ஔவையார் பாடல் - நன்றே
தீயாரைக் காண்பதும், அவர்கள் சொல்வதை கேட்பதும் தீதே, அவரோடு இணங்கி இருப்பதும் தீதே என்றார்.
ஆனால் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத்தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படம், வலை தளங்கள், செய்தித் தாள்கள், என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும், புரட்டும், வஞ்சனையும், கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது.
இதை விட்டால் ஒன்றும் இல்லையே. பின் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு ஔவை தரும் விடை
மனம் சும்மா இருக்காது. எதையவாது பிடித்துக் கொள்ளும் இயல்பு உடையது. அதை அறிந்த ஒளவை சொல்கிறாள்....
(click below to continue reading)
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_21.html
பாடல்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று
பொருள்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே = நல்லவர்களை காண்பதும் நன்றே. நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தொலைக் காட்சியில், வலை தளங்களில் பார்த்தால் கூட போதும்.
நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே = அவர்கள் சொல்வதை கேட்பதும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; = அவர்களுடைய குணங்களை சொல்வதும் நல்லதே
அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று = அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது
அதாவது,
கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பதை விடுத்து நல்லவற்றை பார்க்க வேண்டும்.
எவன் எவனோ பேசுவதை கேட்பதை விட்டு விட்டு, நல்லவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்.
அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பதை விட்டு விட்டு, நல்லவர்களைத் தேடிப் போய் கண்டு அவர்களோடு பேச வேண்டும்.
பார்க்க முடியவில்லையா, பேச முடியவில்லையா, அவர்களின் நல்ல குணத்தையாவது மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இராமன் இப்படி வாழ்ந்தான்.
தர்மன் இப்படிச் செய்தான்.
அரிச்சந்திரன் இப்படி பொய் பேசாமல் இருந்தான் என்று நல்லவர்களின் குணங்களை பேச வேண்டும்.
அப்படிச் செய்வதன் மூலம், நாளடைவில் அந்த குணங்கள் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.
No comments:
Post a Comment