்.
என்ன சொல்லலாம் என்று யோசிக்கிறான் ....நிலவு போல தேய்ந்தது என்று சொல்லலாமா என்று யோசிக்கிறான். இல்லை, நிலவு பின்னால் வளருமே. ஏதேதோ யோசித்து விட்டு கடைசியாக ஒரு உவமை கண்டு பிடிக்கிறான் கம்பன்.
"இல்லை என்று வருபவர்களுக்கு உதவாமல் சேர்த்து வைப்பவன் புகழ் போல தேய்ந்தது அவள் கற்பு" என்று ஒரு உவமை சொல்கிறான்.
கவிச் சக்கரவர்த்தி !
"வானத்தை விடவும், கடலை விடவும் பெரிய அன்பை மனதில் தேக்கி, அந்த அளவு கடந்த பொருந்தா காமத்தால், அறிவு அதில் மூழ்கிப் போக, கேட்பவர்களுக்கு ஒன்று தராமல் பொருளை சேர்த்து வைப்பவன் புகழ் போல தேயும் கற்பை உடைய சூர்ப்பனகை அங்கே வந்தாள்" என்கிறான் கம்பன்.
பாடல்
நீத்தமும் வானமும்
குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக்
குளிப்ப மீக்கொள,
ஏத்தவும், பரிவின் ஒன்று
ஈகலான், பொருள்
காத்தவன், புகழ் எனத்
தேயும் கற்பினாள்.
பொருள்
நீத்தமும் = கடலும்
வானமும் = வானமும்
குறுக = சிறிதாகத் தோன்றும்படி
நெஞ்சிடைக் = மனதில்
கோத்த = சேர்த்த
அன்பு = அன்பானது
உணர்விடைக் குளிப்ப = உணர்ச்சியில் குளிக்க
மீக்கொள = மேலோங்கி நிற்க
ஏத்தவும் = பிறர் புகழவும்
பரிவின் = பரிதாபப் பட்டு
ஒன்று ஈகலான் = ஒன்றும் தராத
பொருள் காத்தவன் = பொருளை கட்டி காத்தவன்
புகழ் எனத் = புகழ் போல
தேயும் கற்பினாள். = தேயும் கற்பினாள்
மனதில் அன்பு, கருணை, பரிதாப உணர்ச்சி எதுவும் இல்லாமல், பொருளை கட்டி காத்தவன் புகழ் போல தேயும் கற்பினாள்.
ஈகை என்பது சிறந்த அறம்.
மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.
என்ன கொடுத்து , என்ன நிறையப் போகிறது. நான் கொஞ்சம் பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்பவனின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது ?
என்றெல்லாம் நாம் நினைக்கலாம்.
நம் தமிழ் இலக்கியம் ஈகை பற்றி மிக மிக விரிவாக சொல்கிறது.
"அறம் செய்ய விரும்பு" என்கிறாள் ஒளவை. முதலில் விரும்பு. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்காதே. அறம் செய்கிறாயோ இல்லையோ, முதலில் செய்ய விரும்பு. விருப்பத்தில் இருந்து செயல் தானே பிறக்கும் என்கிறாள்.
ஐயோ, என்னிடம் நிறைய பணம் இல்லையே என்று நினைக்கிறீர்களா?
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்கிறார் திருமூலர்.
ரொம்ப வேண்டாம்,
இறைவனுக்கு ஒரு பச்சை இலை போதும்...ஒரு வில்வம், ஒரு துளசி....
போகிற வழியில் பசித்து இருக்கும் ஒரு பசு மாட்டுக்கு ஒரு பிடி புல் ...
பெரிய அன்ன தானம் எல்லாம் வேண்டாம்....சாப்பிடும் உணவில் ஒரு கைப்பிடி உணவு ஒரு ஏழைக்கு தர முடியும்தானே
இதெல்லாம் கூட முடியாதா, பரவாயில்லை, மற்றவர்களுக்கு ஒரு இனிய சொல் சொல்லுங்கள். அதுவும் கூட தானம்தான், அறம் தான்.
வேலைக்காரியிடம் ஒரு இனிய சொல். நமக்கு லிப்ட் ல் பட்டன் அழுத்தும் ஆளுக்கு ஒரு இனிய சொல். வீட்டு செக்யூரிட்டி க்கு ஒரு இனிய சொல். கணவனுக்கு,மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, பக்கத்து வீட்டு காரருக்கு என்று யாருக்காவது ஒரு இனிய சொல்லை தானம் செய்யலாம்தானே.
செய்து பாருங்கள், உங்கள் புகழ் எப்படி மேலே போகிறது என்று தெரியும்.
அருணகிரிநாதர் சொல்கிறார்,
சாதாரண அரிசி இருக்கிறது அல்லவா, அது கூட வேண்டாம், நொய் அரிசி என்று இருக்கும். அதாவது உடைந்த அரிசி. அந்த அரிசியை உடைத்து, அதில் ஒரு துணுக்காவது தானம் செய்யுங்கள்
" வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்" என்பார்.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
நொய் அரிசியில் ஒரு சிறு பிளவேனும் வறியவர்களுக்கு தாருங்கள் என்கிறார். அது கூட முடியாதா ?
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றில் எல்லாம் தலை
என்பார் வள்ளுவர்.
பல்லுயிர் என்றால் மனிதர்கள் மட்டும் அல்ல, மற்ற உயிர்களும் அடங்கும்.
காக்கைக்கு சோறு, நாய்க்கு உணவு, புறாவுக்கு கொஞ்சம் தண்ணீர், வாடும் புல்லுக்கு கொஞ்சம் தண்ணீர் என்று எல்லா உயிர்க்கும் என்கிறார்.
இல்லாதை கொடுக்கச் சொல்லவில்லை. நீ உண்ணும் உணவில், கொஞ்சம் கொடு என்கிறார்.
பகுத்து உண்டு ....
தானம் செய்வதால் என்ன பலன் என்று கேட்டால் அருணகிரிநாதர் சொல்கிறார்
"எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது"
ஏழைகளுக்கு கொடுக்கும் தானம் வேறு வடிவில், வேறு எங்காவது கட்டாயம் வந்து சேரும் என்கிறார்.
பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ
"எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட" திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.
இது சத்தியமான வார்த்தை. என் அனுபவத்தில் நான் பல முறை கண்ட, அனுபவித்த வார்த்தை.
எங்காவது வரும், ஏற்பவருக்கு இட்டது.
இருக்கிற பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது கஷ்டமாக இருக்காதா?
கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை சும்மா எப்படி தூக்கிக் கொடுக்க முடியும்?
வள்ளுவர் சொல்கிறார்
கொடுப்பது இன்பமாக இருக்குமாம்.
"ஈந்துவக்கும் இன்பம்" என்பார் வள்ளுவர்.
ஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
கொடுத்துப் பாருங்கள்.
எங்காவது வரும், ஏற்பவருக்கு இட்டது.
https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_8.html
https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_8.html
பணக்கார கஞ்சனின் புகழ் எப்படி நாளாவட்டத்தில் குறையும் என கம்பரே சூர்ப்பனகையை விவரிக்கும் போது சொல்லிவிட்டார். இந்த பாடத்திற்கு உங்கள் விளக்கம் அபாரம்.
ReplyDeleteசூர்ப்பனகைக்கு "கற்பு இருந்தது, பின் தேய்ந்தது" என்பது பொருளோ?
ReplyDeleteபணக்காரனுக்குப் "புகழ் இருந்த்தது, பின் தேய்ந்தது" என்று சொல்ல முடியவில்லையே!
சுமாராகப் புரிகிறது.